கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள்

Archive for the tag 'மரணம்'

மலர்வளையம்

Posted by

நினைவஞ்சலி
நினைவஞ்சலி

எப்படியோ நிகழ்ந்துவிடுகிறது
எதிர்பாராக் கொடுமைகள்
கண்ணெதிரே கண்டவுயிர்
கணப்பொழுதில் காலனோடு
விழியோரம் தொக்கிநிற்கும்
விழிநீரும் உணர்த்திச்செல்லும்
வேரினை பிடுங்கிச் சென்ற
வேதனை உரக்கச் சொல்லும்
வலிகொண்ட மனதிற்கு
மருந்தென்ன? மாற்றென்ன?
விழிமூடிக் கிடந்தாலும்
விட்டத்தை முறைத்தாலும்
வார்த்தைகள் விலகிநிற்கும்
வலியினை உணர்த்துதற்கு
வருடங்கள் உருண்டாலும்
வலியின் வாசம் மட்டும்
விழிக்கருவில் வடு போல
விலகாமல் என்றென்றும்..

5 responses so far

தொடரும் தடுப்பூசி மரணங்கள்

Posted by

ஊசியா? உயிர்கொல்லியா?

திருவள்ளூர் 4
திண்டுக்கல் 1
உத்திரபிரதேசம் 2
தர்மபுரி 1
நெல்லை 1
காட்டுமன்னார்கோயில் 1

முடிந்ததா? தொடருமா?
பிஞ்சு உயிரென்ன
துச்சமா உமக்கு
உம்வீட்டில் நிகழ்ந்தால்
உச்சுகொட்டி நிற்பீரா?
கெஞ்சமாட்டீர்
கதறமாட்டீர்
தடுப்பூசி மருந்தினை
தடைசெய்யமாட்டீர்
ஏன் தாமதம்??
போனது யாரோதானே
பிரியாவும் பூஜாவும்
உமக்கென்ன வேண்டும்?
அரசன் மகளென்ன
ஆண்டி மகளென்ன
உயிர் ஒன்றுதானே
பாசம் ஒன்றுதானே
வலி ஒன்றுதானே
புரியாதா உமக்கு?
தடுப்பூசி எதற்காக?
நோய் தடுக்கத்தானே?
ஊசியே உயிர் குடித்தால்
தவறெங்கே இருக்கிறது?
மருந்திலா? உடம்பிலா?
சல்லிசாய் வாங்கி
சும்மாய் கொடுத்தீர்
சுலபமாய்ப் போனது
பிஞ்சு உயிர்..
போதும் கொடுமைகள்
முற்றுப்புள்ளி வை
உயிர்களை மதி
நேர்மையாய் செயல்படு
மருந்தினை தடைசெய்
யாராயிருந்தாலும்
உயிர் ஒன்றுதான்
இன்று அவர்கள்
நாளை…

4 responses so far

ஒரு தாயின் புலம்பல்..(உயிர்க்கொல்லியா தடுப்பூசி)

Posted by

பிஞ்சுகள்

புள்ள உசுர காக்கத்தானே
தடுப்பு ஊசி போட வந்தேன்..
உசுரையே கொன்னுப்போட்டா
எங்க போயி முறையிடுவேன்..
பூவப்போல சிரிச்ச புள்ள
துவண்டு மேல சரிஞ்சதய்யா..
மழலை பேசும் வாயிலெல்லாம்
நுரை ததும்பி வழிந்ததய்யா..
தத்தித்தத்தி வந்த புள்ள
தடம் புரண்டு கிடக்குதய்யா..
பெத்த மனம் தாங்கல்லியே
சொல்லிச்சொல்லி மாளலியே
என்ன சாக்கு சொல்லப்போற
யார குத்தம் சொல்லப்போற
எம் புள்ள எனக்கு வேணும்
எப்ப திருப்பித் தரப்போற..

புகைப்படம் : நன்றி தினத்தந்தி

2 responses so far

மரணம் (25-01-03)

Posted by

மரணம்
விழிப்பு மறுக்கப்பட்ட ஆழ்துயில்
துக்கங்கள் தொடுவதில்லை
தூக்கமும் கலைவதில்லை
துடிக்க மறுத்த இதயத்தால்
துடித்ததென்னவோ நாங்கள் தான்

மரணம்
மறுக்க இயலாத மலர்மாலை
வேண்டிச் நின்றால் வருவதில்லை
வந்தபின்னர் செல்வதில்லை
தேடிச்சென்றால் பெருமையில்லை
தேடிவந்தால் வரவேற்புமில்லை

மரணம்
சலனம் இல்லாத சாந்தநிலை
இன்ப துன்பம் தெரிவதில்லை
இழப்பும் உனக்கு புரிவதில்லை
மண்ணில் வாழும் காலம் முடிய
மனிதம் அற்றுபோகும் நிலை

மரணம்
மாற்ற முடியாத மாற்றுச் சட்டை
மனித உடல் தேவையில்லை
மண்ணில் இனி வாழ்வதற்கு
மாற்றுச்சட்டை அணிந்தபின்னர்
மீண்டும் மாற்ற முடிவதில்லை

மரணம்
அழைப்பின்றி வரும் விருந்தாளி
வரும் நேரம் தெரிவதில்லை
வந்த கோலம் புரிவதில்லை
போகச் சொல்ல முடிவதில்லை
போன உயிரும் மீள்வதில்லை

மரணம்
மரித்துப் போவதில்லை
மலரின் மரணம்.. கனியின் ஆரம்பம்
அச்சத்தின் மரணம்.. வெற்றியின்ஆரம்பம்
இருட்டின் மரணம்.. வெளிச்சத்தின்ஆரம்பம்
மரணம்
மரிப்பதில்லை நினைவுகள்
மறக்கவில்லை உறவுகள்
முடியவில்லை வார்த்தைகள்
முடிவில்லாத கனவுகள்

No responses yet