கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள்

Archive for the tag 'மகாபாரதம்'

புத்தகம் வாசித்தேன் – மகாபாரதம் – பாண்டவர்கள் தருமசீலர்களா?

Posted by

தலைப்பு : மகாபாரதம் (எ) வியாசர் விருந்து

எழுதியவர் : ராஜாஜி (எ) சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி

வானதி பதிப்பகம்

ராஜாஜி அவர்கள் எழுதின மகாபாரதம் (எ) வியாசர் விருந்து படிச்சேன். விறுவிறுன்னு என்ன ஒரு நடை.. என்ன ஒரு விவரிப்பு.. காட்சியெல்லாம் கண்முன்னே விரியுது.. எளிமையான தமிழில் எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதப்பட்ட ஓர் அற்புதமான படைப்பு.

புத்தகத்தை படிச்சு முடிச்சதுமே எனக்கு தோன்றின சில கருத்துக்கள் இங்கே..

பாண்டவர்கள் ஒன்றும் அவ்வளவு தரும சீலர்கள் இல்லை

யுத்தக் களத்தில் அவர்கள் மற்ற வீராதிவீரர்களை ஜெயித்ததெல்லாம் கிருஷ்ணனின் சூழ்ச்சியாலும், நேர்மையற்ற போர் முறைகளாலும், போர் தர்மத்தை மீறியதாலும்தான்.

அர்ச்சுனனின் செயல்கள்

பிதாமகர் பீஷ்மர் – ‘ஒரு பெண்ணை எதிர்த்துப் போர் புரியமாட்டேன்’ என்ற உறுதியுடைய பீஷ்மரை, பெண் ஜன்மமான சிகண்டியை முன்னால் வைத்துக்கொண்டு வீழ்த்தினான் அர்ச்சுனன்.

ஜயத்ரதன் (சிந்து தேசத்து அரசன் ) – தன் மகன் அபிமன்யுவைக் கொன்ற ஜயத்ரதனை அடுத்த சூரிய அஸ்தமனத்திற்குள் வதம் செய்வேன் என்று பிரதிக்ஞை எடுத்திருப்பான் அர்ச்சுனன்.

மறுநாள் சூரியன் அஸ்தமனமாவதற்கு சற்றுநேரம் முன்பே தனது மாயையால் இருள் உண்டாக்கினான் கிருஷ்ணன். சூரியன் அஸ்தமித்துவிட்டான் என்று மகிழ்ந்து நின்றிருந்த ஜயத்ரதனை அம்பிட்டு வீழ்த்தினான் அர்ச்சுனன்.

கர்ணன்– மண்ணில் பதிந்து விட்டிருந்த தேர்ச்சக்கரத்தைத் தூக்கிக் கொண்டிருந்த சமயத்தில், யுத்த தர்மத்திற்கு புறம்பாக கர்ணனை வீழ்த்தினான் அர்ச்சுனன்.
[கர்ணன் வீரன்தான் ஆனால் அவனே சில சமயங்களில் புறமுதுகிட்டு ஓடி இருக்கிறான், துரியோதனனையே தனியே விட்டு. ]

தருமரின் செயல்கள்

துரோணாச்சாரியார்பீமசேனன் சொல்வது உண்மையா? என் மகன் அஸ்வத்தாமன் இறந்தது உண்மைதானா? என்று சத்திய சீலர் தருமரிடம் வினவினார் துரோணர்.
தருமன் சொன்ன பதில் “அஸ்வத்தாமன் இறந்தது உண்மை.
[உண்மையில் இறந்தது “அஸ்வத்தாமன் என்கிற யானை“. ]தருமனும் பொய் சொன்னான்.
துக்கம் மேலிட ரதத்தில் அமர்ந்து யோகநிஷ்டையில் ஆழ்ந்திருக்கும் சமயம் பார்த்து திருஷ்டத்யும்னன் துரோணரின் ரதத்தில் ஏறி அவர் தலையைத் துண்டித்தான்.

முன்பு வனவாசத்தில் இருக்கும்போது நச்சுப்பொய்கையில் நீர் அருந்தி தருமரின் நான்கு தம்பிமார்களும் உயிரிழந்தனர். அங்கு வந்த யக்ஷனின் கேள்விகளுக்கு விடைகூறி பின்னர் தம்பி நகுலனை உயிருடன் தரக் கேட்டான். குந்திக்கு தான் ஒருவனும், மாத்ரிக்கு நகுலன் ஒருவனும் உயிருடன் இருந்தால் சமமாக இருக்கும் என்று தர்மம் சொன்னவன் காந்தாரியின் நூறு புத்திரர்களில் ஒருவரைக்கூட உயிருடன் விடாதது எந்த விதத்தில் தர்மமாகும்? காந்தாரியும் தாய்தானே?

பீமனின் செயல்கள்

துரியோதனன் – நாள் முழுதும் போர் புரிந்து ஓய்ந்துபோய், காயமுற்று, கவசமில்லாமல் இருந்த துரியோதனனை கதாயுத போருக்கு அழைத்தான் பீமசேனன், அதுமட்டுமல்லாமல் கதாயுத போர் சாஸ்திரத்திற்கு விரோதமாக துரியோதனனின் நாபிக்கு கீழ் (தொடையில்) அடித்து வீழ்த்தினான்.

திருதராஷ்டிரன்,காந்தாரி – புத்திரர்களை இழந்த சோகத்தில் இருக்கும் திருதராஷ்டிரனை மேலும் மேலும் தன் சுடுசொற்களால் குத்தி மனதைப் புண்படுத்தினான் பீமசேனன். இதனால் அவர் தன் மனைவி காந்தாரியுடன் வனவாசம் சென்றார், உடன் குந்திதேவியும் சென்றார்.

பஞ்ச பாண்டவர்களைச் சார்ந்தவர்களின் செயல்கள்

பூரிசிரவசு – துண்டிக்கப்பட்ட கையுடன் யோக நிலையில் இருந்தவனை வெட்டிக் கொன்றான் சாத்யகி.

முடிவாக நான் சொல்றது என்னன்னா

இதுபோல பல சமய சந்தர்ப்பங்களில் பாண்டவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் தருமத்துக்கு புறம்பாகவும், நேர்மையில்லாமலும், மனிதத்தன்மையற்றும், பிறர் மனதை புண்படுத்தியும், சூழ்ச்சியுடனும் செயல்பட்டனர். இப்படி இருக்க இவர்களை மட்டும் கொண்டாடுவது ஏன்?

என்னதான் சூழ்ச்சியால் சூதாடுவதற்கு வரவழைக்கப்பட்டாலும் மதியிழந்து மனைவியையும் தம்பிமார்களையும் சூதாட்டத்தில் தோற்றது யார் குற்றம்?

என்னைப் பொறுத்தவரையில் துரியோதனன் மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாதவன். இராஜ்ஜிய பதவியை அடைய பல விதங்களில் முயற்சி செய்தான்.. பாண்டவர்களுக்கு துன்பமிழைத்தான்.. ஆனாலும் யுத்தக்களத்தில் பாண்டவர்கள் போலல்லாமல் சுத்த வீரானாகவே நடந்துகொண்டான்.

நட்புக்கு இலக்கணமானவன். போர்க்களத்தில் நண்பன் கர்ணனுக்கு துணைபுரியவேண்டி தன் தம்பிகளை கொத்துக் கொத்தாக இழந்தவன்.

ஓய்ந்திருந்த போதும் பீமசேனன் போருக்கழைத்தவுடன் போர் தர்மத்திற்கிணங்க போரிட்டவன். ஷத்ரியர்கள் விரும்பும் வீர சுவர்க்கம் அடைந்தவன்.

மீண்டும் சொல்கிறேன் பாண்டவர்கள் ஒன்றும் தர்ம சீலர்கள் இல்லை

23 responses so far