கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள்

Archive for the 'அ) கவிதைகள்' Category

 குழந்தைகளின் மௌனம்

Posted by

 

குழந்தைகளின் கூச்சல்

கூரையைப் பிளக்கிறது

அமைதியாய் இரு

மெல்லப் பேசு

சிறிது வாயை மூடு

என்று அதட்டியபடியே

தொடர்கிறது என் பணி..

 

வீடே அமைதியாய்

வெகுநேரம் நிசப்தமாய்

ஓடியாடும் சப்தமில்லை

வாய்ப்பேச்சும் கேட்கவில்லை

ஆர்ப்பாட்டம் இல்லாமல்

அமைதியாய் என் பிள்ளை

தாங்கவில்லை தாயெனக்கு

ஏன் இப்படி இருக்கின்றாள்

என் பிள்ளைக்கென்ன ஆயிற்று?

காய்ச்சலோ? உடல்வலியோ?

வாய் மூடி அமர்ந்தவளை

வாரித் தூக்கி அணைக்கின்றேன்

கொஞ்சமும் தாளமுடிவதில்லை

குழந்தைகளின் மௌனத்தை.

2 responses so far

இரவல்  பொருட்கள்

Posted by

 

இரவல் பொருளென்றால்?

என்னென்று சொல்லிடவா?

உபயோகம் முடிந்த பின்னே

உரியவர்க்குத் திருப்ப வேண்டும் – இது

புரியாத பலர் செயலால்

பாதிக்கப் பட்டேன் நான்

என்னுடைய பிறந்தநாளில்

எனக்கான பரிசுக்காய்

என்னிடமே பெறப்பட்ட நூறு

எப்பொழுது திரும்பிடும் கூறு?

நண்பரின் நண்பருக்காய்

நண்பர் சொன்ன காரணத்தால்

நான் செலுத்திய கட்டணம்

நண்பா நீ தராததேன்?

உன் நினைவுக்கது வராததேன்?

அப்துல் கலாமின் “அக்கினிச் சிறகுகள்”

புத்தம் புது புத்தகமாய்ப்

புரட்டிப் பார்க்கும் முன்பே

இரவல் வாங்கிச் சென்றவர்தான்

இன்னுமதை திருப்பவில்லை..

எத்தனையோ கதையிருக்கு

எல்லோர்க்கும் இது இருக்கும்

காசென்பது பொருட்டல்ல

கடமை விளையாட்டும் அல்ல

அன்பளிப்பாய் கேட்டிருந்தால்

அகமகிழ்ந்து கொடுத்திருப்பேன்

அப்பொழுதே மறந்திருப்பேன்

இரவலென கேட்டதால்தான்

இதயம் மறக்கவில்லை

நீங்காமல் வந்துசெல்லும்

நினைவிதனை அகற்றிடவே

ஞாபக மறதி வேண்டும்

இரவல் கிடைத்திடுமா?

No responses yet

கேள்வி பதில்

Posted by

 

பதில்கள் வேண்டித்தானே

கேள்விகள் எழுகின்றன?

உண்டு இல்லை என்றுசொல்ல

ஓயாத மௌனம் ஏனோ?

இல்லை என்றே சொல்லிடலாம்

இல்லாத பதிலை விட.

 

 

No responses yet

டாலர் சம்பளம்

Posted by

டாலரிலே சம்பளமென்றால்

டாலரில்தான் செலவும் இங்கே

சொக்கவைக்கும் வீடென்றாலும்

சொகுசாய் வாகனமென்றாலும்

வாடகை, தவணை, வரி, வட்டி

கொடுத்தால்தான் இங்கும் கிட்டும்

பால் தயிர் வாங்கினாலே

பாதி நூறு போயே போச்சு

மளிகை வாங்கச் சென்றாலோ

முழு நூறும் மாயமாச்சு

கடனட்டை கண்ணீரு

“காஸ்ட்கோ”க்கோ முன்னூறு

ஆயர்கலையில் ஆறு பயில

ஆகும்செலவோ ஆறு நூறு

பார்ட்டி வைத்தால் பாதிச் செலவு

பார்க்கப் போனால் மீதிச் செலவு

இழுத்துப் பிடித்துச் சேர்த்துவைத்தால்

இந்தியா ட்ரிப்புக்கு ஏகச் செலவு

அந்தச் செலவு இந்தச் செலவு

அனைத்தும் போக மிஞ்சிய காசில்

எதோவொரு உடைமை வாங்கினால்

ஏகத்துக்கும் சொல்வார்கள்..

அவனுக்கென்ன?

அயல் நாட்டில் வேலை

டாலர் சம்பளம்

அள்ளிக் கொடுப்பார்கள்

வீடென்ன? காரென்ன?

வசதி வாழ்க்கைதான்

எனக்கொன்று கொடுத்தால்

குறைந்தா போவான்?

No responses yet

நினைவஞ்சலி

Posted by

DSCN1729

 

முதலாமாண்டு நினைவஞ்சலி

அன்புள்ள அப்பா,
உன்னுடைய அன்பிற்கு
வாய் பேசத் தெரியாது.
வார்த்தைகள் உரைத்ததில்லை
உள்ளிருக்கும் உள்ளத்தை.

எனக்குப் பிடிக்கும் என்பதாலேயே
எழும் முன்னே காத்திருக்கும்
நீ காத்திருந்து வாங்கி வந்த
இடியாப்பமும், தேங்காய்ப்பாலும்…

காய்ச்சலில் நான் கிடக்க
கசப்பினில் நா தவிக்க
அவசரமாய் வந்திறங்கும்
அலுபுக்காரா பழமெல்லாமும்…

நீ பறித்து வந்த முல்லைப் பூவும்,
நீ படுத்திருந்த ஈசி Chair–ம்
நீ சொல்லித் தந்த சதுரங்கமும்
நாம் விளையாடிய சீட்டுக் கட்டும்,

பேக்கரியும், பன் பட்டர் ஜாமும்,
பப்பாளியும், பாஸந்தியும்
சைக்கிளும், போஸ்ட் ஆபீஸும்
கண்ணாடியும், குரட்டைச் சத்தமும்

உன் ஞாபகத்தைத் தூண்டிச் செல்லும்
ஒவ்வொன்றும் உரக்கச் சொல்லும்
உன் அன்பினை உணர்த்திச் செல்லும்

அன்புள்ள அப்பா,
பறிக்க நீ இல்லாமல் – உதிர்ந்து
தரையில் வாடும் மலர்களைப் போல
இங்கு நாங்களும்…

மறைவு –  29-08-2013

No responses yet

சிப்பியென இமை மூடி..

Posted by

சிப்பியென இமை மூடி

செவ்விதழில் முகை சூடி

சிகை வருடும் பிறை நுதலில்

சிந்தை கவர் கண்ணே

நான் சூல்கொண்ட நன்முத்தே

என் இதழ்சூடும் புன்னகையே

செப்புகிறேன் என் வாக்கை

சிந்தையில் சேர் கண்ணே

மூவிரண்டு வயதில் நீ

முன்னூறு கதை படிப்பாய்

நாலிரண்டு வயதில் நீ

நன்மை பல கற்றிடுவாய்

ஏழிரண்டு வயதில் நீ

ஏற்றங்கள் பெற்றிடுவாய்

எண்ணிரண்டு வயதில் நீ

எழில் நிலவை எட்டிடுவாய்

கண்ணிரண்டு துணைகொண்டு

கசடற நீ உயர்ந்திடுவாய்

எம்மிரண்டு உயிர் கொண்டு

உம்மிரண்டு உயிர் காப்போம்

சிந்திய வார்த்தை யாவும்

சிந்தையிலே உதித்ததல்ல

சத்தியத்தில் ஈன்ற வாக்கு

சத்தியமடி என் கண்ணே

சலனமற்ற துயிலுனக்கு

சலசலக்கும் நெஞ்செனக்கு

சத்தியம் உரைத்துவிட்டேன்

சலனமின்றி காத்திடுவேன்.

4 responses so far

புள்ளிகள்

Posted by

புள்ளிகள்

………………

புள்ளிகள்

தனித்திருக்கின்றன

என்றும் எப்பொழுதும்

இங்கும் அங்குமாய்

கோடுகள் இழுத்தும்

வளைத்தும் சுழித்தும்

வண்ணங்கள் தீட்டியும்

கோலமாய் இட்டும்

பரவிய புள்ளிகளை

பிணைத்து விட்டதாயும்

இணைத்து விட்டதாயும்

இறுமாந்து விடாதீர்கள்

இடியாப்பச் சிக்கலில்

இட்டு நிரப்பினாலும்

சூழலின் சூழலில்

சிக்கித் தவித்தாலும்

உள் அடங்கிய

ஊமைப் புள்ளிகள்

என்றும் என்றென்றும்

தனித்துத் தான்

நிற்கின்றன

3 responses so far

வாழும் முறைமை எது?

Posted by

விழி மூடித் திறக்கும் முன்னே
மூவிரண்டு வயதாம் உனக்கு
பட்டுப் பிள்ளை உன்னை – நான்
பாடாய்ப் படுத்துகின்றேன்
துள்ளி விளையாடும் போதில்
துயில் கொள்ளத் துரத்துகின்றேன்
பஞ்சு போல் உறங்கும் பொழுதோ
பள்ளி செல்ல எழுப்புகின்றேன்
மணியான உன்னைக் கிளப்ப
மணி காட்டிப் பணிகள் சொல்வேன்
உடைமாற்றி தலைசீவி உணவுண்டு
ஒரே நேரம் எத்தனைச் செய்வாய்?
பரபரப்பில் பாலைத் துறந்து
பறந்து போவாய் பேருந்துக்கு
பசிக்குமோ என்னவோ என்று
பரிதவித்துக் காத்துக் கிடப்பேன்..
மயில் போல ஆடுவாயோ
குயில் போல பாடுவாயோ – என
நித்தம் ஒரு கலை பயில
நெடுந்தூரம் அனுப்பு கின்றேன்
உனக்கும் எனக்குமேயான
நேரம்மிகச் சுருங்கிப் போக
உறையாதோ கொஞ்சும் நேரம்?
உள்ளுக்குள் உருகி நின்றேன்
என்னுடன் விளையாடென்று
ஏங்கி நீ கேட்கும் பொழுது
எனக்குமே ஏதோ தோன்றும்
எதற்கு இந்தப் பரபரப்பு?

No responses yet

தீபஒளித் திருநாள்

Posted by

சுட்டு எரிப்பதல்ல தீபம்
சுடர்விட்டு எரிவதுதான் தீபம்
இருளை அழிப்பதல்ல தீபம்
இருளுக்கும் ஒளிதருவது தீபம்
ஒளிர்ந்து ஓய்வதல்ல தீபம்
ஒளி கொடுத்து உயர்வது தீபம்
ஒன்றிலே ஒடுங்குவதல்ல தீபம்
ஓராயிரம் ஒளி தருவது தீபம்

நம் அனைவரது வாழ்விலும் தீபத்தின் ஒளி என்றும் ஒளிரட்டும்.
அதை நாம் இருளுக்கும் எடுத்துச் செல்வோம்.
ஒளி பரவட்டும்.

தீப ஒளித் திருநாள் நல் வாழ்த்துகள்.

2 responses so far

குழந்தைகள்

Posted by

உலகில்
முட்கள் மிகுத்துவிட்டன..

உங்கள் ரோஜாக்களுக்கு
பரிசளியுங்கள்

வாட்களை.

One response so far

« Newer Entries - Older Entries »