கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள்

Archive for the tag 'சிந்தனை'

..தினங்கள் தேவையில்லை

Posted by

உள்ளத்துக் காதலை
உணர்த்துவதற்கு
காதலர் தினம் வரை
காத்திருக்கத் தேவையில்லை

தாய்மையின் பெருமையை
போற்றுவதற்கு
அன்னையர் தினம்தனை
எதிர்நோக்கத் தேவையில்லை

பெண்களின் மதிப்பை
கொண்டாடுதற்கு
மகளிர் தினம் வரை
ஓய்ந்திருக்கத் தேவையில்லை

ஒத்திவைத்தல் எதற்காக?
‘அடைக்குந்தாழ்’ எதற்காக?

உள்ளத்து அன்போடும்
உயர்வான பண்போடும்
சீரிய கருத்தோடும்
சிறந்த பணிவோடும்
வாழ்ந்திருபோமேயானால்
வாழும் நாளெல்லாம்
அத்தகைய நாட்கள்தாம்

No responses yet

சிட்டுக் குருவியின் தேடல் 20.12.2004

Posted by

சிட்டுக் குருவிக்கு ஒருநாள்
சிறகும் வளர்ந்தது கொஞ்சம்
‘பட்’டென அதனை விரித்து
பறந்திட துடித்தது நெஞ்சம்

மெத்தென சிறகுகள் விரிய
உயர்ந்தது குருகதும் மெதுவாய்
பறப்பது தன்னியல்பென்றே
உணர்ந்திட மகிழ்ந்தது அழகாய்

காடுகள் கடந்திட வேண்டும்
கவின்பல கண்டிட வேண்டும்
நாடுகள் சென்றிட வேண்டும்
நன்மைகள் அறிந்திட வேண்டும்

மேலோர் உரைத்திடக் கேட்டு
மேன்மைகள் பெற்றிட வேண்டும்
துவண்டிடும் மக்கள் கண்டு
துயரங்கள் துடைத்திட வேண்டும்

சிட்டுக் குருவிக்கு இங்கே
சேர்ந்திடும் ஆசை கண்டீர்
சிறகினை விரித்தே அதுவும்
சென்றிடும் வேகம் கண்டீர்

பறந்தது குருகும் உயரே
பயின்றது பலவும் வழியே
நீண்டது பயணம் வெளியே
நினைத்தது குருகும் தனியே

எத்தனை தொலைவினுக்கப்பால்
எத்தனை மறைபொருள் உளதோ?
அத்தனை கண்டிட எனக்கும்
ஆயுளும் இங்கே உளதோ?

இத்துனை பரந்த உலகை
எவ்விதம் பறந்து கடப்பேன்?
கடலென பலதும் உளதே
எவ்விதம் அதனை பயில்வேன்?

சிந்தையில் சிக்கின நெஞ்சும்
சிறகுகள் வலித்தன கொஞ்சம்
சின்னக் குருவி தானே?
சிந்தையைத் தீட்டிட வாரீர்

No responses yet

தேடல் (24.7.2003)

Posted by

உதிரத்தில் கலந்தென்னை
ஊனுடம்பில் தேடுகின்றேன்
இதயத்தின் உட்புகுந்து
இடுக்கெல்லாம் தேடுகின்றேன்
அறிவென்னும் ஒளிகொண்டு
அகத்துள்ளும் தேடுகின்றேன்
அன்பென்னும் விழிகொண்டு
புறத்தினிலும் தேடுகின்றேன்
உயிரென்பது தான் நானோ?
உயிர் தங்கும் உடல் நானோ?
அறிவென்பது தான் நானோ?
அதைக்கடந்த நிலை நானோ?
எது இங்கே நான் என்று
என்னில் நான் தேடுகின்றேன்
உடல் பிரிந்து உயிர் செல்லும்
நாளில் தான் விளங்கிடுமோ?

No responses yet