கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள்

Archive for the tag 'உணர்வுகள்'

கோவம்

Posted by

எங்கிருந்து வந்தனையோ
எங்கு சென்றனையோ

தவம் செய்யவில்லை நான்
தானாக வந்தாய் நீ

வழியனுப்பவில்லை நான்
வந்தவழி சென்றாய் நீ

வந்த சில நாழிகையில்
என்வசத்தில் நானில்லை

வசவுமொழி கேட்டனரோ
வாயடைத்து நின்றனரோ?

கடும்பார்வை கண்டனரோ
கண் கலங்கிச் சென்றனரோ??

என்னை நீ ட்கொள்ள
எங்கே நான் சென்றுவிட்டேன்

என் சிரத்தில் நீயேற
உன் அடிமை ஆனேனோ?

என் உடமை நீயில்லை
என்னை நீ விட்டுவிடு

வாராமல் நீ இருந்தால்
வாயில்ல பூச்சிதான் நான்

ஆனால்..
வாழவேண்டும் நானும்தான்

என் அடிமை ஆவதென்றால்
வந்து.. கண்டு.. சென்றுவிடு

One response so far

நான் நீயில்லை

Posted by

எனக்குத் தெரிந்தவை
உனக்குத் தெரியாமலும்

எனக்குப் புரிந்தவை
உனக்குப் புரியாமலும்

எனக்குப் பிடித்தவை
உனக்குப் பிடிக்காமலும்

எனக்கு நன்மையானவை
உனக்குத் திமையாகவும்

எனக்குக் கவிதையானவை
உனக்குக் கிறுக்கலாகவும்

எப்படியும் தெரியலாம்..
எல்லாமே சாத்தியம்தான்.

ஏனென்றால்..

எனக்கு ‘நான்’ எனத்தெரிவது
உனக்கு ‘நீ’ எனத்திரிவதால்

No responses yet

பாலைவனச் சோலை

Posted by

வீதியே வெந்திடும் வெப்பத் தணலில்
ஓரமாய் பூத்திட்ட ஒற்றைச் செடியை
நாடியே ஓடிடும் பட்டுக் குருகின்
நாட்டியம் காண்கயில்..

அன்னையின் கைதனை அன்புடன் இறுக்கி
அன்றலர்ந்த மலராய் இருவிழி விரிக்க
தத்தையென தாவிடும் குழவியின்
தளர் நடை காண்கயில்..

பல்வேறு கடமையும் கவலையும் சூழ
தாவித் தாவித் தவித்துக் கொண்டு
பாலையாய் போகும் முன்¨ர் நெஞ்சில்
சோலை மலர்கிறது

No responses yet

தொலைந்து போன(வர்கள்)வைகள்..1

Posted by

என்றோ ஒருநாள்
ஏதோவொரு காகிதத்தில்
அவசரமாக கிறுக்கிவைத்த
நண்பனின் தொலைபேசியெண்
காணக்கிடைத்தது இன்று
காலங்களை வென்று
கண்ணீர் பரிசென தந்து..
தொலைபேசி இருக்கலாம்
பேசியவன் தொலைந்துவிட்டான்
காற்றினில் கலந்துவிட்டான்
எண்களைச் சுழற்றுகின்றேன்..
எண்ணியது நடக்குமா?
எடுத்து அவன் பேசுவானா?
செவிகள் இன்னும் மறக்கவில்லை
சென்றவனின் குரல் ஒலியை
தொலைந்த அவன் உடலினைப்போல்
அவன் குரலும் தொலைந்ததுவோ

No responses yet

மதம் (6.10.2003)

Posted by

மதம் பிடித்த மனிதனுக்கு
மனதின் வலியும் புரியுமோ?
மகாத்மாக்கள் பெற்ற மண்ணில்
மானுடம்தான் தோற்குமோ?
வியர்வை மழையில் விளைந்த பயிரை
குருதி வெள்ளம் அழிக்குமோ
ஒற்றுமையில் உயர்ந்த மண்ணை
வேற்றுமை நீர் அரிக்குமோ?
புல்லுருவிகல் புகுந்து நம்முள்
புதிய குழப்பம் விளைக்குமோ?
ஒடுங்கிச் சென்ற பகைவர் கூட்டம்
உரக்கச் சிரித்து மகிழுமோ?
அன்னை மடியில் அமர்ந்து கொண்டே
அவளுக்கிங்கு துரோகமோ?
மகவிரண்டை மோதவிட்டே
வாழ்வதுதான் மானமோ?
இன்றும் நமக்கு ஓருயிர்தான்
மாற்றம் ஏதும் நிகழ்ந்ததோ?
உதிர வெள்ளம் பெருகக் கண்டும்
இன்னும் கூட மயக்கமோ???

No responses yet

மரணம் (25-01-03)

Posted by

மரணம்
விழிப்பு மறுக்கப்பட்ட ஆழ்துயில்
துக்கங்கள் தொடுவதில்லை
தூக்கமும் கலைவதில்லை
துடிக்க மறுத்த இதயத்தால்
துடித்ததென்னவோ நாங்கள் தான்

மரணம்
மறுக்க இயலாத மலர்மாலை
வேண்டிச் நின்றால் வருவதில்லை
வந்தபின்னர் செல்வதில்லை
தேடிச்சென்றால் பெருமையில்லை
தேடிவந்தால் வரவேற்புமில்லை

மரணம்
சலனம் இல்லாத சாந்தநிலை
இன்ப துன்பம் தெரிவதில்லை
இழப்பும் உனக்கு புரிவதில்லை
மண்ணில் வாழும் காலம் முடிய
மனிதம் அற்றுபோகும் நிலை

மரணம்
மாற்ற முடியாத மாற்றுச் சட்டை
மனித உடல் தேவையில்லை
மண்ணில் இனி வாழ்வதற்கு
மாற்றுச்சட்டை அணிந்தபின்னர்
மீண்டும் மாற்ற முடிவதில்லை

மரணம்
அழைப்பின்றி வரும் விருந்தாளி
வரும் நேரம் தெரிவதில்லை
வந்த கோலம் புரிவதில்லை
போகச் சொல்ல முடிவதில்லை
போன உயிரும் மீள்வதில்லை

மரணம்
மரித்துப் போவதில்லை
மலரின் மரணம்.. கனியின் ஆரம்பம்
அச்சத்தின் மரணம்.. வெற்றியின்ஆரம்பம்
இருட்டின் மரணம்.. வெளிச்சத்தின்ஆரம்பம்
மரணம்
மரிப்பதில்லை நினைவுகள்
மறக்கவில்லை உறவுகள்
முடியவில்லை வார்த்தைகள்
முடிவில்லாத கனவுகள்

No responses yet

போதை அரக்கன்

Posted by

அந்தோ எரிகிறதே
அடிமனமும் பதறியதே
பிஞ்சின் நிலையறிந்து
பேதைமனம் துடிக்கிறதே
பிஞ்சுகள் அறிந்திடாது
தீதுயாது புரிந்திடாது
நஞ்சினை கொடுத்தழிக்கும்
வஞ்சகரை தெரிந்திடாது
வந்தார் வாழவைப்போம்
வினைகளினை தூரவைப்போம்
பண்பாடு போற்றிடுவோம்
சந்ததியைக் காத்திடுவோம்
பிள்ளைகள் தேடிவரும்
பெரும்பகையை நாமழிபோம்

No responses yet

இழப்பு (29.11.02)

Posted by

இல்லை என்று சொல்லிவிட்டால்
இந்த துன்பம் என்றுமில்லை
இதோ என்று தந்துவிட்டு
திரும்பக் கேட்டல் நியாயமாமோ?

உந்தன் அன்பு என்னவென்று
அறிந்திடாமல் நானிருந்தேன்
அறிந்துகொள்ள வைத்துவிட்டு
விலகிக்கொள்ளல் நியாயமாமோ?

கண்ணிழந்து இருந்தபோது
காட்சியாது அறிந்திடேன் நான்
ஒளிகொடுத்து உணரவைத்து இன்று
பிடுங்குவதேன் உயிரையும் சேர்த்து

இல்லையென்றே இருந்திருந்தால்
இந்த துன்பம் என்றுமில்லை
பெற்றிழந்த வலியின் கொடுமை
உனக்கு மட்டும் இல்லையா என்ன?

No responses yet

« Newer Entries