கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள்

Archive for November, 2016

உதிரத்தை உரமாக்கும் உழவன்

Posted by

My Tamil poem on a given title for a contest.

உதிரத்தை உரமாக்கும் உழவன்
———————————————————
உதிரத்தை உரமாக்கிடும் – உழவன்
உழைப்புக்கு மதிப்பிங்குண்டோ?
உழவையே தலையென்பவன் – உலகில்
உழலும் நிலை அறிவாருண்டோ?

வான் மழையோ பொய்த்துக் கொல்லும்
வரை அணையோ தடுத்துக் கொள்ளும்
வரவும் செலவான கதையை – இவன்
வீட்டடுப்பு வாகாய்ச் சொல்லும்.

பாதி இடைத்தரகன் பதுக்கிக் கொண்டான்
மீதி நிலக்கிழவன் பிடுங்கிச் சென்றான்
பாங்காய்ப் பன்னாட்டு முதலாளியும்
பெரிதாய்க் கொள்ளைபல அடித்துச் சென்றான்.

மண் வளத்தை மாய்ப்பதற்கே – மாற்று
மலட்டு விதை வாங்கச் செய்தான்
இயற்கை வீரியத்தைக் குலைத்துவிட்டு
செயற்கை இரச உரங்கள் விற்றுச்சென்றான்!
நல்லக் காளைகளை காவு வாங்கி
நலிந்த விந்துகளை விலைக்குத் தந்தான்
நெற்களஞ்சியமாம் தஞ்சை மண்ணை – மீத்தேன்
நஞ்சை அள்ளத் தரிசாக்கினான.

உழுதுண்டு வாழ்ந்த கூட்டம் – இன்று
தொழுதுண்ணும் நிலையைப் பாரீர்!
கழனிக்காடாய்ச் செழித்த மண்ணைக் – கடனால்
கிரையமாக்கும் நிலையைக் காணீர்!

ஊரக ஏர் பூட்டி இறுமாந்தவன்
ஊதியக் கூலியாய் உயிர் தாங்கினான்
வட்டிக் கடனெங்கும் துரத்திச் செல்ல
வாட்டும் இன்னுயிரும் துறந்தோடினான்.

தொழில் நுட்பப் புரட்சி வேண்டாம் – உழவுத்
தொழில் சிறக்கத் தெருட்சி வேண்டும்
தண்ணீர் உறிஞ்சும் ஆலைகள் வேண்டாம்
தங்கத் தாமிரபரணி தழைக்க வேண்டும்
சந்திரனில் வீடு வேண்டாம் – எங்கள்
சந்ததிக்குச் சோறு வேண்டும்
சீஸ் பிட்சாக்கு பெருகும் சந்தை– எங்கள்
சீரகச் சம்பா பெறுதல் வேண்டும்

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகு – பூமி
சுழலும் வரை நினைவில் வேண்டும்.
உதிரத்தை உரமாக்குவோன் – உலகில்
உயர்ந்திங்கே வாழ்தல் வேண்டும்!!!

No responses yet

Posted by

என்
தமிழுணர்வை,
தமிழ்க் கோபத்தை,
தமிழ்ப் பாசத்தை,
தமிழ் கர்வத்தை,
தமிழ் வலியைச் சற்றே
தள்ளிவிட்டுப் பார்க்கிறேன்
எங்கும்..
தவிப்பது உயிர்கள்தாம்
வலிப்பது நெஞ்சம்தாம்
எரிவது வயிறுகள்தாம்
தெரிவது துயரம்தாம்!

~கீதா

******

No responses yet

Posted by

கடினமான நினைவுகள்
காற்றுள்ள பந்துகள்!
ஆழ் மனதுக்குள்
ஆழ அழுத்திவிட்டு,
ஆஹா வென்றேன்! என
இறுமாந்து இருக்கும்முன்
விர்ரென்று எழுந்து எங்கும்
வியாப்பித்துக் கிடக்கின்றன!
~கீதா

No responses yet

Posted by

மழை ஓய்ந்த விடியல்கள்
——————————————
வெயில் உடுத்தாக் கருக்கல்
துயில் எழும்பா மரங்கள்
இலை அசையாக் காற்று
இசை பரப்பாக் குயில்கள்…

கிளை சொட்டும் துளிகள்
துளி தாங்கிய புற்கள்
மரம் சொரிந்த மலர்கள்
மலர் படர்ந்த தடங்கள்…

குருகு பறக்கும் வானம்
மனதைக் கவ்வும் மௌனம்
மேலும் கவிந்த ஞானம்
ஏகாந்தம்…
இனிமை மட்டுமல்ல!

~கீதா

No responses yet

Posted by

என்னென்று சொல்வது நான்?
ஏதென்று சொல்வது நான்?
அனுதினமும் செய்திபார்த்து
கலக்கமுற்றுக் கண்ணோக்கும்
கண்மணிக் குழந்தைக்கு
எதையென்று சொல்வது நான்?
பட்டாய் மலர்ந்த பின்னே
பரவிக் கமழும் மணத்தை,
பிணத்தின் வாடை கொண்டே
பேதையவள் அறியலாமா?
சிட்டாய் வளர்ந்து சீராய்ச்
சிரித்துச் சிறக்கும் முன்னே
அமிலச் சிதறல் கொண்டே
அனைத்தையும் பொசுக்கலாமா?
என்னென்று சொல்வது நான்?
பலாத்காரம் என்றால்
யாதெனக் கேட்குமென்
பிஞ்சுப் பெதும்பைக்கு
எதையென்று சொல்வது நான்?
~கீதா

No responses yet

Posted by

மண்ணில் வீழ்ந்த
மிட்டாய்த் துண்டை
வீணென ஒதுக்காமல்
விட மனமில்லாமல்
ஊதி ஊதி உண்ணும்
குழந்தை போன்றது தான் –

வேதனை கொடுத்தாலும்
வினை பல புரிந்தாலும்
விட்டு விட முடியாமல்
வருந்தி அழுது
மறக்க மறுத்து
மீண்டும் ஒன்றையே நாடும்
அன்பு கொண்ட மனதும்!

~கீதா

No responses yet