கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள்

Archive for November, 2014

பெண்

Posted by

அகிலத்தை அழகாக்கி வைத்தாள் – அவள்
உலகத்தை பழுதின்றி வைப்போம்!!
சாதனைப் பெண்ணிங்கே சிலர்தான் – பலரின்
சிறகிங்கே விரிக்க வழி செய்வோம்!!
ஆணொருவன் கற்புநிலை பிழன்றால் – அதில்
பெண்டிரின் பிழையெங்கே கண்டீர்??
பெண்ணுக்கே உரியதல்ல ஒழுக்கம் – அதை
ஆணுக்கும் கற்பிக்கச் சொல்வீர்!!
பொன்னான நல்லுலகு செய்வோம்!! – அது
பெண்ணுக்கும் உகந்ததாய்ச் செய்வோம்!!

One response so far

இரயில் பயணங்கள்

Posted by

 

 

அதிகாலை நேரத்தில்

அன்றலர்ந்த மலர்போலே

அழகான நிகழ்வுகளில்

அன்றாடப்  பயணங்கள்.

காபியே பகலுணவாய்,

கட்டுச்சோறும் பையுமாய்

இரயில் பிடிக்க ஓடயிலும்

இரசிக்க வைக்கும் பூங்காற்று.

 

கோவில் மணி ஓசைகளும்

கோபுரத்துப் பறவைகளும்

மணம் கமழும் மல்லிகையும்

மனம் தவழும் நல்லிசையும்

காலைக் கருக்கல், அதன்

கவின் மிகு மாதிரியாய்

கண் முன்னே விரியும்

காட்சிகளின் சங்கமங்கள்.

 

விடியலின் சுறுசுறுப்போடும்

சள-சள மனிதர்களோடும்

வளைந்து ஓடிடும் இரயில்கள்

பல சிந்தையைத் தூண்டிடும் நிஜங்கள்.

 

இரயிலின் பயணங்கள் தோறும்

எண்ணிலா எண்ணங்கள் தோன்றும்

எத்தனை மனிதர்கள் இங்கே

எத்தனை மனதுகள் இங்கே

எத்தனை கவலைகள் இங்கே

எத்தனை கனவுகள் இங்கே

பழங்களை விற்கும் சிறுமி

பள்ளியில் கற்கும் சிறுமி

பாட்டாலே பிழைக்கும் ஒருவர்

பாட்டிலில் ஒழிக்கும் ஒருவர்

இடமின்றி தவிக்கும் ஒருவர்

இடமிருந்தும் தொங்கும் ஒருவர்

அலுவலகம் விரைபவர் ஒருவர்

அலுவலின்  களைப்புடன் ஒருவர்

கல்லூரிக் களிப்பினில் ஒருவர்

கலங்கிய பட்டதாரி ஒருவர்

எத்தனை உறவுகள் இங்கே

எத்தனை முடிவுகள் இங்கே

காலையில் உணவகம் இரயில்தான்

களைத்தவர் படுக்கையும் இதுதான்

ஒப்பனை அறையும் இதுதான்

ஓய்ந்தவர் தோழன் இதுதான்

மாலையில் மடப்பள்ளி இதுதான்

மங்கையின் மகிழ்ச்சியும் இதுதான்

 

மனங்களின் சங்கமம் இங்கே

மதங்களின் சங்கமம் இங்கே

மகிழ்ச்சிகள் சங்கமம் இங்கே

நெகிழ்ச்சிகள் சங்கமம் இங்கே

உணர்வுகள் சங்கமம் இங்கே

பகிர்வுகள் சங்கமம் இங்கே

இரயில்தான் இவர்களின் வீடு

என்பதே சிறந்த கோட்பாடு!

 

விடியலைப்போல் நாள்தோறும்

விதம் விதமாய் இரயில்பயணம்

நிலையம் விட்டு அகன்றாலும்

நினைவகத்தில் நிலைத்திருக்கும்

இரயில் பயணங்கள் ஒவ்வொன்றும்

நினைவுகளாய்ச் சங்கமிக்கும்!!!

One response so far

புத்தகம் வாசித்தேன் : கேள்விக்குறி , எழுதியவர்: எஸ்.ராமகிருஷ்ணன், விகடன் பிரசுரம்

Posted by

குழந்தைகள் முதன்முதலில் பேசக் கற்றுக்கொண்டவுடன் தமது கேள்விக்கணைகளை பெற்றோர்களிடம் தான் தொடங்குகின்றனர். பெற்றோர்கள் தானே அவர்களின் முதல் ஆசிரியர்கள்.

“அப்பா ராத்திரியானா இந்த சூரியன் எங்கே போகுது?”

“அம்மா  வானம் ஏன்மா நீலமா இருக்கு?”

“எல்லாருக்கும் ஒரே மாதிரி எலும்புதானே? அப்போ ஏன் வேற வேறமாதிரி இருக்காங்க?

பெற்றோர்கள் சொல்லும் பதில்களில் இருந்து கிளைத்தெழும்புகின்றன மேலும் சில கேள்விகள்.

நம் வாழ்நாள் முழுதும் நாம் சில கேள்விகளை சுமந்து கொண்டே செல்கிறோம்.

சில கேள்விகளுக்கு விடை தேடுவோம், சில கேள்விகளுக்கு “இதற்கெல்லாம் விடையே இல்லை” என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொண்டு விடை-தேடுதலை விட்டுவிடுவோம்.

எஸ்.ராமகிருஷ்ணன் http://sramakrishnan.com , சமகால எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். இலக்கியம், சினிமா, நாடகம், இணையம் என பல்வேறு தளங்களில் தன் பங்களிப்பை அளித்து வருபவர். பல விருதுகளும் பெற்றவர்.

“கேள்விக்குறி” என்கிற இந்த புத்தகம் அவரின் சில கட்டுரைகளின் தொகுப்பாக, விகடன் பதிப்பகத்தாரால் வெளியிடப்படுகிறது. இந்த கட்டுரைகள் மூலமாக, அவர் தனக்கே உரிய பாணியில், சுவையான தகவல்கள், கதைகள், சம்பவங்கள் மூலமாக கேள்விகளுக்கு விடை தேட முற்படுகிறார். அவற்றிலிருந்து சில கேள்விகளும், சிந்தனைகளும்.

—————————————–

“எதுக்காக இவ்வளவு அவசரம்?”

இந்த நூற்றாண்டின் தீர்க்க முடியாத நோய்களில் ஒன்று, அவசரம். இயந்திர பொம்மைகள் போல வாழும் நமது அவசர வாழ்வின் பொருள்தான் என்ன?

ஜென் கதை ஒன்று

 

ஒரு ஜென் துறவி காட்டுக்குள் நின்ற நிலையில் தவம் செய்துகொண்டு இருந்தார்.  பறவைகள் அவரின் தலையிலும் தோளிலும் உட்கார்ந்துகொண்டு பயமின்றி இளைப்பாறிச் சென்றன.  இதனால் அந்தத் துறவியிடம் ஏதோ மாய சக்தி இருக்கிறது என்று நம்பி அவரிடம் சீடர்களாகச் சேர்வதற்கு பலரும் முயற்சி செய்தார்கள்.

ஓர் இளைஞன் அந்தத் துறவியிடம் சென்று, “மனிதர்களைக் கண்டால் பயந்து ஓடும் பறவைகள் உங்களிடம் மட்டும் எப்படி இவ்வளவு நெருக்கமாக இருக்கின்றன?” என்று கேட்டான். அவர் பதில் சொல்லாமல் புன்னகை மட்டுமே செய்தார்.

அங்கேயே இருந்து அவரைப் போல தானும் பறவைகளை வசியப்படுத்த பழக வேண்டியதுதான் என்று முடிவுசெய்த இளைஞன், அவரைப் போலவே நிற்கத் துவங்கினான்.  ஒரு பறவைகூட அவனை நெருங்கி வரவே இல்லை. சில வருடங்கள் அங்கேயே இருந்தும் அவனால் பறவைகளைத் தன் தோளில் அமரச் செய்ய முடியவில்லை.

ஓர் இரவு துறவியிடம், “இதற்கான பதில் தெரியாவிட்டால் இப்போதே ஆற்றில் குதித்த்ச் சாகப் போகிறேன்” என்றான். துறவி சிரித்தபடியே, “ புயலில் சிக்கிய மரத்தைப் போல உன் மனது எப்போதும் மிக வேகமாக அசைந்தபடியே இருக்கிறது. பதற்றம் மற்றும் பொறுமையின்மைதான் உன்னைப் பறவைகளை விட்டு விலக்கி வைத்திருக்கிறது. கூழாங்கல்லைப்போல உள்ளுக்குள் ஈரத்தோடும் வெளியில் சலனமில்லாமலும் இருந்தால், பறவைகள் உன்னை தாமே தேடி வரும் “ என்றார்.

நமது வீட்டில் உள்ளவர்கள், நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள் என்று எவரோடும் நமக்கு இணக்கம் இல்லாத சூழல் உருவானதற்கான காரணமும் இதுதானில்லையா?

———————

“என்ன ஊரு இது, மனுஷன் வாழ்வானா?

“வாய்விட்டு எப்படிங்க கேட்கிறது?

“இந்த காலத்துல யாரை நம்ப முடியுது சொல்லுங்க?”,

“என்னை ஏன் யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க?”

“உங்களை எல்லாம் யாரு கல்யாணம் பண்ணிக்கச் சொன்னது?”

கேள்விகள் கொண்ட அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.

கிடைக்குமிடம் : http://udumalai.com/?prd=kelvikkuri&page=products&id=2128

No responses yet

 குழந்தைகளின் மௌனம்

Posted by

 

குழந்தைகளின் கூச்சல்

கூரையைப் பிளக்கிறது

அமைதியாய் இரு

மெல்லப் பேசு

சிறிது வாயை மூடு

என்று அதட்டியபடியே

தொடர்கிறது என் பணி..

 

வீடே அமைதியாய்

வெகுநேரம் நிசப்தமாய்

ஓடியாடும் சப்தமில்லை

வாய்ப்பேச்சும் கேட்கவில்லை

ஆர்ப்பாட்டம் இல்லாமல்

அமைதியாய் என் பிள்ளை

தாங்கவில்லை தாயெனக்கு

ஏன் இப்படி இருக்கின்றாள்

என் பிள்ளைக்கென்ன ஆயிற்று?

காய்ச்சலோ? உடல்வலியோ?

வாய் மூடி அமர்ந்தவளை

வாரித் தூக்கி அணைக்கின்றேன்

கொஞ்சமும் தாளமுடிவதில்லை

குழந்தைகளின் மௌனத்தை.

2 responses so far

இரவல்  பொருட்கள்

Posted by

 

இரவல் பொருளென்றால்?

என்னென்று சொல்லிடவா?

உபயோகம் முடிந்த பின்னே

உரியவர்க்குத் திருப்ப வேண்டும் – இது

புரியாத பலர் செயலால்

பாதிக்கப் பட்டேன் நான்

என்னுடைய பிறந்தநாளில்

எனக்கான பரிசுக்காய்

என்னிடமே பெறப்பட்ட நூறு

எப்பொழுது திரும்பிடும் கூறு?

நண்பரின் நண்பருக்காய்

நண்பர் சொன்ன காரணத்தால்

நான் செலுத்திய கட்டணம்

நண்பா நீ தராததேன்?

உன் நினைவுக்கது வராததேன்?

அப்துல் கலாமின் “அக்கினிச் சிறகுகள்”

புத்தம் புது புத்தகமாய்ப்

புரட்டிப் பார்க்கும் முன்பே

இரவல் வாங்கிச் சென்றவர்தான்

இன்னுமதை திருப்பவில்லை..

எத்தனையோ கதையிருக்கு

எல்லோர்க்கும் இது இருக்கும்

காசென்பது பொருட்டல்ல

கடமை விளையாட்டும் அல்ல

அன்பளிப்பாய் கேட்டிருந்தால்

அகமகிழ்ந்து கொடுத்திருப்பேன்

அப்பொழுதே மறந்திருப்பேன்

இரவலென கேட்டதால்தான்

இதயம் மறக்கவில்லை

நீங்காமல் வந்துசெல்லும்

நினைவிதனை அகற்றிடவே

ஞாபக மறதி வேண்டும்

இரவல் கிடைத்திடுமா?

No responses yet

கேள்வி பதில்

Posted by

 

பதில்கள் வேண்டித்தானே

கேள்விகள் எழுகின்றன?

உண்டு இல்லை என்றுசொல்ல

ஓயாத மௌனம் ஏனோ?

இல்லை என்றே சொல்லிடலாம்

இல்லாத பதிலை விட.

 

 

No responses yet

டாலர் சம்பளம்

Posted by

டாலரிலே சம்பளமென்றால்

டாலரில்தான் செலவும் இங்கே

சொக்கவைக்கும் வீடென்றாலும்

சொகுசாய் வாகனமென்றாலும்

வாடகை, தவணை, வரி, வட்டி

கொடுத்தால்தான் இங்கும் கிட்டும்

பால் தயிர் வாங்கினாலே

பாதி நூறு போயே போச்சு

மளிகை வாங்கச் சென்றாலோ

முழு நூறும் மாயமாச்சு

கடனட்டை கண்ணீரு

“காஸ்ட்கோ”க்கோ முன்னூறு

ஆயர்கலையில் ஆறு பயில

ஆகும்செலவோ ஆறு நூறு

பார்ட்டி வைத்தால் பாதிச் செலவு

பார்க்கப் போனால் மீதிச் செலவு

இழுத்துப் பிடித்துச் சேர்த்துவைத்தால்

இந்தியா ட்ரிப்புக்கு ஏகச் செலவு

அந்தச் செலவு இந்தச் செலவு

அனைத்தும் போக மிஞ்சிய காசில்

எதோவொரு உடைமை வாங்கினால்

ஏகத்துக்கும் சொல்வார்கள்..

அவனுக்கென்ன?

அயல் நாட்டில் வேலை

டாலர் சம்பளம்

அள்ளிக் கொடுப்பார்கள்

வீடென்ன? காரென்ன?

வசதி வாழ்க்கைதான்

எனக்கொன்று கொடுத்தால்

குறைந்தா போவான்?

No responses yet