கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள்

Archive for the tag 'நிவிக்குட்டி'

சிப்பியென இமை மூடி..

Posted by

சிப்பியென இமை மூடி

செவ்விதழில் முகை சூடி

சிகை வருடும் பிறை நுதலில்

சிந்தை கவர் கண்ணே

நான் சூல்கொண்ட நன்முத்தே

என் இதழ்சூடும் புன்னகையே

செப்புகிறேன் என் வாக்கை

சிந்தையில் சேர் கண்ணே

மூவிரண்டு வயதில் நீ

முன்னூறு கதை படிப்பாய்

நாலிரண்டு வயதில் நீ

நன்மை பல கற்றிடுவாய்

ஏழிரண்டு வயதில் நீ

ஏற்றங்கள் பெற்றிடுவாய்

எண்ணிரண்டு வயதில் நீ

எழில் நிலவை எட்டிடுவாய்

கண்ணிரண்டு துணைகொண்டு

கசடற நீ உயர்ந்திடுவாய்

எம்மிரண்டு உயிர் கொண்டு

உம்மிரண்டு உயிர் காப்போம்

சிந்திய வார்த்தை யாவும்

சிந்தையிலே உதித்ததல்ல

சத்தியத்தில் ஈன்ற வாக்கு

சத்தியமடி என் கண்ணே

சலனமற்ற துயிலுனக்கு

சலசலக்கும் நெஞ்செனக்கு

சத்தியம் உரைத்துவிட்டேன்

சலனமின்றி காத்திடுவேன்.

4 responses so far

வாழும் முறைமை எது?

Posted by

விழி மூடித் திறக்கும் முன்னே
மூவிரண்டு வயதாம் உனக்கு
பட்டுப் பிள்ளை உன்னை – நான்
பாடாய்ப் படுத்துகின்றேன்
துள்ளி விளையாடும் போதில்
துயில் கொள்ளத் துரத்துகின்றேன்
பஞ்சு போல் உறங்கும் பொழுதோ
பள்ளி செல்ல எழுப்புகின்றேன்
மணியான உன்னைக் கிளப்ப
மணி காட்டிப் பணிகள் சொல்வேன்
உடைமாற்றி தலைசீவி உணவுண்டு
ஒரே நேரம் எத்தனைச் செய்வாய்?
பரபரப்பில் பாலைத் துறந்து
பறந்து போவாய் பேருந்துக்கு
பசிக்குமோ என்னவோ என்று
பரிதவித்துக் காத்துக் கிடப்பேன்..
மயில் போல ஆடுவாயோ
குயில் போல பாடுவாயோ – என
நித்தம் ஒரு கலை பயில
நெடுந்தூரம் அனுப்பு கின்றேன்
உனக்கும் எனக்குமேயான
நேரம்மிகச் சுருங்கிப் போக
உறையாதோ கொஞ்சும் நேரம்?
உள்ளுக்குள் உருகி நின்றேன்
என்னுடன் விளையாடென்று
ஏங்கி நீ கேட்கும் பொழுது
எனக்குமே ஏதோ தோன்றும்
எதற்கு இந்தப் பரபரப்பு?

No responses yet

அம்மா.. நிவிக்கு ஆப்பி பத்டே வந்துச்

Posted by

இனிய இரண்டாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிவிம்மா

3 responses so far

கண்ணாமூச்சி..

Posted by

ஒளிந்திருப்பது நிவிக்குட்டி

நீ வழக்கமாக ஒளியுமிடம்
தெரியாதா எனக்கு??
ஆனாலும்…
வீடு முழுதும்
தேடி அலைவேன்..
‘த்த்தோ நிமி’
என்று தலைக்காட்டி
நீ சிரிக்கும்
அழகில் கரைய..

oOo

சும்மாவேனும்
கையில் முகம்புதைத்து
அழுதுகொண்டிருப்பேன்
‘அம்மா’ என்றணைத்தபடி
என் முகம்நோக்கும்
உன் அழகுவிழிகளின்
அன்பொளியில் நனைய..

One response so far

அழகுக்குட்டி நிவிம்மா..

Posted by

பட்டு நிவி

ஏ நிலவே..
வேடிக்கை போதும்
என் செல்ல மகள்
இப்பொழுது தான்
கண்ணயர்ந்தாள்

முகிலிடை மூழ்கிடு..
நின் ஒளிக்கரங்களால்
வருடி வருடி
அவளின் துயில்
கலைத்து விடாதே

ஆசை மிகின்
தென்றலின் துணையொடு
அவ்வப்பொழுது
முகில் விலக்கி
அவள் தூங்கும் அழகை
இரசித்துக் கொண்டிரு
என்னைப் போல்..

10 responses so far

உறங்கும் என் கவிதை

Posted by

ஓயாத வேலை
உன் பின்னே ஓட்டம்
விளையாடும் நேரமெல்லாம்
உன் வயதேதான் எனக்கும்

காலை முதல் கனவு வரை
ஏதேதோ எண்ணங்கள்
குறிஞ்சியாய் பூக்கும்
ஓரிரு கவிதைகளும்
உயிர்பிக்க முடியாமல்
ஓரத்தில் உறங்கிப்போகும்

எங்கே தொலைந்துபோனேன்??
மீண்டும் கிடைப்பேனா??
எனக்கே எனக்கான
நேரமும் கிடைக்குமா?

இன்று கிடைத்தது
நான் தேடும் என் நேரம்
அப்பொழுதும்…
உள்ளுக்குள் உறங்கும்
கவிதையை எழுப்பாமல்..

வாய் குவித்து விரல் அசைத்து
சிரித்து சிணுங்கி பதுமைபோல்
உறங்கும் கவிதையான
உன்னை இரசிக்கின்றேன்
என்னவென்று சொல்வது??

19 responses so far

மாற்றம்

Posted by

காலமகள் கொடியசைப்பில்
கடந்தது பல ஆண்டு
அன்பு நட்பு பாசம் கொண்டு
கண்ட காட்சி கேட்ட சொற்கள்
இன்றும் உண்டு நெஞ்சில் இங்கு
அன்று கண்ட மக்கள் மட்டும்
காணவில்லை மாறிப்போனார்
காலச்சுழலில் வேறு ஆனார்
மாற்றம் மட்டும் உண்மையென்றால்
அன்பும்கூட பொய்மைதானோ?
பழைய வாசம் தேடும் மனதே
புரிந்துகொள்வாய் விழித்துக்கொள்வாய்
வாழும் காலம் வேறு காலம்.

4 responses so far

நான் வளர்கிறேனே அம்மா

Posted by

தண்ணீரில் தொலைபேசி
தரையெங்கும் காகிதங்கள்
மங்கள நீராடியதில்
மோட்சத்தில் மடிக்கணிணி
பூசைக்கு படைக்கும் பொருள்
முடியும்வரை இருப்பதில்லை
தேடும் பொருள் கிடைப்பதில்லை
போன இடம் தெரிவதில்லை
நொடிப்பொழுது அசட்டைக்கு
கைக்கூலி சேதாரம்
அத்தனையும் புலம்பலல்ல
இரசித்து சுவைத்து சிரித்தவைதான்
கவிதை எழுத உட்கார்ந்தால்
காலைக்கட்டி முகம்நோக்கி
தளர் நடையில் கிளர் மொழியில்
கொஞ்சிக் கெஞ்சி எனை அழைக்கும்
கொள்ளை கொண்ட மகள் செயல்தான்

சந்திப்போம்
கீதா

19 responses so far

ஒரு தேவதை வந்துவிட்டாள்

Posted by

அக்டோபர் 25, 2006

எங்கள் வாழ்வில் இனியதொரு மாற்றம்..

நிவேதனா – இனிய தென்றலாய் பிறந்தாள்

வாழ்த்திய நெஞ்சங்களுக்கு எங்கள் நன்றி

அன்புடன்
கீதா

10 responses so far

மாற்றம்

Posted by

நேற்றும்
இந்த சாலையில்தான்
பயணித்ததேன்…

இதுவரை தெரியாத
மேடு பள்ளம்
இன்று தெரிகிறது..

என்னுள்
ஒர் உயிரின்
ஜனனம்.

One response so far