கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள்

Archive for the tag 'அம்மா'

அடுப்பங்கரை

Posted by

மண்ணடுப்பு/கல்லடுப்பு

சுள்ளி பொறுக்கி வெறகு வெட்டி
தென்ன மட்டய காயவச்சி
வெறக நல்லா பொளந்துவச்சி
அடுப்பில் நுழைச்சி பத்தவச்சி
எண்ணை ஊத்தி எரியவச்சி
மண் சட்டிய ஏத்தி வச்சி
ஊதி ஊதி இருமி இருமி
வறட்டி புகைய விரட்டி விரட்டி
கண்ணைக் கசக்கி வாயப்பொத்தி
அல்லும் பகலும் அனலில் வெந்து
அமுதமுதாய்ச் சமைச்சிடுவ..

ரேஷன் கடை வாசல் போயிமண்ணெண்ணை ஸ்டவ்
காலு வலிக்க கியூவில் நின்னு
மண்ணெண்ணை வாங்கி வந்து
பம்ப்பு ஸ்டவ்வில் ஊத்தி ஊத்தி
கையெல்லாம் வலிக்க வலிக்க
பிடியை இழுத்து அடித்து அடித்து
அடைப்பை எடுத்து பத்தவச்சி
இருப்புச் சட்டிய மேல வச்சி
அடுப்புச் சத்தம் காதை அடைக்க
அடுக்களையில் அருகில் இருந்து
ருசி ருசியா சமைச்சிடுவ…

கேஸ் ஸ்டவ்வு, மைக்ரோ வேவ்வு,நவீன மின்சார அடுப்பு
தணல் அடுப்பு தந்தூரி
மின்சாரம் இயக்கும் அடுப்பு
சூரியனே சமைக்கும் அடுப்பு
அடுக்கடுக்கா அடுப்புகளும்
அடுத்த கட்டம் போயிருச்சி
அழகழகா மாறிடுச்சி
சட்டி பானை கூட்டங்கூட
நான் ஸ்டிக்கா மாறிடிச்சி
எத்தனையோ தெரிஞ்சிரிந்தும்
உன் திறமைய புதைச்சிவச்சி
உன் மகிழ்வ மறைச்சிவச்சி
அடுக்களையில் சமைச்சி சமைச்சி
அதுக்குள்ளே புழங்கி புழுங்கி
உன் உலகே சுருங்கிருச்சி
உன் உசுருகூட கருத்துரிச்சி..

8 responses so far

அருமை அம்மாவுக்கு..

Posted by

தாயுள்ளம் கொண்ட அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
******

என்ன எழுதுவதம்மாஅம்மா நிவி
எதை எழுத நான்
அம்மா
என்றழைப்பதில்தான்
எத்தனை சுகமெனக்கு..
உன் புடவைத் தலைப்புக்குள்
ஒளிந்து கொண்டிருப்பேனே..
உன் மடிமீது தலைவைத்து
உறங்கிப் போவேனே..
உன் கையால் சோறுண்ண
நடுநிசியில் விழிப்பேனே..
வேலைக்கு நீ சென்றால்கூட
வாசலிலேயே படுத்திருப்பேன்
தெருமுனையில் உன்முகத்தை
காணவேண்டித் தவமிருப்பேன்..
பண்டிகையோ விடுமுறையோ
உனக்கெல்லாம் அடுப்படிதான்
உனக்கெது பிடித்தாலூம்
எனக்கு உண்ணத் தந்திடுவாய்
எனக்கொரு நோயென்றால்
ஊருக்கே தெரிந்துவிடும்
உனக்கொரு நோயென்றால்
உள்ளுக்குள் புதைத்திடுவாய்
உனக்கான துயரங்கள்
யாருக்கும் தெரிந்ததில்லை
நோயுற்ற காலத்திலும்
கடமையில் தவறியதில்லை
அம்மா அப்பா
எனை விட்டு ஒருநாளும்
பிரிந்திருக்க மாட்டாயே
எப்படியம்மா தாங்கினாய்
பல்லாயிரம் மைல் பிரிவை..
உன்னருமை தெரியுமம்மா
பிள்ளையொன்று வந்தபின்பு
இன்னுமின்னும் புரியுதம்மா
அம்மாவாய் ஆகவேண்டி
ஈன்றால் மட்டும் போதுமா
தவம் செய்வேண்டுமம்மா
அம்மா எனும் வார்த்தைக்கு
வாழும் அர்த்தம் நீ
அம்மா.. அன்பின் உருவமே
கனிவூறும் கண்களே
உன் அறிவும் அருளும்
கருணையும் கம்பீரமும்
திடமும் தியாகமும்
சகிப்புத்தன்மையும் சாந்தமும்
பொறுப்பும் பொறுமையும்
மென்மையும் மேன்மையும்
எனக்கு வராதம்மா..
மெச்சுகிறேனம்மா…
வியக்கிறேன் உன்னைக்கண்டு..
அம்மா நிவி அப்பா
அருமை அம்மா..
உன்னைக் கட்டிக்கொண்டு
உன்னருகில் தூங்கி
உன் முகத்தில் விழித்து
உன்னிடம் திட்டுவாங்கி
உன்னிடம் கோபித்து
உன்னுடன் விளையாடி
உன் செல்ல மகளாய்
உன்னுடனே இருக்கவேண்டும்
காத்திருக்கிறேனம்மா…
உன் மகளாய்…

*********

21 responses so far

முதலெழுத்து..

Posted by

கருவான நாள்முதல்
கண்ணெனக் காத்தவள்
உருவாக்கி என்னையும்
உவகையோடு பார்த்தவள்
வலிகளை மட்டுமே
வாழ்நாளில் கண்டவள்
இத்தனைப் பெருமையும்
எந்தன் அன்னைக்கே
முதலெழுத்து சூட்டுதற்கு
தந்தை பெயர் மட்டும்
கேட்பது ஏன்?

3 responses so far

..தினங்கள் தேவையில்லை

Posted by

உள்ளத்துக் காதலை
உணர்த்துவதற்கு
காதலர் தினம் வரை
காத்திருக்கத் தேவையில்லை

தாய்மையின் பெருமையை
போற்றுவதற்கு
அன்னையர் தினம்தனை
எதிர்நோக்கத் தேவையில்லை

பெண்களின் மதிப்பை
கொண்டாடுதற்கு
மகளிர் தினம் வரை
ஓய்ந்திருக்கத் தேவையில்லை

ஒத்திவைத்தல் எதற்காக?
‘அடைக்குந்தாழ்’ எதற்காக?

உள்ளத்து அன்போடும்
உயர்வான பண்போடும்
சீரிய கருத்தோடும்
சிறந்த பணிவோடும்
வாழ்ந்திருபோமேயானால்
வாழும் நாளெல்லாம்
அத்தகைய நாட்கள்தாம்

No responses yet

அம்மா..

Posted by

உன் மடியில் உறங்கி
நீ ஊட்ட உண்டு
உன் வசவில் சிணுங்கி
உடன் பிறப்போடலைந்து
உனை ஏய்த்து மகிழ்ந்து
சின்னவளாகவே இருந்திருந்தால்..

சுற்றங்களை விடுத்து
மணமொன்று புரிந்து
மறுதேசம் நுழைந்து
நிதமும் உனைத்தேடி
நினைவினில் நீராடி
ஏங்காது இருந்திருப்பேன்.

No responses yet

உயிர்ப்பு

Posted by

விகடனில் படித்த ஒரு சிறுகதையில் சாரத்தில் என் கவிதை

உயிர்ப்பு

இருண்ட உலகத்தில்
இருவராய் உருக்கொண்டோம்
எனக்கு நீதுணையாம்
உனக்கு நான் துணையாம்
அன்னை உணவளிக்க
ஆனந்தம் பலகண்டோம்
அவள்முகம் கண்டிலோமவள்
அன்பினை காண்கிறோம்
உயிரினில் பங்களித்தாள்
எனக்கும் உனக்குமாக
எத்துனை இன்பமிங்கே
அத்துனை உயர்ந்தவளுக்குள்

உலகம் சுருங்கிட்டதுவோ
உருவம் பெருகிட்டதுவோ
இங்கே இருந்திடலாம்
என்றெண்ணிய எண்ணம்பொய்யாக
இன்னொரு உலகம் போக
நாளும் நேரமும் நெருங்க
பயத்தின் மிகுதியில் நாமும்
பலவிதம் யோசிக்கின்றோம்

அங்கென்ன இருக்குமென்றாய்
இவ்வுலகே சொர்கமென்றாய்
இங்குபலர் வாழ்ந்தாரென்றாய்
இவ்வுலகம் திரும்பாரென்றாய்
வாழ்ந்தவர் சென்றதுண்டு
சென்றவர் வந்ததில்லை
இங்கேயெ இருப்பேனென்றாய்
என்னாசைகூட அதுதான்
இங்கிருந்து சென்ற யாரும்
மீண்டிங்கு வந்ததில்லை

அன்னாளும் வந்திட்டதுவே
கருவுலகை விட்டகன்றோமே
இதென்ன பிரகாசவுலகம்
இத்துனை அழகாஇங்கு
அன்னையை கண்டோமிங்கு
அன்பினாய் சொர்கமிதுதான்
இதனையா வேண்டமென்றோம்
இங்கா வரமறுத்தோம்
மகிழ்ச்சியின் மிகுதியில்
நாமும் கதறியழத்துவங்க
அன்னையின் அரவணைப்பு
சொர்கம் சொர்கமிதுதான்.

இதில் கருவுலகை விட்டு பிரிவது இந்நில உலகை விட்டு பிரிவதாகவும் பொருள் கொள்ளலாம்.

அன்னை – இறைவன் / பேரொளி

கதை எனக்கு மிகவும் பிடித்தது..அன்பர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினேன்.. சிறுகதையாகவே அளிக்காமல் எனக்கு பழகிய, இயன்ற முறையில் அளித்தேன்.

No responses yet