இரயில் பயணங்கள்

அ) கவிதைகள்

 

 

அதிகாலை நேரத்தில்

அன்றலர்ந்த மலர்போலே

அழகான நிகழ்வுகளில்

அன்றாடப்  பயணங்கள்.

காபியே பகலுணவாய்,

கட்டுச்சோறும் பையுமாய்

இரயில் பிடிக்க ஓடயிலும்

இரசிக்க வைக்கும் பூங்காற்று.

 

கோவில் மணி ஓசைகளும்

கோபுரத்துப் பறவைகளும்

மணம் கமழும் மல்லிகையும்

மனம் தவழும் நல்லிசையும்

காலைக் கருக்கல், அதன்

கவின் மிகு மாதிரியாய்

கண் முன்னே விரியும்

காட்சிகளின் சங்கமங்கள்.

 

விடியலின் சுறுசுறுப்போடும்

சள-சள மனிதர்களோடும்

வளைந்து ஓடிடும் இரயில்கள்

பல சிந்தையைத் தூண்டிடும் நிஜங்கள்.

 

இரயிலின் பயணங்கள் தோறும்

எண்ணிலா எண்ணங்கள் தோன்றும்

எத்தனை மனிதர்கள் இங்கே

எத்தனை மனதுகள் இங்கே

எத்தனை கவலைகள் இங்கே

எத்தனை கனவுகள் இங்கே

பழங்களை விற்கும் சிறுமி

பள்ளியில் கற்கும் சிறுமி

பாட்டாலே பிழைக்கும் ஒருவர்

பாட்டிலில் ஒழிக்கும் ஒருவர்

இடமின்றி தவிக்கும் ஒருவர்

இடமிருந்தும் தொங்கும் ஒருவர்

அலுவலகம் விரைபவர் ஒருவர்

அலுவலின்  களைப்புடன் ஒருவர்

கல்லூரிக் களிப்பினில் ஒருவர்

கலங்கிய பட்டதாரி ஒருவர்

எத்தனை உறவுகள் இங்கே

எத்தனை முடிவுகள் இங்கே

காலையில் உணவகம் இரயில்தான்

களைத்தவர் படுக்கையும் இதுதான்

ஒப்பனை அறையும் இதுதான்

ஓய்ந்தவர் தோழன் இதுதான்

மாலையில் மடப்பள்ளி இதுதான்

மங்கையின் மகிழ்ச்சியும் இதுதான்

 

மனங்களின் சங்கமம் இங்கே

மதங்களின் சங்கமம் இங்கே

மகிழ்ச்சிகள் சங்கமம் இங்கே

நெகிழ்ச்சிகள் சங்கமம் இங்கே

உணர்வுகள் சங்கமம் இங்கே

பகிர்வுகள் சங்கமம் இங்கே

இரயில்தான் இவர்களின் வீடு

என்பதே சிறந்த கோட்பாடு!

 

விடியலைப்போல் நாள்தோறும்

விதம் விதமாய் இரயில்பயணம்

நிலையம் விட்டு அகன்றாலும்

நினைவகத்தில் நிலைத்திருக்கும்

இரயில் பயணங்கள் ஒவ்வொன்றும்

நினைவுகளாய்ச் சங்கமிக்கும்!!!

1 thought on “இரயில் பயணங்கள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *