கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள்

அடுப்பங்கரை

Filed under அ) கவிதைகள் by

மண்ணடுப்பு/கல்லடுப்பு

சுள்ளி பொறுக்கி வெறகு வெட்டி
தென்ன மட்டய காயவச்சி
வெறக நல்லா பொளந்துவச்சி
அடுப்பில் நுழைச்சி பத்தவச்சி
எண்ணை ஊத்தி எரியவச்சி
மண் சட்டிய ஏத்தி வச்சி
ஊதி ஊதி இருமி இருமி
வறட்டி புகைய விரட்டி விரட்டி
கண்ணைக் கசக்கி வாயப்பொத்தி
அல்லும் பகலும் அனலில் வெந்து
அமுதமுதாய்ச் சமைச்சிடுவ..

ரேஷன் கடை வாசல் போயிமண்ணெண்ணை ஸ்டவ்
காலு வலிக்க கியூவில் நின்னு
மண்ணெண்ணை வாங்கி வந்து
பம்ப்பு ஸ்டவ்வில் ஊத்தி ஊத்தி
கையெல்லாம் வலிக்க வலிக்க
பிடியை இழுத்து அடித்து அடித்து
அடைப்பை எடுத்து பத்தவச்சி
இருப்புச் சட்டிய மேல வச்சி
அடுப்புச் சத்தம் காதை அடைக்க
அடுக்களையில் அருகில் இருந்து
ருசி ருசியா சமைச்சிடுவ…

கேஸ் ஸ்டவ்வு, மைக்ரோ வேவ்வு,நவீன மின்சார அடுப்பு
தணல் அடுப்பு தந்தூரி
மின்சாரம் இயக்கும் அடுப்பு
சூரியனே சமைக்கும் அடுப்பு
அடுக்கடுக்கா அடுப்புகளும்
அடுத்த கட்டம் போயிருச்சி
அழகழகா மாறிடுச்சி
சட்டி பானை கூட்டங்கூட
நான் ஸ்டிக்கா மாறிடிச்சி
எத்தனையோ தெரிஞ்சிரிந்தும்
உன் திறமைய புதைச்சிவச்சி
உன் மகிழ்வ மறைச்சிவச்சி
அடுக்களையில் சமைச்சி சமைச்சி
அதுக்குள்ளே புழங்கி புழுங்கி
உன் உலகே சுருங்கிருச்சி
உன் உசுருகூட கருத்துரிச்சி..

8 responses so far

8 Responses to “அடுப்பங்கரை”

 1. 1 lalitha con 21 May 2008 at 3:07 pm

  என்னவென்று சொல்ல
  எப்படி என்று சொல்ல
  என் மனதில் உள்ளதை
  உம் மனதில் உணர்ந்து
  அழகாய் கவிதையில்
  சுருக்காய் வடித்து
  அனைத்து அம்மாக்களுக்கும்
  அர்ப்பணித்து உயர்த்தி விட்டீர்
  ஓய்வில்லா கைகளுக்கு
  ஒப்பற்ற உயர்வு தந்தீர்
  இன்று ஓய்வின்றி வேலை செய்யும் அம்மாக்கள் படும் அவஸ்தைகள் சொல்லத்தரமன்று.அதையும் சுகமான சுமைகளாக ஏற்று மகிழும் தாயுள்ளம்
  உன்னத இடத்தில் வைத்து வணங்க வேண்டிய ஒன்று . நன்றி கீதா .

 2. 2 கீதாon 21 May 2008 at 4:23 pm

  வணக்கம் லலிதா,

  உங்கள் மனமார்ந்த பாராட்டுக்கு நன்றிகள் பல.

  உங்கள் கவிதைகளை இணையத்தில் படிக்க ஆவலாயுள்ளேன்.

  அன்புடன்
  கீதா

 3. 3 lalitha con 22 May 2008 at 1:33 pm

  வணக்கம் கீதா , விரைவில் அனுப்ப முயற்சிக்கிறேன் . இணையத்தில் இணைய ஒவ்வொரு படியாக எனக்கு எழுதிச் சொல்ல முடியுமா .நானும் முயற்சிக்கிறேன். நன்றி.விரைவில் அனுப்புகிறேன்.

 4. 4 saravon 29 May 2008 at 2:56 pm

  காய்கறி விலையில் பேரம் பேசி
  ஐம்பது பைசா மிச்சம் செய்தும்,
  ‘தண்ணீ கொடு தாயி’ என்றால்
  கெட்டி மோர் தரும் ஈரம்

  ஆயிரம் ஆயிரம் தலைகள் வாங்கி
  அசுரனாக மக்களை ஆண்டிருந்தாலும்
  ‘சதாம் ஹுசேனுக்குத் தூக்கு’ என்றால்
  ஐயோ பாவமெனும் அடிமனதின் ஈரம்.

  அழகழகாய் உருவெடுக்கும்
  ஆயிரம் ஆயிரம் அடுப்புகளும்
  அனல் அனலாய் வீசினாலும்
  காய்ந்திடாது இந்த ஈரம்.
  🙂

 5. 5 கீதாon 29 May 2008 at 11:31 pm

  //அழகழகாய் உருவெடுக்கும்
  ஆயிரம் ஆயிரம் அடுப்புகளும்
  அனல் அனலாய் வீசினாலும்
  காய்ந்திடாது இந்த ஈரம்// அட!! ரொம்ப அருமையா அழகா இருக்குங்க இந்தக் கவிதை. 🙂

 6. 6 சு.சிவாon 04 Jun 2008 at 11:37 am

  நல்ல கவிதை தான். ஆனால் வலிமையில்லை. பெண்ணியம் சார்ந்த கவிதைகள் இன்னமும் வலியையும் கண்ணீரையும் வெளிப்படுத்துவது அவர்களை மேலும் பலகீனமாக்கும். உங்கள் கவிதை அழகாக இருக்கிறது. அழகைவிட கம்பீரமாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

 7. 7 கீதாon 05 Jun 2008 at 11:32 am

  //அழகைவிட கம்பீரமாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.//

  மிக்க நன்றி சிவா. உங்களின் வெளிப்படையான வார்த்தைகள் மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் கருத்தை மனதில் கொள்கிறேன்.

  மீண்டும் வருகவென அன்புடன் அழைக்கிறேன்

  அன்புடன்
  கீதா

 8. 8 k.lankeshon 09 Mar 2009 at 10:44 am

  hi keetha ella kavithaigalum nalla irukku best wishes…. innum nalla elluthunga ok endrum
  k.lankesh
  sooriyan fm.

Trackback URI | Comments RSS

Leave a Reply