கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள்

Archive for April, 2008

புத்தகம் வாசித்தேன் – சிறப்புச் சிறுகதைகள்

Posted by

தலைப்பு – புத்தம் புதிய சிறப்புச் சிறுகதைகள்
விகடன் பிரசுரம்
வகை – சிறுகதைகள்

சமீபத்துல படிச்ச புத்தகங்கள்-ல உடனடியா குறிப்பிடவேண்டியது இந்த சிறுகதைத் தொகுப்பு. பதினைந்து கதைகள் இருக்கு, ஒவ்வொன்னும் ஒவ்வொரு எழுத்தாளர்கள் எழுதினது.

இதுல எனக்கு ரொம்பவும் பிடிச்சது இரா. முருகன் எழுதின இருபத்துநாலு பெருக்கல் ஏழு (24 x 7) . கம்ப்யூட்டர் கம்பெனியில வேலை வேலைன்னு எப்படி மக்களை சக்கையா பிழிஞ்சி எடுக்கிறாங்கன்னு ரொம்ப அழகா சொல்லி இருக்காரு.

சீனியர் மேனேஜர் பதவி இருந்தாலும், கம்பெனிக்கு ஆர்டர் பிடிக்கலையின்னா மேலிடத்துலருந்து என்னமாதிரியெல்லாம் அழுத்தம் கொடுப்பாங்க… எப்படிப்பட்ட அலட்சியங்களையெல்லாம் சந்திக்கணும் (முகம் துடைக்க டாய்லெட் டிஸ்யூ..)..

“டெலிவிஷன் பெட்டிக்குள்ள இருந்து நாலைந்து பேர் இறங்கி வராங்க…” ” டியூப்லைட் லருந்து ஆட்கள் இறங்கி வராங்க..” இப்படி உளரும் ஆளைப்பார்த்து முதல்ல சிரிப்பா வந்தாலும், இரவு பகல் பார்க்காம கண்ணாடிப்பெட்டிக்குள்ள இருந்து இருந்து அவங்க மனநிலை எந்த அளவுக்கு பாதிக்கும்னு யோசிக்க வைக்கிறார். மொத்தத்துல எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

அடுத்ததா நல்லா இருக்கிறது
எஸ்.இராமகிருஷ்ணன் எழுதிய உதிரிப் பொய்கள்,
(மகனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டுவதற்காக வீட்டுவேலை பார்க்குமிடங்களில் வெவ்வேறு பொய் சொல்லும் அம்மா – கடைசி வரில இருக்கு கதை )

பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதின நல்லதோர் வீணை,
(திருமண வாழ்க்கையைப் பறிகொடுத்துவிட்டு நிற்கும் பள்ளி வாத்தியாரின் மகள், இராஜசேகரன் காதலை சொல்லி இருக்க வேண்டுமோ என்று ஏங்கும் நண்பனுடன் நாமும் ஏங்குவோம் )

ஐ ரா சுந்தரேசன் எழுதின பாலத்துக்கு அடியில் பகவத் கீதை,
(எந்தக் காரியத்தையும் இறைவன் தொண்டாக அர்ப்பணமாகச் செய்யலாம். துப்புரவு தொழிலும் சேர்த்துத்தான்)

ஐஸ்வர்யன் எழுதின வலி சூழ் வாழ்வு,
(திருநங்கையாக மாற விழைந்த ஒரு மாணவன் தன் ஆசிரியரின் முயற்சியால், மனவலிமையால் மீண்டு வருவது)

அனுராதா ரமணன் எழுதின அகிலம்
(என்ன சொல்றது.. படிச்சுப்பாருங்க )

….மற்ற கதைகளும் படிக்கலாம்

No responses yet

கண்ணாமூச்சி..

Posted by

ஒளிந்திருப்பது நிவிக்குட்டி

நீ வழக்கமாக ஒளியுமிடம்
தெரியாதா எனக்கு??
ஆனாலும்…
வீடு முழுதும்
தேடி அலைவேன்..
‘த்த்தோ நிமி’
என்று தலைக்காட்டி
நீ சிரிக்கும்
அழகில் கரைய..

oOo

சும்மாவேனும்
கையில் முகம்புதைத்து
அழுதுகொண்டிருப்பேன்
‘அம்மா’ என்றணைத்தபடி
என் முகம்நோக்கும்
உன் அழகுவிழிகளின்
அன்பொளியில் நனைய..

One response so far

ஒரு தாயின் புலம்பல்..(உயிர்க்கொல்லியா தடுப்பூசி)

Posted by

பிஞ்சுகள்

புள்ள உசுர காக்கத்தானே
தடுப்பு ஊசி போட வந்தேன்..
உசுரையே கொன்னுப்போட்டா
எங்க போயி முறையிடுவேன்..
பூவப்போல சிரிச்ச புள்ள
துவண்டு மேல சரிஞ்சதய்யா..
மழலை பேசும் வாயிலெல்லாம்
நுரை ததும்பி வழிந்ததய்யா..
தத்தித்தத்தி வந்த புள்ள
தடம் புரண்டு கிடக்குதய்யா..
பெத்த மனம் தாங்கல்லியே
சொல்லிச்சொல்லி மாளலியே
என்ன சாக்கு சொல்லப்போற
யார குத்தம் சொல்லப்போற
எம் புள்ள எனக்கு வேணும்
எப்ப திருப்பித் தரப்போற..

புகைப்படம் : நன்றி தினத்தந்தி

2 responses so far

சாலை விபத்து..

Posted by

சிதறிய கண்ணாடிச் சில்லுகள்

கண்ணாடிச் சில்லுகளுடன்
சிதறிக் கிடப்பது
அவனது கனவுகளும்
அவர்களது வாழ்வின்
அஸ்திவாரமும்…

One response so far

அழகுக்குட்டி நிவிம்மா..

Posted by

பட்டு நிவி

ஏ நிலவே..
வேடிக்கை போதும்
என் செல்ல மகள்
இப்பொழுது தான்
கண்ணயர்ந்தாள்

முகிலிடை மூழ்கிடு..
நின் ஒளிக்கரங்களால்
வருடி வருடி
அவளின் துயில்
கலைத்து விடாதே

ஆசை மிகின்
தென்றலின் துணையொடு
அவ்வப்பொழுது
முகில் விலக்கி
அவள் தூங்கும் அழகை
இரசித்துக் கொண்டிரு
என்னைப் போல்..

10 responses so far

எல்லோரும் இப்படித்தானோ [2]

Posted by

chocolate flower

கொத்துக் கொத்தாய்ப் பூக்கள்
சிதைக்கப்பட்ட இதழ்களுடன்
சாக்லேட் கண்காட்சி…

7 responses so far

எல்லோரும் இப்படித்தானா

Posted by

அழகுச் செடி

மெய்யோ பொய்யோ
அழகிய செடியின் இலைகள்
நகம் தீண்டிய தழும்பேந்தி…

****************

நண்பர்களே,

நான் கண்ட ஒரு காட்சியையும்,அது என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தையும் வார்த்தைகளில் சிறைபிடிக்க நினைத்தேன்….

கையலம்பும் இடமருகில்
கண்கவர் செடியொன்று
மெய்யோ என்றறிந்திடவே
இலையொன்றை ஸ்பரிசித்தேன்
பாவம் அது….
பல்வேறு நகம் தீண்டி
உடல்முழுதும் தழும்புகளாய்..

இதை ஹைக்கூவாக எழுதவேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதியது மேலேயுள்ள மூன்று வரிக் கவிதை.

எப்படி இருக்கிறது? .. வேறு எப்படி எழுதலாம்? சொல்லுங்களேன்.

22 responses so far

தலைக்கு மேல டண் டணா டண் டண்

Posted by

மனசுக்குள்ள உட்கார்ந்து மணி அடிக்கலாம் ஆனா தலைக்கு மேல டமாரம் அடிக்கலாமா?? அடிக்கிறாங்களே..

நாங்க வசிக்கும் குடியிருப்பின் மேல் மாடிக்கு புதுசா ஒரு குடும்பம் வந்திருக்காங்க. அவரு , அவர் காதலி, அந்தம்மாவோட குழந்தை. இவர் பையன் இரண்டு வாரத்துக்கு ஒருமுறை வந்து பார்த்துட்டு போவானாம். அதைப்பத்தியெல்லாம் கவலை இல்லிங்க.. என் பிரச்சனையெல்லாம் வீடே கடகடக்க அவங்க கேட்கிற சவுண்ண்ண்டு மியூசிக்தாங்க.

இங்க எல்லாமே மரத்துனால செஞ்சதுதான் வீட்டின் தளம் உட்பட, அதனால மாடியில யாராவது சந்தோஷத்துல துள்ளி குதிச்சாக்கா நம்ம இதயமும் துள்ளிக் குதிக்குது. போதாக்குறைக்கு குழந்தை தூங்க ஆரம்பிச்சிட்டா கேக்கவே வேண்டாம், நம்ம வீட்டுக்குள்ள ஊசி விழும் அமைதியை (Pin Drop Silence?) நான் கடை பிடிக்க மேல “டண் டணா டண் டண்ணு”ண்ணு ஆரம்பிச்சிருவாங்க. என் மண்டைக்குள்ளயும் வீட்டுக்குள்ளயும் எல்லாமே அதிர ஆரம்பிக்கும். எப்படித்தான் கஷ்டப்பட்டு காதை மூடிமூடி வச்சாலும் குழந்தையும் எழுந்து முழிச்சி முழிச்சி பார்க்கும் எங்கடா சத்தம் மட்டும்வருதேன்னு. இந்தக் கச்சேரி இராத்திரியும் நடக்கும் 11.30 மணியான சட்டுன்னு நிறுத்திருவாங்க.. (நம்ம மேல ரொம்ப கரிசனம்)

அப்படித்தான் ஒருநாள் மதியம் இந்த சவுண்ண்டு மியூசிக்குக்கு இடையே குழந்தையை தூங்க வச்சிட்டு யோசிச்சேன்.. என்னதான் செய்றது.. பேசாம வீட்டை காலி செய்துட்டு போயிரலாமன்னு யோசிக்கும்போதே என் அறிவு(?) என்னை இடித்துரைத்தது(?) பிரச்சனையைக் கண்டு ஏதும் தீர்வு யோசிக்காம இப்படி பயந்து ஓடினா எப்படி? அப்படின்னு. ம்ம் அதுவும் சரிதான். சரி என்ன செய்யலாம் மேனேஜ்மெண்டுக்கு ஒரு புகார் கொடுக்கலாமா.. இல்லை மேல் வீட்டுக்கு நேராவே போய் ஒரு குசலம் விசாரிச்சிட்டு அப்படியே அமுக்கி வாசிங்கனு சொல்லிட்டு வந்துரலாமா..ம்ம் இந்த இரண்டு யோசனையுமே எனக்கு கொஞ்சம் பயமா இருந்தது..

கொஞ்சம் நாள் முன்னாடி என் வீட்டுக்காரர் இங்க அமெரிக்காவுல நடந்த நிகழ்ச்சி ஒன்றை சொன்னார் அதாவது ஒரு மனுஷன் சுவருல(wall) ஆணி அடிச்சு ஓட்டை போட முடியலையின்னு தன்னோட துப்பாக்கி எடுத்து சுட்டு ஓட்டை போட்டிருக்கான் அவனோட போதாத காலம் அதுக்குப் பின்னாடி அவனோட மனைவி இருந்து இப்ப இறந்து போயிட்டாங்க…[செய்தி விபரம்] ஹ்ம். ஒவ்வொரு தடவை மேல் வீட்டுல ஆணி அடிக்கும் சத்தம் கேட்டாலே கொஞ்சம் உள்ளுக்குள்ள உதற ஆரம்பிச்சிருச்சி (அவரு கருப்ஸ் வேறயா கண்டிப்பா துப்பாக்கி வச்சிருப்பார் ஹ்ம்) இதுல நான் வேற புகார் கிகார் கொடுத்து “எந்த தையிரியம்..” அப்டின்னு சந்திரிமுகி ஸ்டைல்ல வந்துட்டார்னா.. அப்புறம் என் கதி.

அப்படியே யோசிச்சிட்டே திரும்பிப் பார்த்தேன் சன்னல் பக்கமா ரெண்டு உருவம் மாதிரி தெரிஞ்சது (அய்யோ யோசிச்சதுக்கேவா? ) உத்துப்பார்த்தா ரெண்டு ஸ்பானிஷ் ஆளுங்க ஒரு பெரிய பீரோ மாதிரியான ஒரு பெட்டியை எங்க வீட்டு பின்வாசல் முன்னாடி வச்சிருந்தாங்க. பார்க்குறதுக்கு ஒரு மேடை மாதிரியாவும் இருந்தது. மூளையில ஒரு மின்னல் இதேதூடா வம்பாப்போச்சு நம்ம வீட்டு பின்பக்கமே புல்வெளியில உட்கார்ந்து ‘டண் டணா டண்’ வாசிக்க போராங்களோ? அய்யகோ அப்படின்னு யோசிச்சிட்டே இருக்கும்போது ஒரு வழியா அதை அவங்க மேல் பால்கனிக்கு கயிறு கட்டி தூக்கிட்டாங்க. ஒரு வழியா சமாதானமானப்புறம்தான் ரொம்ப நேரமா மூச்சை விடவே இல்லைன்னு உரைச்சுது அவசரமா ரெண்டு ஸ்கூப் காற்றை ஸ்வாசிச்சேன்.

பின்குறிப்பு: போன வாரம் அந்தம்மாவிடம் என் வீட்டுக்காரர் கேட்டே கேட்டு விட்டார் ‘என்ன நீங்க மியூசீக் பிராக்டீஸ் செய்யறிங்ளா? ‘ன்னு..’ மியூசிக்கா நாங்களா சேச்சே’ என்று சிரிச்சாங்களாம். அதிலிருந்து அதிரும் சத்தம் வருவதில்லை. ஹி ஹி தெரிஞ்சுகிட்ட வரைக்கும் சந்தோஷம் தான்.

5 responses so far