கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள்

Archive for the tag 'அனுபவம்'

பத்துக் காசு

Posted by

உச்சி வெயில் வேளையிலே
செல்லும் சாலை மீதினிலே
ஒளியொன்று எழக் கண்டு
வியப்புடனே அங்கு சென்றேன்
மின்னலின் ஒளி தோற்கும்
மின்னிய பொருளைக் கண்டேன்
அழகிய பத்துக் காசு
சுடர்விடும் பத்துக் காசு
யாரதை விட்டுச் சென்றார்
யாரதை எடுத்துச் செல்வார்
எடுத்திட மனமிருந்தும்
ஏதேதோ தடுத்ததென்னை
குனிந்ததை எடுத்திட்டால்
குறும்பவர் கேலிசெய்வர்
குனிந்ததை எடுக்கலாமா
கோவிலில் சேர்க்கலாமா
அருகினில் இரப்பவர்க்கு
எடுத்ததை அளிக்கலாமா
பலவிதம் எண்ணிக்கொண்டு
பாதையைப் பார்த்த போது
கடந்தே வந்துவிட்டேன்
காசினைக் கண்ட இடத்தை
எண்ணங்கள் விடுத்து நானும்
எட்ட நடை போட்ட வேளை
விழிகளில் வந்து செல்லும்
அழகிய பத்துக் காசு.

2 responses so far

நினைவுச் சுரங்கம்

Posted by

நட்பின் கையொப்பம் தாங்கிய
விலை மதிப்பிலாத ரூபாய் நோட்டு
பரிசென வந்து பாடம்செய்யப்பட்ட
பூக்களின் காய்ந்த துணுக்குகள்
வகுப்புநேரத் தூதனாய் ஆக்கப்பட்ட
நினைவுகள் தாங்கிய ஆஜர்த்தாள்
தளிர் கரத்தால் எழுதிக்கொடுத்த
அக்கா மகளின் அழகுக்கிறுக்கல்
வீதியிலே கண்டெடுத்த காகிதம்
கசங்கியும் கம்பீரமாய் பாரதி
அன்பாய் அண்ணன் அனுப்பிய
சாக்லெட்டின் மிஞ்சிய போர்வை
புத்தகம் அனுப்புமாறு வேண்டி
ஆசிரியர் அனுப்பிய அஞ்சலட்டை
நட்பிற்கு அனுப்பிய பரிசினை
கொண்டுசேர்த்தமைக்கான இரசீது
சுதந்திர தினம்தோறும் பிரியமாய்
சேகரித்துவைத்த தேசியக்கொடிகள்
தொலைத்துவிட்ட தோழி அனுப்பிய
முகவரி அறியமுடியா கடிதம்
சிதறிப்போன நண்பர் குழாமுடன்
சேர்ந்தெடுத்த புகைப்படங்கள்
துவங்கியது ஒழுங்குபடுத்தவாய்த்தான்
புதைந்ததென்னவோ நினைவுச் சுரங்கத்தில்
இன்னும் இன்னும் இனி(ரு)க்கிறது
இவை வெறும் நினைவுகளல்ல
நான் வாழ்ந்துவந்த வாழ்க்கை

No responses yet

தொலைந்த கனவு

Posted by

விளையாட்டாய்க் கோவில் கட்டி
வீடுதோரும் அறிக்கை ஒட்டி
பொத்தி பொத்தி சேர்த்த காசில்
பொங்க வைத்தோம் ஆண்டு தோரும்

எனக்கென ஒரு கூட்டம்
எதிரணியும் ஒரு கூட்டம்
இருவேறு முகிற்குழாமாய்
இடியுடனே வாழ்ந்துவந்தோம்

ஏரியில் மீன் பிடித்து
கேணியில் துளையவிட்டு
உச்சி வெயில் காயும்நேரம்
சூழ்ந்து நின்று ரசித்திருந்தோம்

வாதாம் மரத்தில் ஏறி
வாகாய் ஊஞ்சல் கட்டி
கேளிக்கைப் போட்டிவைத்து
கொட்டைகளைப் பரிசளித்தோம்

கோவிலும் காணவில்லை
பூசையும் நடப்பதில்லை
மரமும் மாறிப்போச்சு
மதிலும் வீடுமாச்சு

தனியொரு முகிலாய் நானும்
திரிந்து கொண்டிருக்கும் வேளை
என்றோ தொலைந்த கனவில்
ஏங்கும் என் நெஞ்சும் நினைவில்…

No responses yet

மாற்றம்

Posted by

நேற்றும்
இந்த சாலையில்தான்
பயணித்ததேன்…

இதுவரை தெரியாத
மேடு பள்ளம்
இன்று தெரிகிறது..

என்னுள்
ஒர் உயிரின்
ஜனனம்.

One response so far

மனம் (19.4.2003)

Posted by

மனம் என்பதோர் மந்திரப் பேழை
என்றுமே அன்பினை யாசிக்கும் ஏழை
நினைவுகள் எத்தனை கனவுகள் எத்தனை
அமிழாதிருக்கும் நிகழ்வுகள் எத்தனை
அடிநெஞ்சில் புதையுண்ட பொக்கிஷம் சிலவும்
அழகழகாய்த் துள்ளும் மீனாய்ச் சிலவும்
இத்துனை நினைவுகள் எங்கனம் வாங்கினாய்?
இன்னும் பலவர ஏன் தான் ஏங்கினாய்?
இன்பமென துன்பமென எங்கனம் பிரிப்பேன்?
அத்துனையும் பொக்கிஷமே இறுதிவரை காப்பேன்

No responses yet

தேடல் (24.7.2003)

Posted by

உதிரத்தில் கலந்தென்னை
ஊனுடம்பில் தேடுகின்றேன்
இதயத்தின் உட்புகுந்து
இடுக்கெல்லாம் தேடுகின்றேன்
அறிவென்னும் ஒளிகொண்டு
அகத்துள்ளும் தேடுகின்றேன்
அன்பென்னும் விழிகொண்டு
புறத்தினிலும் தேடுகின்றேன்
உயிரென்பது தான் நானோ?
உயிர் தங்கும் உடல் நானோ?
அறிவென்பது தான் நானோ?
அதைக்கடந்த நிலை நானோ?
எது இங்கே நான் என்று
என்னில் நான் தேடுகின்றேன்
உடல் பிரிந்து உயிர் செல்லும்
நாளில் தான் விளங்கிடுமோ?

No responses yet

மனதின் கல்வெட்டுக்கள்( 26.08.2004 )

Posted by

காலமது உருண்டு செல்ல
கனவென மங்கும் நிஜத்தில்
மீண்டுமொரு பயணம் புரிய
உதவும் மன கல்வெட்டுக்கள்

சுவையில் மனம் மகிழ்ந்திட்டாலும்
‘சுட’ யில் அது வெதும்பிட்டாலும்
படையல் பல காத்திருக்கும்
பந்தி மன கல்வெட்டுக்கள்

அன்றை நினைவில் அகமகிழ
அதனை சிந்தை அபகரிக்க
இன்றை சிறார் பின்னொரு நாள்
இந்த ஏக்கம் அடைகுவரோ?

கடந்து வந்த பாதை இனிது
நடக்கும் பாதை என்றும் புதிது
வாழ்க்கை பயணப் பாதையெங்கும்
மைல்கல் மன கல்வெட்டுக்கள்

No responses yet