கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள்

Archive for the tag 'உணர்வுகள்'

முற்பகல் செய்யின்..

Posted by

குழந்தைகள் காப்பகம்
விட்டுச்சென்றவர் வசிப்பது
முதியோர் இல்லம்

oOo oOo oOo oOo oOo oOo oOo

அன்று…
கதை கேட்ட உன்னிடம்
கார்டூன் பார் என்றேன்
விளையாட அழைத்தபொழுதோ
வீடியோ கேம் கொடுத்தேன்
தாலாட்டு பாடென்றாய்
டீ.வி பார்த்து துயிலென்றேன்
கட்டி அணைத்தபொழுதும்
கணினியில் மூழ்கிக்கிடந்தேன்
விழிகசியக் காத்திருந்தாய்
வேலையே கதியென்றிருந்தேன்
காலங்கள் உருண்டோடின
இன்று
உதவட்டுமா என்று கேட்டேன்
உனக்கொன்றும் தெரியாதென்றாய்
எப்பொழுது வருவாயென்றேன்
எரிதம் போல் என்னைப் பார்த்தாய்
ஏதேனும் பேசுவாயோ
என நானும் ஏங்கிப் பார்த்தேன்
இயலாத எனக்குத் துணையாய்
இயந்திரங்கள் விட்டுச் சென்றாய்…

3 responses so far

நினைவாஞ்சலி

Posted by

எனது அருமை அக்கா
எப்படி முடிந்தது உன்னால்
எமை விட்டுச் செல்ல
எப்படி முடிந்தது உன்னால்
தீபாவளித் திருநாள் இன்று
தீபா வலியென்றே உணர்ந்தேன்
அலைபேசி தனைக் கொண்டு
அனைவர்க்கும் வாழ்த்துரைத்தேன்
உன் எண்ணைக் கடக்குந்தோறும்
உள்ளமெல்லாம் பதறுதம்மா…
பொத்திப் பொத்தித் தாளாமல்
பொங்கி வரும் சோகத்தை
இத்தனை நாள் பேசாத
என் கவிதை சொல்லிடுமா?
மருதாணிச் சிவப்பை நீ
மகிழ்ந்தெனக்குக் காட்டும்முன்னே
காலன் கொண்டு சென்றானே
காலம் பார்த்து வந்தானோ?
நீ இல்லை எனும் நினைவே
நெஞ்சுருக்கிக் கொல்லுதய்யோ
வலி சிக்கிய தொண்டை
விழுங்கிடுமா சோகத்தை?
கண்களில் திரளும் நீர்
கரைத்திடுமா காயத்தை??
நீங்காத உன் நினைவை
நெஞ்சமெங்கும் சுமந்திருந்தும்
நீயில்லாத வெற்றிடத்தை
நிரப்பும் வழி ஏதும் உண்டோ??

3 responses so far

பதின் வயது

Posted by

இருட்டின் வெளிச்சத்தில்
தோன்றும் விண்மீனாய்
பதின் வயதுகளில்
பூப்பூக்கும் கனவுகள்
அழகான அலைகடலில்
ஆர்ப்பரிக்கும் பேரலையாய்
பருவச் சுரப்பி வசம்
அதிரடி ஆட்சிமாற்றம்
எதிர்பாராத் தாக்குதலால்
ஏதேதோ மாற்றங்கள்
அன்பான உறவுகளும்
அன்னியமாய்த் தெரிந்தன
அருகிருக்கும் எல்லோரும்
அறிவிலியாய்த் தோன்றினர்
அக்கறையின் அரவணைப்பும்
அணைக்கட்டாய் உறுத்தின
அறிவுரைகள் செவிகட்கே
அத்தியெனக் கசந்தன
புரிதலே இல்லையென்று
புலம்பிட வைத்தன
பெரிசுகள் தொல்லையென்று
போர்க்கொடி எழுப்பின
விரும்பின வாழ்க்கைத்தேடி
வெகுளியாய் உலகில் ஓடி
தாக்கின நிஜத்தின் வலியில்
தடைகளின் தடயம் புரிய..
அதைக் கடந்து போராடி
அனுபவத்தால் ஆளாக
நான் பட்ட இன்னல்கள்
நாள்தோறும் எனக்குச் சொல்லும்
பேருண்மை என்னவென்று
பெரியோர் சொல் வேதமென்று
………..
யான் பெற்ற துன்பங்கள்
நீ பெறவே வேண்டாமென்று
கற்று வந்த பாடங்களைக்
கனிவுடனே எடுத்துச் சொன்னால்
தலைமுறை இடைவெளியென
தள்ளியிருக்கச் சொன்னாய்
பதின் வயதென்றாலே
பட்டால்தான் புரியுமோ?

13 responses so far

அடுப்பங்கரை

Posted by

மண்ணடுப்பு/கல்லடுப்பு

சுள்ளி பொறுக்கி வெறகு வெட்டி
தென்ன மட்டய காயவச்சி
வெறக நல்லா பொளந்துவச்சி
அடுப்பில் நுழைச்சி பத்தவச்சி
எண்ணை ஊத்தி எரியவச்சி
மண் சட்டிய ஏத்தி வச்சி
ஊதி ஊதி இருமி இருமி
வறட்டி புகைய விரட்டி விரட்டி
கண்ணைக் கசக்கி வாயப்பொத்தி
அல்லும் பகலும் அனலில் வெந்து
அமுதமுதாய்ச் சமைச்சிடுவ..

ரேஷன் கடை வாசல் போயிமண்ணெண்ணை ஸ்டவ்
காலு வலிக்க கியூவில் நின்னு
மண்ணெண்ணை வாங்கி வந்து
பம்ப்பு ஸ்டவ்வில் ஊத்தி ஊத்தி
கையெல்லாம் வலிக்க வலிக்க
பிடியை இழுத்து அடித்து அடித்து
அடைப்பை எடுத்து பத்தவச்சி
இருப்புச் சட்டிய மேல வச்சி
அடுப்புச் சத்தம் காதை அடைக்க
அடுக்களையில் அருகில் இருந்து
ருசி ருசியா சமைச்சிடுவ…

கேஸ் ஸ்டவ்வு, மைக்ரோ வேவ்வு,நவீன மின்சார அடுப்பு
தணல் அடுப்பு தந்தூரி
மின்சாரம் இயக்கும் அடுப்பு
சூரியனே சமைக்கும் அடுப்பு
அடுக்கடுக்கா அடுப்புகளும்
அடுத்த கட்டம் போயிருச்சி
அழகழகா மாறிடுச்சி
சட்டி பானை கூட்டங்கூட
நான் ஸ்டிக்கா மாறிடிச்சி
எத்தனையோ தெரிஞ்சிரிந்தும்
உன் திறமைய புதைச்சிவச்சி
உன் மகிழ்வ மறைச்சிவச்சி
அடுக்களையில் சமைச்சி சமைச்சி
அதுக்குள்ளே புழங்கி புழுங்கி
உன் உலகே சுருங்கிருச்சி
உன் உசுருகூட கருத்துரிச்சி..

8 responses so far

அருமை அம்மாவுக்கு..

Posted by

தாயுள்ளம் கொண்ட அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
******

என்ன எழுதுவதம்மாஅம்மா நிவி
எதை எழுத நான்
அம்மா
என்றழைப்பதில்தான்
எத்தனை சுகமெனக்கு..
உன் புடவைத் தலைப்புக்குள்
ஒளிந்து கொண்டிருப்பேனே..
உன் மடிமீது தலைவைத்து
உறங்கிப் போவேனே..
உன் கையால் சோறுண்ண
நடுநிசியில் விழிப்பேனே..
வேலைக்கு நீ சென்றால்கூட
வாசலிலேயே படுத்திருப்பேன்
தெருமுனையில் உன்முகத்தை
காணவேண்டித் தவமிருப்பேன்..
பண்டிகையோ விடுமுறையோ
உனக்கெல்லாம் அடுப்படிதான்
உனக்கெது பிடித்தாலூம்
எனக்கு உண்ணத் தந்திடுவாய்
எனக்கொரு நோயென்றால்
ஊருக்கே தெரிந்துவிடும்
உனக்கொரு நோயென்றால்
உள்ளுக்குள் புதைத்திடுவாய்
உனக்கான துயரங்கள்
யாருக்கும் தெரிந்ததில்லை
நோயுற்ற காலத்திலும்
கடமையில் தவறியதில்லை
அம்மா அப்பா
எனை விட்டு ஒருநாளும்
பிரிந்திருக்க மாட்டாயே
எப்படியம்மா தாங்கினாய்
பல்லாயிரம் மைல் பிரிவை..
உன்னருமை தெரியுமம்மா
பிள்ளையொன்று வந்தபின்பு
இன்னுமின்னும் புரியுதம்மா
அம்மாவாய் ஆகவேண்டி
ஈன்றால் மட்டும் போதுமா
தவம் செய்வேண்டுமம்மா
அம்மா எனும் வார்த்தைக்கு
வாழும் அர்த்தம் நீ
அம்மா.. அன்பின் உருவமே
கனிவூறும் கண்களே
உன் அறிவும் அருளும்
கருணையும் கம்பீரமும்
திடமும் தியாகமும்
சகிப்புத்தன்மையும் சாந்தமும்
பொறுப்பும் பொறுமையும்
மென்மையும் மேன்மையும்
எனக்கு வராதம்மா..
மெச்சுகிறேனம்மா…
வியக்கிறேன் உன்னைக்கண்டு..
அம்மா நிவி அப்பா
அருமை அம்மா..
உன்னைக் கட்டிக்கொண்டு
உன்னருகில் தூங்கி
உன் முகத்தில் விழித்து
உன்னிடம் திட்டுவாங்கி
உன்னிடம் கோபித்து
உன்னுடன் விளையாடி
உன் செல்ல மகளாய்
உன்னுடனே இருக்கவேண்டும்
காத்திருக்கிறேனம்மா…
உன் மகளாய்…

*********

21 responses so far

உறங்கும் என் கவிதை

Posted by

ஓயாத வேலை
உன் பின்னே ஓட்டம்
விளையாடும் நேரமெல்லாம்
உன் வயதேதான் எனக்கும்

காலை முதல் கனவு வரை
ஏதேதோ எண்ணங்கள்
குறிஞ்சியாய் பூக்கும்
ஓரிரு கவிதைகளும்
உயிர்பிக்க முடியாமல்
ஓரத்தில் உறங்கிப்போகும்

எங்கே தொலைந்துபோனேன்??
மீண்டும் கிடைப்பேனா??
எனக்கே எனக்கான
நேரமும் கிடைக்குமா?

இன்று கிடைத்தது
நான் தேடும் என் நேரம்
அப்பொழுதும்…
உள்ளுக்குள் உறங்கும்
கவிதையை எழுப்பாமல்..

வாய் குவித்து விரல் அசைத்து
சிரித்து சிணுங்கி பதுமைபோல்
உறங்கும் கவிதையான
உன்னை இரசிக்கின்றேன்
என்னவென்று சொல்வது??

19 responses so far

பூக்களில் உறங்கும் மௌனங்கள் (1)

Posted by

சாலையோர பூக்கள்

நெரிசலான மனங்களுள்
நுழைய முடியாமல்
நெடுஞ்சாலை ஓரத்தில்
பார்வையின் தூரத்தில்
பூக்களில் உறங்கும்
மௌனங்கள்

7 responses so far

மாற்றம்

Posted by

காலமகள் கொடியசைப்பில்
கடந்தது பல ஆண்டு
அன்பு நட்பு பாசம் கொண்டு
கண்ட காட்சி கேட்ட சொற்கள்
இன்றும் உண்டு நெஞ்சில் இங்கு
அன்று கண்ட மக்கள் மட்டும்
காணவில்லை மாறிப்போனார்
காலச்சுழலில் வேறு ஆனார்
மாற்றம் மட்டும் உண்மையென்றால்
அன்பும்கூட பொய்மைதானோ?
பழைய வாசம் தேடும் மனதே
புரிந்துகொள்வாய் விழித்துக்கொள்வாய்
வாழும் காலம் வேறு காலம்.

4 responses so far

பிரிதல்

Posted by

அஷ்டமியா? – ஆகாது
தேய்பிறையா? – கூடாது
இராப்பொழுதா? – வேண்டாமே

எத்தனையோக் காரணங்கள்
தேடித்தேடி எடுத்துவந்தேன்

ஏதோ சரியில்லையென
நித்தம் பயணம் ஒத்திவைத்தேன்

உண்மையிங்கு அதுவல்ல
நிஜத்தை நம் மனமறியும்

எல்லாம் இருந்தபோதும்
பயணிக்க மனம்தான் இல்லை

No responses yet

வெறுமை

Posted by

ரம்யமான இசை..
பிடித்தமான பாடல்..
கவின் சொட்டும் காட்சி..
மனம் கவர்ந்த புத்தகம்..
கண்சிமிட்டும் விண்மீன்..
வருடிச் செல்லும் காற்று..
அசைந்தாடும் இலைகள்..
சுகமான உரையாடல்..
என்று ஏதேதோ ..
மனதினுள் அடைத்தேன்..
ஆனாலும் மாற்றமில்லை
இங்கு பெருகி நிற்பது..
என் வெறுமைதான்.

One response so far

Older Entries »