கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள்

சொர்க்கம் போக டிக்கெட்

Filed under ஆ) க(வி)தை by

மந்தமான மதியப் பொழுதில்..
மதியும் கொஞ்சம் மயங்கும் பொழுதில்..
இருக்கையில் அமர்ந்து கொண்டு
இருவிழி மூடிக் கொண்டு
சொர்க்கம் யாதென என்னுள்
சொற்போர் நடத்த முனைந்தேன்

சொர்க்கம் என்பதும் நிஜமோ
சொற்களில் வாழ்ந்திடும் கனவோ
பசியும் பிணியும் அங்குண்டோ?
பாழும் பணமும் அங்குண்டோ?
மண்ணுயிர் நீத்திடும் மக்கள்
மாண்டதும் அங்கு செல்வாரோ?

யாதது சொர்க்கம் என்று
யாரிங்கு சொல்லிடுவாரோ?
சட்டென சாலையில் ஏதோ
சலசலப்பெழுவது கேட்டு
வீதியில் எட்டிப் பார்த்தேன்
வீதியில் மக்கள் வெள்ளம்

வெறிச்சோடிக் கிடக்கும் வேளை
விந்தைதான் கண்ட அக்காட்சி
ஆர்வம் மிகுதியில் நானும்
அழைத்து இங்கு விவரம் கேட்டேன்
ஆச்சர்யம் அடைவீர் நீரும்..
அதிசயச் செய்தி கேட்டால்..

ஊரின் எல்லையில் உள்ள
ஊருணி அருகே சென்று
மொட்டையாய் நின்றிருந்த
மோகினிச் சுவரின் மீது
எருக்கம் பாலைக் கொண்டு
எழுதிய பெயருக்கெல்லாம்
சொர்க்கம் போகும் டிக்கெட்
சடுதியில் கிடைக்குதாமாம்

அடடா என்ன செய்தி!!!
அடுத்தென்ன பேச்சு இங்கே
அடுத்த பத்து நொடியில்
அடியேன் அங்கே நின்றேன்

எருக்கம் பாலின் விலையோ
எட்டும் இடத்தில் இல்லை
அடித்து பிடித்து நானும்
அதனை வாங்கிச் சென்றால்
மோகினிச் சுவரில் எங்கும்
மொக்கையன் உரிமை கொண்டாட

அதற்கும் ஒரு விலை கொடுத்து
அழகாய் பெயரும் எழுத..
ஆகா இதென்ன விந்தை..
ஆகாயமார்கமாக ஏதோ
அஞ்சல் அட்டை விழுதே
ஆகா சொர்க்க டிக்கெட்
அடித்தது லக் எனக்கு

ஆர்வமாய் கையில் எடுக்க
யாரோ வெடுக்கென பிடுங்க
ஆத்திரம் மேலிட நானும்
பலங்கொண்டு மேலும் இழுக்க
‘நங்’ எனும் சத்தத்தோடு
ஏதோ தலையினில் பாரம்

அய்யோ தலை மேல் இடியா
நான் என்ன பாவம் செய்தேன்
இருவிழி இருக்க மூடி..
இறைவனை நொந்த நேரம்

‘நீ என்ன பாவம் செய்தாய்
என் சிகையினை இழுத்தது பாவம்’
என்ன!! என் அன்னை குரலா?
அவர் எங்கு வந்தார் இங்கு
யோசித்தவாரே நானும்
விழிகளை திறந்து பார்த்தேன்
இருக்கையில் இருப்பது நானா?
இரு கையில் இருப்பது?
அன்னையின் சிகையா?
அனைத்தும் புரிந்தது இப்போது
புன்னகை விரிய நானும்
அன்னையின் சிகையினை விட்டேன்

ஆனாலும் கொஞ்சம் சோகம்
ஆனது ஆகிப் போச்சு
இன்னும் சிறிது நேரம்
தூக்கத்தில் ஆழ்ந்திருந்தால்
சொர்க்கம் என்ற கனவை
கனவிலேனும் கண்டிருப்பேன்!!!

8 responses so far

8 Responses to “சொர்க்கம் போக டிக்கெட்”

 1. 1 நாமக்கல் சிபிon 07 Dec 2006 at 4:58 am

  நல்ல கவிதையாய் ஒரு கதை கீதா வாழ்த்துக்கள்!.

 2. 2 Thottarayaswamyon 07 Dec 2006 at 9:00 am

  மிக அருமை. வாழ்த்துக்கள்

 3. 3 சரவ்on 08 Dec 2006 at 3:00 pm

  இது கற்பனையா? இல்ல ‘கதையல்ல நிஜம்’-மா? 🙂
  நல்லா இருக்கு!!

 4. 4 அரைபிளேடுon 09 Dec 2006 at 2:25 pm

  சொர்க்கம் ஒண்ணு இருக்குதாம்
  அதுக்கும் டிக்கட் இருக்குதாம்
  கனவு பஸ் ஏறினா
  அதுவும் அங்க போகுதாம்…

  டிரிப்பே ஸ்டார்ட்டு ஆவல. அதுக்குள்ள டிராப் பண்ணிட்டீங்களே..

 5. 5 அருட்பெருங்கோon 10 Dec 2006 at 6:18 am

  சொர்க்க கனவு எனக்கும் அடிக்கடி வருமுங்க :))

  அழகா எழுதியிருக்கீங்க வாழ்த்துக்கள்!!!

 6. 6 REVATHINARASIMHANon 10 Dec 2006 at 12:42 pm

  கீதா ,ஊங்கள் குழந்தைதான் உங்கள் சிகையைப் பிடித்ததொ
  என்று ஒடு கணம் நினைத்தேன்.
  நல்ல வளமான கற்பனை.

 7. 7 இராம. வயிரவன்on 13 Dec 2006 at 8:04 am

  நகைச்சுவையான கற்பனை அழகான கவிதையாக மலர்ந்துள்ளது.

 8. 8 கீதாon 13 Dec 2006 at 1:59 pm

  சிபியண்ணே, thottarayaswamy, சரவ், அரைபிளேடு,அருட்பெருங்கோ, ரேவதி நரசிம்மன், வயிரவன்

  உங்கள் அனைவருக்கும் என் நன்றி.

  இது உண்மையில் ஒரு கனவுதான்.. அங்கங்க கொஞ்சம் சுவையூட்ட கற்பனை கலந்தேன். 🙂

  உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

  அன்புடன்
  கீதா

Trackback URI | Comments RSS

Leave a Reply