கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள்

Archive for May, 2008

திரையிசையில் கவிதை – வெண்மதி வெண்மதியே

Posted by

இந்தப் பாட்டுல அப்படி என்னதான் இருக்கு? எல்லோர் அடிமனசிலும் எப்போதும் இழையோடும் ஒருவிதமான சோகம் இந்த இசையில இருக்கே அதனாலயா? அழகான கவித்துவமான வரிகளா? என்னன்னு தெரியலை ஆனா எனக்கு இந்தப் பாட்டு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.

வாலியின் வரிகள்

ஜன்னலின் வழி வந்து விழந்தது
மின்னலின் ஒளி அதில் தெரிந்தது
அழகு தேவதை அதிசய முகமே
தீப்பொறி என இரு விழிகளும்
தீக்குச்சி என எனை உறசிட
கோடிப்பூக்களாய் மலர்ந்தது மனமே

அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே
அளந்து பார்க்க பல விழி இல்லையே
என்ன இருந்த போதிலும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே

One response so far

அடுப்பங்கரை

Posted by

மண்ணடுப்பு/கல்லடுப்பு

சுள்ளி பொறுக்கி வெறகு வெட்டி
தென்ன மட்டய காயவச்சி
வெறக நல்லா பொளந்துவச்சி
அடுப்பில் நுழைச்சி பத்தவச்சி
எண்ணை ஊத்தி எரியவச்சி
மண் சட்டிய ஏத்தி வச்சி
ஊதி ஊதி இருமி இருமி
வறட்டி புகைய விரட்டி விரட்டி
கண்ணைக் கசக்கி வாயப்பொத்தி
அல்லும் பகலும் அனலில் வெந்து
அமுதமுதாய்ச் சமைச்சிடுவ..

ரேஷன் கடை வாசல் போயிமண்ணெண்ணை ஸ்டவ்
காலு வலிக்க கியூவில் நின்னு
மண்ணெண்ணை வாங்கி வந்து
பம்ப்பு ஸ்டவ்வில் ஊத்தி ஊத்தி
கையெல்லாம் வலிக்க வலிக்க
பிடியை இழுத்து அடித்து அடித்து
அடைப்பை எடுத்து பத்தவச்சி
இருப்புச் சட்டிய மேல வச்சி
அடுப்புச் சத்தம் காதை அடைக்க
அடுக்களையில் அருகில் இருந்து
ருசி ருசியா சமைச்சிடுவ…

கேஸ் ஸ்டவ்வு, மைக்ரோ வேவ்வு,நவீன மின்சார அடுப்பு
தணல் அடுப்பு தந்தூரி
மின்சாரம் இயக்கும் அடுப்பு
சூரியனே சமைக்கும் அடுப்பு
அடுக்கடுக்கா அடுப்புகளும்
அடுத்த கட்டம் போயிருச்சி
அழகழகா மாறிடுச்சி
சட்டி பானை கூட்டங்கூட
நான் ஸ்டிக்கா மாறிடிச்சி
எத்தனையோ தெரிஞ்சிரிந்தும்
உன் திறமைய புதைச்சிவச்சி
உன் மகிழ்வ மறைச்சிவச்சி
அடுக்களையில் சமைச்சி சமைச்சி
அதுக்குள்ளே புழங்கி புழுங்கி
உன் உலகே சுருங்கிருச்சி
உன் உசுருகூட கருத்துரிச்சி..

8 responses so far

மலர்வளையம்

Posted by

நினைவஞ்சலி
நினைவஞ்சலி

எப்படியோ நிகழ்ந்துவிடுகிறது
எதிர்பாராக் கொடுமைகள்
கண்ணெதிரே கண்டவுயிர்
கணப்பொழுதில் காலனோடு
விழியோரம் தொக்கிநிற்கும்
விழிநீரும் உணர்த்திச்செல்லும்
வேரினை பிடுங்கிச் சென்ற
வேதனை உரக்கச் சொல்லும்
வலிகொண்ட மனதிற்கு
மருந்தென்ன? மாற்றென்ன?
விழிமூடிக் கிடந்தாலும்
விட்டத்தை முறைத்தாலும்
வார்த்தைகள் விலகிநிற்கும்
வலியினை உணர்த்துதற்கு
வருடங்கள் உருண்டாலும்
வலியின் வாசம் மட்டும்
விழிக்கருவில் வடு போல
விலகாமல் என்றென்றும்..

5 responses so far

அருமை அம்மாவுக்கு..

Posted by

தாயுள்ளம் கொண்ட அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
******

என்ன எழுதுவதம்மாஅம்மா நிவி
எதை எழுத நான்
அம்மா
என்றழைப்பதில்தான்
எத்தனை சுகமெனக்கு..
உன் புடவைத் தலைப்புக்குள்
ஒளிந்து கொண்டிருப்பேனே..
உன் மடிமீது தலைவைத்து
உறங்கிப் போவேனே..
உன் கையால் சோறுண்ண
நடுநிசியில் விழிப்பேனே..
வேலைக்கு நீ சென்றால்கூட
வாசலிலேயே படுத்திருப்பேன்
தெருமுனையில் உன்முகத்தை
காணவேண்டித் தவமிருப்பேன்..
பண்டிகையோ விடுமுறையோ
உனக்கெல்லாம் அடுப்படிதான்
உனக்கெது பிடித்தாலூம்
எனக்கு உண்ணத் தந்திடுவாய்
எனக்கொரு நோயென்றால்
ஊருக்கே தெரிந்துவிடும்
உனக்கொரு நோயென்றால்
உள்ளுக்குள் புதைத்திடுவாய்
உனக்கான துயரங்கள்
யாருக்கும் தெரிந்ததில்லை
நோயுற்ற காலத்திலும்
கடமையில் தவறியதில்லை
அம்மா அப்பா
எனை விட்டு ஒருநாளும்
பிரிந்திருக்க மாட்டாயே
எப்படியம்மா தாங்கினாய்
பல்லாயிரம் மைல் பிரிவை..
உன்னருமை தெரியுமம்மா
பிள்ளையொன்று வந்தபின்பு
இன்னுமின்னும் புரியுதம்மா
அம்மாவாய் ஆகவேண்டி
ஈன்றால் மட்டும் போதுமா
தவம் செய்வேண்டுமம்மா
அம்மா எனும் வார்த்தைக்கு
வாழும் அர்த்தம் நீ
அம்மா.. அன்பின் உருவமே
கனிவூறும் கண்களே
உன் அறிவும் அருளும்
கருணையும் கம்பீரமும்
திடமும் தியாகமும்
சகிப்புத்தன்மையும் சாந்தமும்
பொறுப்பும் பொறுமையும்
மென்மையும் மேன்மையும்
எனக்கு வராதம்மா..
மெச்சுகிறேனம்மா…
வியக்கிறேன் உன்னைக்கண்டு..
அம்மா நிவி அப்பா
அருமை அம்மா..
உன்னைக் கட்டிக்கொண்டு
உன்னருகில் தூங்கி
உன் முகத்தில் விழித்து
உன்னிடம் திட்டுவாங்கி
உன்னிடம் கோபித்து
உன்னுடன் விளையாடி
உன் செல்ல மகளாய்
உன்னுடனே இருக்கவேண்டும்
காத்திருக்கிறேனம்மா…
உன் மகளாய்…

*********

21 responses so far

புத்தகம் வாசித்தேன் – மகாபாரதம் – பாண்டவர்கள் தருமசீலர்களா?

Posted by

தலைப்பு : மகாபாரதம் (எ) வியாசர் விருந்து

எழுதியவர் : ராஜாஜி (எ) சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி

வானதி பதிப்பகம்

ராஜாஜி அவர்கள் எழுதின மகாபாரதம் (எ) வியாசர் விருந்து படிச்சேன். விறுவிறுன்னு என்ன ஒரு நடை.. என்ன ஒரு விவரிப்பு.. காட்சியெல்லாம் கண்முன்னே விரியுது.. எளிமையான தமிழில் எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதப்பட்ட ஓர் அற்புதமான படைப்பு.

புத்தகத்தை படிச்சு முடிச்சதுமே எனக்கு தோன்றின சில கருத்துக்கள் இங்கே..

பாண்டவர்கள் ஒன்றும் அவ்வளவு தரும சீலர்கள் இல்லை

யுத்தக் களத்தில் அவர்கள் மற்ற வீராதிவீரர்களை ஜெயித்ததெல்லாம் கிருஷ்ணனின் சூழ்ச்சியாலும், நேர்மையற்ற போர் முறைகளாலும், போர் தர்மத்தை மீறியதாலும்தான்.

அர்ச்சுனனின் செயல்கள்

பிதாமகர் பீஷ்மர் – ‘ஒரு பெண்ணை எதிர்த்துப் போர் புரியமாட்டேன்’ என்ற உறுதியுடைய பீஷ்மரை, பெண் ஜன்மமான சிகண்டியை முன்னால் வைத்துக்கொண்டு வீழ்த்தினான் அர்ச்சுனன்.

ஜயத்ரதன் (சிந்து தேசத்து அரசன் ) – தன் மகன் அபிமன்யுவைக் கொன்ற ஜயத்ரதனை அடுத்த சூரிய அஸ்தமனத்திற்குள் வதம் செய்வேன் என்று பிரதிக்ஞை எடுத்திருப்பான் அர்ச்சுனன்.

மறுநாள் சூரியன் அஸ்தமனமாவதற்கு சற்றுநேரம் முன்பே தனது மாயையால் இருள் உண்டாக்கினான் கிருஷ்ணன். சூரியன் அஸ்தமித்துவிட்டான் என்று மகிழ்ந்து நின்றிருந்த ஜயத்ரதனை அம்பிட்டு வீழ்த்தினான் அர்ச்சுனன்.

கர்ணன்– மண்ணில் பதிந்து விட்டிருந்த தேர்ச்சக்கரத்தைத் தூக்கிக் கொண்டிருந்த சமயத்தில், யுத்த தர்மத்திற்கு புறம்பாக கர்ணனை வீழ்த்தினான் அர்ச்சுனன்.
[கர்ணன் வீரன்தான் ஆனால் அவனே சில சமயங்களில் புறமுதுகிட்டு ஓடி இருக்கிறான், துரியோதனனையே தனியே விட்டு. ]

தருமரின் செயல்கள்

துரோணாச்சாரியார்பீமசேனன் சொல்வது உண்மையா? என் மகன் அஸ்வத்தாமன் இறந்தது உண்மைதானா? என்று சத்திய சீலர் தருமரிடம் வினவினார் துரோணர்.
தருமன் சொன்ன பதில் “அஸ்வத்தாமன் இறந்தது உண்மை.
[உண்மையில் இறந்தது “அஸ்வத்தாமன் என்கிற யானை“. ]தருமனும் பொய் சொன்னான்.
துக்கம் மேலிட ரதத்தில் அமர்ந்து யோகநிஷ்டையில் ஆழ்ந்திருக்கும் சமயம் பார்த்து திருஷ்டத்யும்னன் துரோணரின் ரதத்தில் ஏறி அவர் தலையைத் துண்டித்தான்.

முன்பு வனவாசத்தில் இருக்கும்போது நச்சுப்பொய்கையில் நீர் அருந்தி தருமரின் நான்கு தம்பிமார்களும் உயிரிழந்தனர். அங்கு வந்த யக்ஷனின் கேள்விகளுக்கு விடைகூறி பின்னர் தம்பி நகுலனை உயிருடன் தரக் கேட்டான். குந்திக்கு தான் ஒருவனும், மாத்ரிக்கு நகுலன் ஒருவனும் உயிருடன் இருந்தால் சமமாக இருக்கும் என்று தர்மம் சொன்னவன் காந்தாரியின் நூறு புத்திரர்களில் ஒருவரைக்கூட உயிருடன் விடாதது எந்த விதத்தில் தர்மமாகும்? காந்தாரியும் தாய்தானே?

பீமனின் செயல்கள்

துரியோதனன் – நாள் முழுதும் போர் புரிந்து ஓய்ந்துபோய், காயமுற்று, கவசமில்லாமல் இருந்த துரியோதனனை கதாயுத போருக்கு அழைத்தான் பீமசேனன், அதுமட்டுமல்லாமல் கதாயுத போர் சாஸ்திரத்திற்கு விரோதமாக துரியோதனனின் நாபிக்கு கீழ் (தொடையில்) அடித்து வீழ்த்தினான்.

திருதராஷ்டிரன்,காந்தாரி – புத்திரர்களை இழந்த சோகத்தில் இருக்கும் திருதராஷ்டிரனை மேலும் மேலும் தன் சுடுசொற்களால் குத்தி மனதைப் புண்படுத்தினான் பீமசேனன். இதனால் அவர் தன் மனைவி காந்தாரியுடன் வனவாசம் சென்றார், உடன் குந்திதேவியும் சென்றார்.

பஞ்ச பாண்டவர்களைச் சார்ந்தவர்களின் செயல்கள்

பூரிசிரவசு – துண்டிக்கப்பட்ட கையுடன் யோக நிலையில் இருந்தவனை வெட்டிக் கொன்றான் சாத்யகி.

முடிவாக நான் சொல்றது என்னன்னா

இதுபோல பல சமய சந்தர்ப்பங்களில் பாண்டவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் தருமத்துக்கு புறம்பாகவும், நேர்மையில்லாமலும், மனிதத்தன்மையற்றும், பிறர் மனதை புண்படுத்தியும், சூழ்ச்சியுடனும் செயல்பட்டனர். இப்படி இருக்க இவர்களை மட்டும் கொண்டாடுவது ஏன்?

என்னதான் சூழ்ச்சியால் சூதாடுவதற்கு வரவழைக்கப்பட்டாலும் மதியிழந்து மனைவியையும் தம்பிமார்களையும் சூதாட்டத்தில் தோற்றது யார் குற்றம்?

என்னைப் பொறுத்தவரையில் துரியோதனன் மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாதவன். இராஜ்ஜிய பதவியை அடைய பல விதங்களில் முயற்சி செய்தான்.. பாண்டவர்களுக்கு துன்பமிழைத்தான்.. ஆனாலும் யுத்தக்களத்தில் பாண்டவர்கள் போலல்லாமல் சுத்த வீரானாகவே நடந்துகொண்டான்.

நட்புக்கு இலக்கணமானவன். போர்க்களத்தில் நண்பன் கர்ணனுக்கு துணைபுரியவேண்டி தன் தம்பிகளை கொத்துக் கொத்தாக இழந்தவன்.

ஓய்ந்திருந்த போதும் பீமசேனன் போருக்கழைத்தவுடன் போர் தர்மத்திற்கிணங்க போரிட்டவன். ஷத்ரியர்கள் விரும்பும் வீர சுவர்க்கம் அடைந்தவன்.

மீண்டும் சொல்கிறேன் பாண்டவர்கள் ஒன்றும் தர்ம சீலர்கள் இல்லை

23 responses so far

திரையிசையில் கவிதை

Posted by

“வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒருநாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்..”

-கவிப்பேரரசு வைரமுத்து

இது கவிப்பேரரசு வைரமுத்துவின் முதல் திரைப்பாடல் என்று நினைக்கிறேன் (தவறென்றால் தெரிவிக்கவும்..)

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களுள் முதன்மையானது இந்தப் பாடல் அதிலும் இந்த வரிகள் எனக்காகவே எழுதப்பட்டதோ என்று அவ்வப்பொழுது நினைப்பதுண்டு. மொட்டைமாடியில் படுத்துக்கொண்டு,விண்மீன்களுடன் விளையாடியபடி அவ்வப்பொழுது உயரத்தில் வெளிச்சப்புள்ளியாக பறந்துபோகும் வானவூர்தியை பார்த்துக்கொண்டிருப்பதில் எனக்கு அலாதி பிரியம் உண்டு..

அவ்வப்பொழுது திரையிசைப் பாடல்களில் எனக்குப் பிடித்த சில வரிகளை இந்தப் பிரிவில் பதிந்து வைக்க விருப்பம்.

சந்திப்போம்..

8 responses so far

கோக்

Posted by

அனுதினமும் உறிஞ்சியதால்
காலியானது
நிலத்தடி நீர்

[இதுவும் மீள் பதிவு..2 வருடம் முன்பு எழுதினது. அப்போ கோக்/தண்ணீர் பிரச்சனை ரொம்ப பெரிசா இருந்தது.
என் கவிதைகள் சிலது அழிஞ்சிடுச்சிங்க.. நியாபகம் இருக்கிறதை மறுபடி போட்றேன்]

No responses yet

கூகுளாண்டவனே சரணம் இண்டர்நெட்டே

Posted by

கூகுளாண்டவனே சரணம் இண்டர்நெட்டே??

சமையல் குறிப்புக்கு சன்னதி நீ
சமயத்தில் பாதைக்கு வழிகாட்டி நீ
புரியாத வார்த்தைக்கு அகராதி நீ
தெரியாத விபரங்கள் தெரிவிப்பாய் நீ

அறியாத ஊருக்கு அட்லசும் நீ
படிக்காத பாஷைக்கு பண்டிதனும் நீ
தளங்களின் புள்ளியியல் நிபுணரும் நீ
மறுமொழி மயக்கத்தின் மாயமும் நீ

உலகிய நட்பினுக்கு வாசலும் நீ
வாசல்வெளி நட்புக்கு தாழ்ப்பாளும் நீ
காதலுக்கு தூதாகச் செல்பவனும் நீ
சாதலுக்கும் பலவழிகள் சொல்பவனும் நீ

அயல்நாட்டில் அன்னைமுகம் காட்டுபவன் நீ
அருகேயே இருப்போரை மறைப்பவனும் நீ
ஊருலக செய்தியெல்லாம் சொல்பவனும் நீ
உள்ளறையில் நிகழுவதை ஒளிப்பவனும் நீ

உலகினையே வீட்டுக்குள் விரித்தவனும் நீ
உனக்குள்ளே என்னுலகை முடக்கியதும் நீ

ஆண்டவன் புகழை அனைவரும் பாட வாரீர்!!!

7 responses so far

தொடரும் தடுப்பூசி மரணங்கள்

Posted by

ஊசியா? உயிர்கொல்லியா?

திருவள்ளூர் 4
திண்டுக்கல் 1
உத்திரபிரதேசம் 2
தர்மபுரி 1
நெல்லை 1
காட்டுமன்னார்கோயில் 1

முடிந்ததா? தொடருமா?
பிஞ்சு உயிரென்ன
துச்சமா உமக்கு
உம்வீட்டில் நிகழ்ந்தால்
உச்சுகொட்டி நிற்பீரா?
கெஞ்சமாட்டீர்
கதறமாட்டீர்
தடுப்பூசி மருந்தினை
தடைசெய்யமாட்டீர்
ஏன் தாமதம்??
போனது யாரோதானே
பிரியாவும் பூஜாவும்
உமக்கென்ன வேண்டும்?
அரசன் மகளென்ன
ஆண்டி மகளென்ன
உயிர் ஒன்றுதானே
பாசம் ஒன்றுதானே
வலி ஒன்றுதானே
புரியாதா உமக்கு?
தடுப்பூசி எதற்காக?
நோய் தடுக்கத்தானே?
ஊசியே உயிர் குடித்தால்
தவறெங்கே இருக்கிறது?
மருந்திலா? உடம்பிலா?
சல்லிசாய் வாங்கி
சும்மாய் கொடுத்தீர்
சுலபமாய்ப் போனது
பிஞ்சு உயிர்..
போதும் கொடுமைகள்
முற்றுப்புள்ளி வை
உயிர்களை மதி
நேர்மையாய் செயல்படு
மருந்தினை தடைசெய்
யாராயிருந்தாலும்
உயிர் ஒன்றுதான்
இன்று அவர்கள்
நாளை…

4 responses so far