கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள்

கேள்வி பதில்

Filed under அ) கவிதைகள் by

 

பதில்கள் வேண்டித்தானே

கேள்விகள் எழுகின்றன?

உண்டு இல்லை என்றுசொல்ல

ஓயாத மௌனம் ஏனோ?

இல்லை என்றே சொல்லிடலாம்

இல்லாத பதிலை விட.

 

 

No responses yet

டாலர் சம்பளம்

Filed under அ) கவிதைகள் by

டாலரிலே சம்பளமென்றால்

டாலரில்தான் செலவும் இங்கே

சொக்கவைக்கும் வீடென்றாலும்

சொகுசாய் வாகனமென்றாலும்

வாடகை, தவணை, வரி, வட்டி

கொடுத்தால்தான் இங்கும் கிட்டும்

பால் தயிர் வாங்கினாலே

பாதி நூறு போயே போச்சு

மளிகை வாங்கச் சென்றாலோ

முழு நூறும் மாயமாச்சு

கடனட்டை கண்ணீரு

“காஸ்ட்கோ”க்கோ முன்னூறு

ஆயர்கலையில் ஆறு பயில

ஆகும்செலவோ ஆறு நூறு

பார்ட்டி வைத்தால் பாதிச் செலவு

பார்க்கப் போனால் மீதிச் செலவு

இழுத்துப் பிடித்துச் சேர்த்துவைத்தால்

இந்தியா ட்ரிப்புக்கு ஏகச் செலவு

அந்தச் செலவு இந்தச் செலவு

அனைத்தும் போக மிஞ்சிய காசில்

எதோவொரு உடைமை வாங்கினால்

ஏகத்துக்கும் சொல்வார்கள்..

அவனுக்கென்ன?

அயல் நாட்டில் வேலை

டாலர் சம்பளம்

அள்ளிக் கொடுப்பார்கள்

வீடென்ன? காரென்ன?

வசதி வாழ்க்கைதான்

எனக்கொன்று கொடுத்தால்

குறைந்தா போவான்?

No responses yet

நினைவஞ்சலி

Filed under அ) கவிதைகள் by

DSCN1729

 

முதலாமாண்டு நினைவஞ்சலி

அன்புள்ள அப்பா,
உன்னுடைய அன்பிற்கு
வாய் பேசத் தெரியாது.
வார்த்தைகள் உரைத்ததில்லை
உள்ளிருக்கும் உள்ளத்தை.

எனக்குப் பிடிக்கும் என்பதாலேயே
எழும் முன்னே காத்திருக்கும்
நீ காத்திருந்து வாங்கி வந்த
இடியாப்பமும், தேங்காய்ப்பாலும்…

காய்ச்சலில் நான் கிடக்க
கசப்பினில் நா தவிக்க
அவசரமாய் வந்திறங்கும்
அலுபுக்காரா பழமெல்லாமும்…

நீ பறித்து வந்த முல்லைப் பூவும்,
நீ படுத்திருந்த ஈசி Chair–ம்
நீ சொல்லித் தந்த சதுரங்கமும்
நாம் விளையாடிய சீட்டுக் கட்டும்,

பேக்கரியும், பன் பட்டர் ஜாமும்,
பப்பாளியும், பாஸந்தியும்
சைக்கிளும், போஸ்ட் ஆபீஸும்
கண்ணாடியும், குரட்டைச் சத்தமும்

உன் ஞாபகத்தைத் தூண்டிச் செல்லும்
ஒவ்வொன்றும் உரக்கச் சொல்லும்
உன் அன்பினை உணர்த்திச் செல்லும்

அன்புள்ள அப்பா,
பறிக்க நீ இல்லாமல் – உதிர்ந்து
தரையில் வாடும் மலர்களைப் போல
இங்கு நாங்களும்…

மறைவு –  29-08-2013

No responses yet

சிப்பியென இமை மூடி..

Filed under அ) கவிதைகள் by

சிப்பியென இமை மூடி

செவ்விதழில் முகை சூடி

சிகை வருடும் பிறை நுதலில்

சிந்தை கவர் கண்ணே

நான் சூல்கொண்ட நன்முத்தே

என் இதழ்சூடும் புன்னகையே

செப்புகிறேன் என் வாக்கை

சிந்தையில் சேர் கண்ணே

மூவிரண்டு வயதில் நீ

முன்னூறு கதை படிப்பாய்

நாலிரண்டு வயதில் நீ

நன்மை பல கற்றிடுவாய்

ஏழிரண்டு வயதில் நீ

ஏற்றங்கள் பெற்றிடுவாய்

எண்ணிரண்டு வயதில் நீ

எழில் நிலவை எட்டிடுவாய்

கண்ணிரண்டு துணைகொண்டு

கசடற நீ உயர்ந்திடுவாய்

எம்மிரண்டு உயிர் கொண்டு

உம்மிரண்டு உயிர் காப்போம்

சிந்திய வார்த்தை யாவும்

சிந்தையிலே உதித்ததல்ல

சத்தியத்தில் ஈன்ற வாக்கு

சத்தியமடி என் கண்ணே

சலனமற்ற துயிலுனக்கு

சலசலக்கும் நெஞ்செனக்கு

சத்தியம் உரைத்துவிட்டேன்

சலனமின்றி காத்திடுவேன்.

4 responses so far

புள்ளிகள்

Filed under அ) கவிதைகள் by

புள்ளிகள்

………………

புள்ளிகள்

தனித்திருக்கின்றன

என்றும் எப்பொழுதும்

இங்கும் அங்குமாய்

கோடுகள் இழுத்தும்

வளைத்தும் சுழித்தும்

வண்ணங்கள் தீட்டியும்

கோலமாய் இட்டும்

பரவிய புள்ளிகளை

பிணைத்து விட்டதாயும்

இணைத்து விட்டதாயும்

இறுமாந்து விடாதீர்கள்

இடியாப்பச் சிக்கலில்

இட்டு நிரப்பினாலும்

சூழலின் சூழலில்

சிக்கித் தவித்தாலும்

உள் அடங்கிய

ஊமைப் புள்ளிகள்

என்றும் என்றென்றும்

தனித்துத் தான்

நிற்கின்றன

3 responses so far

வாழும் முறைமை எது?

Filed under அ) கவிதைகள் by

விழி மூடித் திறக்கும் முன்னே
மூவிரண்டு வயதாம் உனக்கு
பட்டுப் பிள்ளை உன்னை – நான்
பாடாய்ப் படுத்துகின்றேன்
துள்ளி விளையாடும் போதில்
துயில் கொள்ளத் துரத்துகின்றேன்
பஞ்சு போல் உறங்கும் பொழுதோ
பள்ளி செல்ல எழுப்புகின்றேன்
மணியான உன்னைக் கிளப்ப
மணி காட்டிப் பணிகள் சொல்வேன்
உடைமாற்றி தலைசீவி உணவுண்டு
ஒரே நேரம் எத்தனைச் செய்வாய்?
பரபரப்பில் பாலைத் துறந்து
பறந்து போவாய் பேருந்துக்கு
பசிக்குமோ என்னவோ என்று
பரிதவித்துக் காத்துக் கிடப்பேன்..
மயில் போல ஆடுவாயோ
குயில் போல பாடுவாயோ – என
நித்தம் ஒரு கலை பயில
நெடுந்தூரம் அனுப்பு கின்றேன்
உனக்கும் எனக்குமேயான
நேரம்மிகச் சுருங்கிப் போக
உறையாதோ கொஞ்சும் நேரம்?
உள்ளுக்குள் உருகி நின்றேன்
என்னுடன் விளையாடென்று
ஏங்கி நீ கேட்கும் பொழுது
எனக்குமே ஏதோ தோன்றும்
எதற்கு இந்தப் பரபரப்பு?

No responses yet

தீபஒளித் திருநாள்

Filed under அ) கவிதைகள் by

சுட்டு எரிப்பதல்ல தீபம்
சுடர்விட்டு எரிவதுதான் தீபம்
இருளை அழிப்பதல்ல தீபம்
இருளுக்கும் ஒளிதருவது தீபம்
ஒளிர்ந்து ஓய்வதல்ல தீபம்
ஒளி கொடுத்து உயர்வது தீபம்
ஒன்றிலே ஒடுங்குவதல்ல தீபம்
ஓராயிரம் ஒளி தருவது தீபம்

நம் அனைவரது வாழ்விலும் தீபத்தின் ஒளி என்றும் ஒளிரட்டும்.
அதை நாம் இருளுக்கும் எடுத்துச் செல்வோம்.
ஒளி பரவட்டும்.

தீப ஒளித் திருநாள் நல் வாழ்த்துகள்.

2 responses so far

குழந்தைகள்

Filed under அ) கவிதைகள் by

உலகில்
முட்கள் மிகுத்துவிட்டன..

உங்கள் ரோஜாக்களுக்கு
பரிசளியுங்கள்

வாட்களை.

One response so far

எங்கே எனது கவிதை

Filed under அ) கவிதைகள் by

முன்பெல்லாம்..
என்னுள் தோன்றும்
எனக்கான எண்ணங்களை
வண்ணங்கள் சேர்த்து
வார்த்தையில் கோர்த்து
கவிதையாக்கி ரசித்திருப்பேன்

இப்பொழுதெல்லாம்..
சொர்க்கத்தைக் கண்டாலும்
சோர்வுற்று இருந்தாலும்
பகிர்ந்து கொள்ள ஏதுவாய்
உரிய பக்கம் தேடி
“ஃபேஸ்புக்” மென்கடலில்
நீந்திக் கொண்டிருக்கின்றேன்

எங்கே எனது கவிதை?

No responses yet

முற்பகல் செய்யின்..

Filed under அ) கவிதைகள் by

குழந்தைகள் காப்பகம்
விட்டுச்சென்றவர் வசிப்பது
முதியோர் இல்லம்

oOo oOo oOo oOo oOo oOo oOo

அன்று…
கதை கேட்ட உன்னிடம்
கார்டூன் பார் என்றேன்
விளையாட அழைத்தபொழுதோ
வீடியோ கேம் கொடுத்தேன்
தாலாட்டு பாடென்றாய்
டீ.வி பார்த்து துயிலென்றேன்
கட்டி அணைத்தபொழுதும்
கணினியில் மூழ்கிக்கிடந்தேன்
விழிகசியக் காத்திருந்தாய்
வேலையே கதியென்றிருந்தேன்
காலங்கள் உருண்டோடின
இன்று
உதவட்டுமா என்று கேட்டேன்
உனக்கொன்றும் தெரியாதென்றாய்
எப்பொழுது வருவாயென்றேன்
எரிதம் போல் என்னைப் பார்த்தாய்
ஏதேனும் பேசுவாயோ
என நானும் ஏங்கிப் பார்த்தேன்
இயலாத எனக்குத் துணையாய்
இயந்திரங்கள் விட்டுச் சென்றாய்…

3 responses so far

« Newer Entries - Older Entries »