கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள்

Archive for October, 2006

ஒரு தேவதை வந்துவிட்டாள்

Posted by

அக்டோபர் 25, 2006

எங்கள் வாழ்வில் இனியதொரு மாற்றம்..

நிவேதனா – இனிய தென்றலாய் பிறந்தாள்

வாழ்த்திய நெஞ்சங்களுக்கு எங்கள் நன்றி

அன்புடன்
கீதா

10 responses so far

பிரிதல்

Posted by

அஷ்டமியா? – ஆகாது
தேய்பிறையா? – கூடாது
இராப்பொழுதா? – வேண்டாமே

எத்தனையோக் காரணங்கள்
தேடித்தேடி எடுத்துவந்தேன்

ஏதோ சரியில்லையென
நித்தம் பயணம் ஒத்திவைத்தேன்

உண்மையிங்கு அதுவல்ல
நிஜத்தை நம் மனமறியும்

எல்லாம் இருந்தபோதும்
பயணிக்க மனம்தான் இல்லை

No responses yet

பஞ்சபூதம் சொல்லும் பாடம் – 3 ( தீ )

Posted by

சேர்கின்ற மாசுகளை தன்னுடனே சேர்த்தெரித்து
ஊர்களிக்க ஜோதியாக ஆகியென்றும் – பார்தனிலே
தீயவற்றைக் காண்கையிலும் ஓய்வுமின்றி தீர்த்தழிக்கும்
தூயநெஞ்சம் கொள்ளசொல்லும் தீ.

விளக்கம்:
தீயானது தன்னுடன் சேரும்/ தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்து மாசுகளையும் தன்னுடன் சேர்த்து எரித்து மாசுகளை அழித்து விடும்.
அது போல மனிதன் தீயின் வடிவமாகி, தன்னுடன் தீய நட்போ / பிறவோ வரும் போது அதனையும் தன்னுடன் சேர்த்து மாசற்றதாக்க வேண்டும்.

One response so far

பஞ்சபூதம் சொல்லும் பாடம் – 2 ( நீர் )

Posted by

எத்தனையோ மாசுகண்டும் மீண்டுமது ஓங்கிநின்றும்
அத்தனையும் தூயதாக்கி தூயவற்றை ஈன்றுநித்தம்
சித்தமலம் சேர்க்குமந்த கோபதாபம் கொன்றுவாழும்
சித்திவழி சொல்லிடுவாள் நீர்.

விளக்கம்:
நீரானது தூய்மையின் வடிவம். ஓராயிரம் முறையும் ஒரு பொருளை மாசுபடுத்தினாலும் நீர் கொண்டு கழுவினால் அந்த பொருளின் மாசு அகன்றுவிடும்.
மனிதன் தன் மனதில் சேரும் கோபம் முதலான மாசுகள் மீண்டும் மீண்டும் தம்மை தாக்கும்போது நீரைப் போல தூய்மைபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு போதும் மனம் தளரக்கூடாது.

No responses yet

பஞ்சபூதம் சொல்லும் பாடம் – 1 ( நிலம் )

Posted by

எத்துனைதான் வெட்டினாலும் ஆழ்குழிகள் தோண்டினாலும்
அத்துனையும் தாங்கிநின்று பேருவகை எய்திநிந்தன்
சித்தமதில் சிக்குகின்ற வேதனைகள் தாங்கிவாழும்
புத்திசொல்வாள் பூவை நிலம்.

விளக்கம்:
பூமியானது தன்னை எத்தனைதான் வெட்டினாலும், குழிகள் தோண்டினாலும் பொறுத்துக் கொள்வதோடல்லாமல் தன்னை வெட்டுபவரையும் தாங்கி பூமாதேவியென்னும் பெருமை பெற்று நிற்கும்.
அது போல மனிதன் தனக்கு நேரும் துன்பம், சோதனை ஆகியவற்றை கண்டு துவளாமல்,வேதனைப்படாமல், தன்னிலைமாறாமல் அனைத்தையும் தாங்கிக்கொண்டு, வாழும் வழி அறிந்து, வாழ்தல் வேண்டும்.

No responses yet

கனவுலகம்

Posted by

கனவுலகில் காண்பதுவோ கற்பனைப் பூக்கள்
நனவுலகோ முட்களுடன் நித்தம் – நனவின்
மனவுலகில் மங்கையிவள் ஏற்றிடும் தீபம்
கனவென்றா கும்முன்னே காண்.

விளக்கம்:
கனவில், கற்பனையில் நாம் காண்பது இனிப்பான மனதிற்கு உவகை தரும் நிகழ்வுகளை. ஆனால் நிஜம் அதற்கு அப்பாற்பட்டது. நிஜம் எப்பொழுதும் நமக்கு பூக்களாக இருப்பதில்லை முட்களாக தைக்கவும் செய்யும்.
ஒரு மங்கை தன் கற்பனையில் தன் தலைவனுக்கு மாலை சூட்டி மகிழ்கிறாள். அந்த மகிழ்ச்சி பொய் என்று ஆகும் முன்னர் தன்னைக் காண தன் தலைவனை அழைக்கிறாள்.

கனவுலகம் – கற்பனை/கனவு
நனவுலகம் – நிஜம்
மனவுலகம் – மனதில் நினைக்கும் நினைவு

தலைவன் – இறைவன் எனவும் பொருள் படும்

3 responses so far

நாய்ப்பொழப்பு

Posted by

அலுக்காமல் படிகள் ஏறி
அலுவலகக் கதவு தட்டி
நயமாக கதைகள் சொல்லி
நம்பியிதை வாங்கும் என்றால்
வேலைகளை விட்டு விட்டு
கதைமுழுதும் கேட்டபின்னர்
கதவின் வழி காட்டிடுவர்..
இதுவேணும் பரவாயில்லை..

சரளமான ஆங்கிலத்தில்
சடுதியிலே பேசக்கண்டு
நடுக்கமுற்று இன்னும்சிலர்
யாசகனைத் துரத்துதலாய்
வாசலிலே நிற்கவைத்து
வந்தவழி அனுப்பிடுவர்
இதுவேணும் பரவாயில்லை

வீதியிலே அலைந்ததாலோ?
பேசிப் பேசித் திரிந்ததாலோ?
கலக்கமுற்று இன்னும்சிலர்
வாசலிலே எழுதிவைப்பர்
“நாய்கள் ஜாக்கிரதை”
&
“சேல்ஸ்மேன் நாட் அலவுட்”

4 responses so far

மொபைல் மனிதர்கள்

Posted by

ஓயவே மாட்டேனென்று
நொடிக்கொரு முறை
சினுங்கிக் கொள்ளு(ல்லு)ம்
மொபைல் போன்கள்..
வெளி தேசத்திற்கும்
அடுத்த வீட்டிற்கும்
மேல் மாடிக்கும்
சமயத்தில்.. அருகிருந்தும்
அடையாளம் காணாதவர்க்கும்
இங்கிருந்து அங்கும்
அங்கிருந்து இங்குமாய்
ஓயாத அழைப்புக்கள்..
ஆனாலும் நேரமில்லை
வெகுநேரம் அருகமர்ந்து
ஆவலுடன் காத்திருக்கும்
குடும்பத்தினரிடம் பேசுதற்கு

No responses yet

முதலெழுத்து..

Posted by

கருவான நாள்முதல்
கண்ணெனக் காத்தவள்
உருவாக்கி என்னையும்
உவகையோடு பார்த்தவள்
வலிகளை மட்டுமே
வாழ்நாளில் கண்டவள்
இத்தனைப் பெருமையும்
எந்தன் அன்னைக்கே
முதலெழுத்து சூட்டுதற்கு
தந்தை பெயர் மட்டும்
கேட்பது ஏன்?

3 responses so far

அவரவர் உலகம்

Posted by

உலகையே சுமப்பதுபோல்
பையினைத் தலையில் சுமந்தபடி
வீதிதோறும் உலவிக்கொண்டிருக்கும்
விந்தையான ஒரு பெண்மணி..

வியாழக் கிழமை தோறும்
விதிபோலத் தவறிடாமல்
‘முருகா’ என்று அழைத்தபடி
யாசகம் கேட்கும் ஒரு தாத்தா..

ஒய்ந்த கால்களின் உதவியின்றி
உடைந்து போன சக்கரங்களை
கைகளின் உதவியில் ஓட்டியபடி
ஓயாமல் பயணிக்கும் தாத்தா..

எங்கு போவர்? என்ன செய்வர்?
இவர்களின் உலகத்தில் ஒரேநாள்
சஞ்சரிக்க எனக்கும் ஆசைதான்
ஆனாலும் தடுக்கிறது என் உலகம்..

One response so far

Older Entries »