கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள் கவிதைகளாய்

புத்தகம் வாசித்தேன் - மகாபாரதம் - பாண்டவர்கள் தருமசீலர்களா?

Filed under புத்தகம் வாசித்தேன் by கீதா

தலைப்பு : மகாபாரதம் (எ) வியாசர் விருந்து

எழுதியவர் : ராஜாஜி (எ) சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி

வானதி பதிப்பகம்

ராஜாஜி அவர்கள் எழுதின மகாபாரதம் (எ) வியாசர் விருந்து படிச்சேன். விறுவிறுன்னு என்ன ஒரு நடை.. என்ன ஒரு விவரிப்பு.. காட்சியெல்லாம் கண்முன்னே விரியுது.. எளிமையான தமிழில் எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதப்பட்ட ஓர் அற்புதமான படைப்பு.

புத்தகத்தை படிச்சு முடிச்சதுமே எனக்கு தோன்றின சில கருத்துக்கள் இங்கே..

பாண்டவர்கள் ஒன்றும் அவ்வளவு தரும சீலர்கள் இல்லை

யுத்தக் களத்தில் அவர்கள் மற்ற வீராதிவீரர்களை ஜெயித்ததெல்லாம் கிருஷ்ணனின் சூழ்ச்சியாலும், நேர்மையற்ற போர் முறைகளாலும், போர் தர்மத்தை மீறியதாலும்தான்.

அர்ச்சுனனின் செயல்கள்

பிதாமகர் பீஷ்மர் - ‘ஒரு பெண்ணை எதிர்த்துப் போர் புரியமாட்டேன்’ என்ற உறுதியுடைய பீஷ்மரை, பெண் ஜன்மமான சிகண்டியை முன்னால் வைத்துக்கொண்டு வீழ்த்தினான் அர்ச்சுனன்.

ஜயத்ரதன் (சிந்து தேசத்து அரசன் ) - தன் மகன் அபிமன்யுவைக் கொன்ற ஜயத்ரதனை அடுத்த சூரிய அஸ்தமனத்திற்குள் வதம் செய்வேன் என்று பிரதிக்ஞை எடுத்திருப்பான் அர்ச்சுனன்.

மறுநாள் சூரியன் அஸ்தமனமாவதற்கு சற்றுநேரம் முன்பே தனது மாயையால் இருள் உண்டாக்கினான் கிருஷ்ணன். சூரியன் அஸ்தமித்துவிட்டான் என்று மகிழ்ந்து நின்றிருந்த ஜயத்ரதனை அம்பிட்டு வீழ்த்தினான் அர்ச்சுனன்.

கர்ணன்- மண்ணில் பதிந்து விட்டிருந்த தேர்ச்சக்கரத்தைத் தூக்கிக் கொண்டிருந்த சமயத்தில், யுத்த தர்மத்திற்கு புறம்பாக கர்ணனை வீழ்த்தினான் அர்ச்சுனன்.
[கர்ணன் வீரன்தான் ஆனால் அவனே சில சமயங்களில் புறமுதுகிட்டு ஓடி இருக்கிறான், துரியோதனனையே தனியே விட்டு. ]

தருமரின் செயல்கள்

துரோணாச்சாரியார் - பீமசேனன் சொல்வது உண்மையா? என் மகன் அஸ்வத்தாமன் இறந்தது உண்மைதானா? என்று சத்திய சீலர் தருமரிடம் வினவினார் துரோணர்.
தருமன் சொன்ன பதில் “அஸ்வத்தாமன் இறந்தது உண்மை.
[உண்மையில் இறந்தது "அஸ்வத்தாமன் என்கிற யானை". ]தருமனும் பொய் சொன்னான்.
துக்கம் மேலிட ரதத்தில் அமர்ந்து யோகநிஷ்டையில் ஆழ்ந்திருக்கும் சமயம் பார்த்து திருஷ்டத்யும்னன் துரோணரின் ரதத்தில் ஏறி அவர் தலையைத் துண்டித்தான்.

முன்பு வனவாசத்தில் இருக்கும்போது நச்சுப்பொய்கையில் நீர் அருந்தி தருமரின் நான்கு தம்பிமார்களும் உயிரிழந்தனர். அங்கு வந்த யக்ஷனின் கேள்விகளுக்கு விடைகூறி பின்னர் தம்பி நகுலனை உயிருடன் தரக் கேட்டான். குந்திக்கு தான் ஒருவனும், மாத்ரிக்கு நகுலன் ஒருவனும் உயிருடன் இருந்தால் சமமாக இருக்கும் என்று தர்மம் சொன்னவன் காந்தாரியின் நூறு புத்திரர்களில் ஒருவரைக்கூட உயிருடன் விடாதது எந்த விதத்தில் தர்மமாகும்? காந்தாரியும் தாய்தானே?

பீமனின் செயல்கள்

துரியோதனன் - நாள் முழுதும் போர் புரிந்து ஓய்ந்துபோய், காயமுற்று, கவசமில்லாமல் இருந்த துரியோதனனை கதாயுத போருக்கு அழைத்தான் பீமசேனன், அதுமட்டுமல்லாமல் கதாயுத போர் சாஸ்திரத்திற்கு விரோதமாக துரியோதனனின் நாபிக்கு கீழ் (தொடையில்) அடித்து வீழ்த்தினான்.

திருதராஷ்டிரன்,காந்தாரி - புத்திரர்களை இழந்த சோகத்தில் இருக்கும் திருதராஷ்டிரனை மேலும் மேலும் தன் சுடுசொற்களால் குத்தி மனதைப் புண்படுத்தினான் பீமசேனன். இதனால் அவர் தன் மனைவி காந்தாரியுடன் வனவாசம் சென்றார், உடன் குந்திதேவியும் சென்றார்.

பஞ்ச பாண்டவர்களைச் சார்ந்தவர்களின் செயல்கள்

பூரிசிரவசு - துண்டிக்கப்பட்ட கையுடன் யோக நிலையில் இருந்தவனை வெட்டிக் கொன்றான் சாத்யகி.

முடிவாக நான் சொல்றது என்னன்னா

இதுபோல பல சமய சந்தர்ப்பங்களில் பாண்டவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் தருமத்துக்கு புறம்பாகவும், நேர்மையில்லாமலும், மனிதத்தன்மையற்றும், பிறர் மனதை புண்படுத்தியும், சூழ்ச்சியுடனும் செயல்பட்டனர். இப்படி இருக்க இவர்களை மட்டும் கொண்டாடுவது ஏன்?

என்னதான் சூழ்ச்சியால் சூதாடுவதற்கு வரவழைக்கப்பட்டாலும் மதியிழந்து மனைவியையும் தம்பிமார்களையும் சூதாட்டத்தில் தோற்றது யார் குற்றம்?

என்னைப் பொறுத்தவரையில் துரியோதனன் மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாதவன். இராஜ்ஜிய பதவியை அடைய பல விதங்களில் முயற்சி செய்தான்.. பாண்டவர்களுக்கு துன்பமிழைத்தான்.. ஆனாலும் யுத்தக்களத்தில் பாண்டவர்கள் போலல்லாமல் சுத்த வீரானாகவே நடந்துகொண்டான்.

நட்புக்கு இலக்கணமானவன். போர்க்களத்தில் நண்பன் கர்ணனுக்கு துணைபுரியவேண்டி தன் தம்பிகளை கொத்துக் கொத்தாக இழந்தவன்.

ஓய்ந்திருந்த போதும் பீமசேனன் போருக்கழைத்தவுடன் போர் தர்மத்திற்கிணங்க போரிட்டவன். ஷத்ரியர்கள் விரும்பும் வீர சுவர்க்கம் அடைந்தவன்.

மீண்டும் சொல்கிறேன் பாண்டவர்கள் ஒன்றும் தர்ம சீலர்கள் இல்லை

16 Responses to “புத்தகம் வாசித்தேன் - மகாபாரதம் - பாண்டவர்கள் தருமசீலர்களா?”

  1. 1 lalitha con 09 May 2008 at 2:12 pm

    mahabharatham oru kathai. eppadi vendumanalum eluthalam.
    arivulla nalla karuthukkalai matum eduththuk kollavendum.kirishnavin soolchiyal venravarkalthane. ungal karuththuthan enakkum. aanaal yarum sonnal ketka mattarkal. nammaik kurai solluvarkal. I don`t want this story in school books. panjali eppadi ivarin manaivi enra kelvi ketkum ikkalak kulanthaikalukku enna pathil solvathu enru thikaithu ninraval naan. thanks geetha.

  2. 2 கீதாon 10 May 2008 at 6:51 pm

    வணக்கம் லலிதா,

    மகாபாரத்தில் உள்ள படிப்பினைகள் நன்றாகத்தான் இருக்கிறது. நல்லதை எடுத்துக்கொண்டு அல்லதை விடவேண்டியதுதான்.. இருந்தாலும் புத்தகம் படித்தபின்பு மனதை நெருடிய விஷயங்களில் சிலவற்றை இங்கு பதிந்தேன் அவ்வளவே…

    மற்றபடி கள்ளன் என்றும், மாயன் என்றும், திருடன் என்றும் செல்லமாக அழைக்கப்படும், வணங்கப்படும் கிருஷ்ணன் அவதாரமா? அல்லது வெறும் பாத்திரமா? தெரியலியேப்பா…

    அன்புடன்
    கீதா

  3. 3 டோண்டு ராகவன்on 10 May 2008 at 9:30 pm

    நல்லவர்களா கெட்டவர்களா என்பதை ஒட்டுமொத்தமாகத்தான் பார்க்க வேண்டும். நீங்கள் பாண்டவர்களின் தவறுகளாக கூறியவை அத்தனையுமே போர்க்களத்திலே செய்யப்பட்டவை. ஒரு முன் தீர்மானத்துடனேயே இப்பதிவை எழுத முயன்றீர்கள் என நினைக்கிறேன்.

    போர் முறை தர்மங்களை முதலில் மீறியது துரியனே. நீங்கள் பாண்டவர்களால் செய்யப்பட்டதாக கூறப்பட்ட அதர்ம யுத்த செயல்கள் எல்லாமே அபிமன்யுவின் வதத்துக்கு பிறகுதான் வந்தது, பீஷ்மர் விஷயம் தவிர. அபிமன்யுவை எத்தனை மகாரதர்கள் எப்படி கொன்றனர் என்பதைப் பார்த்துமா துரியன் நியாயவான் என கூறுகிறீர்கள்?

    பீஷ்மர் விஷயமும் அவரே சொல்லித்தான் நடந்தது. அவருக்கு சுய இச்சை மரணம்தான். ஆகவே அவர் வெல்ல முடியாதவர். அதே சமயம் தனது சபதம் காரணமாக துரியன் பக்கம் இருக்கும் நிர்ப்பந்தத்துக்கு ஆளானவர். அவரே யுதிஷ்டிரரிடம் கோடி காட்டுகிறார், பெண் எதிரில் நின்றால் யுத்தம் செய்ய மாட்டார் என்று. இத்தனைக்கும் சிகண்டி யுத்தம் செய்த சமயம் ஆண்தான். பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவன். அவனும் மகாரதர்களில் ஒருவன். பூர்வ ஜன்மத்தில் அம்பையாக பிறந்து, பீஷ்மரின் குருட்டுத்தன மடச்செய்கையால் அலைக்கழிக்கப்பட்டவள். அவள் பீஷ்மரை கொல்ல சபதம் செய்தவள். அதற்காக பரமசிவனிடம் யாகம் செய்து அடுத்த பிறவியில் பீஷ்மரை கொல்லும் வரம் பெற்று உயிர்த்தியாகம் செய்து மறு பிறவி எய்தியவள். அவள் அப்பிறவியிலும் பெண்ணாகப் பிறந்ததே ஒரு விதியாகத்தான் பார்க்க வேண்டும். அவளை ஆணாகப் பிறப்பிக்க சிவபெருமானால் முடிந்திருக்காதா? ஆக எல்லாவற்றையும் பல பரிமாணங்களில் பார்க்க வேண்டும். எனவே பீஷ்மரின் மரணம் ஒரு விதிதான். அதுவும் அவர் போர்க்களத்தில் கொல்லப்படவில்லை. உத்தராயாணம் வரை இருந்து எல்லோருக்கும் ஆசி கூறிவிட்டுத்தான் போகிறார். பீஷ்மரின் தர்ம சங்கடத்தை பற்றி நான் போட்ட பதிவு http://dondu.blogspot.com/2007/11/blog-post_12.html

    இப்போது துரோணர் வதத்துக்கு வருவோம். துரோணரும் அபிமன்யுவின் வதம் போது ஒன்றும் தர்மமாக யுத்தம் புரியவில்லை. மேலும் அவர் பிரும்மாஸ்திரத்தை செலுத்துவதாக இருந்தார். அது எவ்வளவு அழுகினி ஆட்டம் என்பதை அறிவீர்களா? அதனால் வரும் கேடு அணு ஆயுதங்களால் வரும் கேட்டை போன்றது. அதை தடுத்தேயாக வேண்டும். ஆகவே “அசுவத்தாமா ஹதஹ குஞ்சரஹ” என கூற வேண்டியதாயிற்று. அது பற்றி நான் போட்ட பதிவு http://dondu.blogspot.com/2007/11/blog-post_15.html

    ஆக, போர் என்று வந்துவிட்டால் அதர்மங்கள் இருதரப்பிலிருந்துமே ஏற்படும். நீங்கள் அதில் பாண்டவர்களை மட்டும் குறை கூறுவது சரி அல்ல. சரி முதலிலுருந்தே வருவோமா. துரியன் சிறுவனாக இருந்தபோதே பீமனுக்கு விஷம் கொடுத்ததை பற்றி என்ன கூறுவீர்கள்? அதே போல அரக்கு மாளிகை? அதே போல பாண்டவர்களை வனவாசத்தின் போது துன்புறுத்த எண்ணி துர்வாசரை அனுப்பியது, யட்சர்களிடம் அவன் மாட்டிக் கொண்டபோது தருமனால் காப்பாற்றப்பட்டது என்று பல நிகழ்ச்சிகளைப் பார்த்தால் உங்களுக்கு ஒரு சமநிலை ஏற்படவேண்டுமே.

    100 கௌரவர்களும் கொல்லப்பட்டது யுத்தத்தில், அதுவும் பீமானாலேயே நிறைவேற்றப்பட்டது. தன் மகனை கண்ட்ரோல் செய்யாமல் போனதால் காந்தாரியும் திருதராஷ்டிரனும் கொடுத்த விலை அது. துரோபதையை மானபங்கப்படுத்தியதை எவ்வாறு நியாயப் படுத்துவீர்கள்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  4. 4 கீதாon 11 May 2008 at 1:55 am

    வணக்கம் டோண்டு ராகவன் ஐயா

    நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல அந்தப் புத்தகத்தைப் படித்து முடித்ததும் என் மனதில் நின்ற, எனக்கு நெருடலாகத் தோன்றின கருத்துக்களைத்தான் பதிந்திருக்கின்றேன்..

    இதுவரையில் பாண்டவர்களென்றால் தருமவான்கள் என்றும் துரியோதனன் மிகத்தீயவன் என்றும் தான் பாடபுத்தகங்களிலும் சில மகாபாரதத் தொடர்களிலும் கண்டு கேட்டு அறிந்திருந்தேன். துரியோதனனைப் பற்றிச் சொல்லும்போது அவனின் தீய செயல்களைத்தான் சொல்கிறார்கள், அதே போல பாண்டவர்களைப் பற்றிச் சொல்லும்போது அவர்கள் செய்த நற்செயல்களைத்தான் சொல்கிறார்கள்.. பாண்டவர்களும் இத்தகு அதர்ம செயல்களைச் செய்திருந்தார்கள் என்பது இதுவரையில் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இப்பொழுது முதன் முறையாக முழுமையாகப் படித்ததும் எனக்குத் தோன்றின கேள்விதான் பாண்டவர்களை மட்டும் நல்லவர்கள் என்று கொண்டாடுவது ஏன்? என்பது.

    நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து நிகழ்ச்சிகளும் ஓரளவிற்கு நன்றாகவே நினைவிருக்கிறது [ சிகண்டி வரலாறு, அபிமன்யு வதம்,பீமனுக்கு விஷம் கொடுத்தது, அரக்கு மாளிகை,வனவாசம்... ]. பாண்டவர்களும் அதர்ம செயல்களில் ஈடுபட்டார்கள் என்றுதானே நானும் சொன்னேன்… துரியோதனன் அதர்மசெயல்கள் செய்யவில்லை என்று நான் ஒருபோதும் கூறவில்லை.

    மற்றபடி எந்த விதி சிகண்டியை பெண்ணாக பிறப்பித்து ஆணாக மாற்றி பீஷ்மரின் மரணத்திற்கு காரணமாக இருந்ததோ அதே விதிதான் துரோபதையை மானபங்கப்படுதுவதற்கும், மகாபாரதப் போர் தொடங்குவதற்குமான காரணமாக இருக்குமென்று நினைக்கின்றேன்.

    எனக்குத் தெரிந்ததை, புரிந்ததை எமை சார்ந்த மக்களுக்குத் தெரிவிக்க வேண்டி எழுதினேன். இவை என் கருத்துக்கள். உண்மையில் தவறென்றால் திருத்திக்கொள்வேன்..

    வருகைக்கு நன்றி ஐயா

    அன்புடன்
    கீதா

  5. 5 இறைவன்on 11 May 2008 at 3:46 am

    உண்மைதான் அவர்களும் மானிட பிறவியே அதனால் வெற்றி மட்டுமே குறிக்கோளாக செயல்பட்டனர் டோண்டுவின் விளக்கங்களும் கருத்தில் கொள்ளவேண்டியவை

  6. 6 கீதாon 11 May 2008 at 8:48 am

    வணக்கம் இறைவன்

    உங்கள் கருத்துக்கு நன்றி. டோண்டு அவர்களின் விளக்கங்களை நிச்சயம் மனதில் கொள்வேன்.

    அன்புடன்
    கீதா

  7. 7 tamizbalanon 16 May 2008 at 5:44 am

    கர்ணன் எப்போது புறமுதுகிட்டு ஓடினான் என்று கூற முடியுமா.
    பாண்டவர்கள் தன் தம்பிகள் என்று தெரிந்தும். துரியோதனனுக்காக‌
    அனைத்து உண்ர்ச்சிகளையும் தன்னுள் அடக்கி வாழ்ந்தவன். அவன்
    எப்படி துரியோதனை தனியே விட்டு சென்று இருக்க முடியுமா?
    சிந்தித்து பதில் கூறவும் கீதா அக்கா. இல்லையேன்றால் அவன்
    நீங்கள் சொல்வதை போல் சுயந‌லம் கொண்டவனாக இருந்திருப்பவனானால்
    தன் தம்பிகளிடம் போய் நான் தான் உங்களுடைய அண்ணன் என்று
    கூறி மணிமகுடம் ஏற்றிருக்கலாம் அல்லவா?
    உயிருக்காக‌ பயந்தவன் என்றால் குந்தி இடம் ஒரு முறை மட்டுமே
    நாகாச்சிரத்தை பயன்படுத்துவேன் என்று உறுதி கொடுத்திருப்பானா?

  8. 8 கீதாon 16 May 2008 at 8:37 am

    வணக்கம் தம்பி,

    பாண்டவர்களை வசைபாடவோ அல்லது துரியோதனாதர்களை வசைபாடவோ நான் இந்தப் பதிவை எழுதவில்லை. மகாபாரதம் என்ற புத்தகத்தைப் படித்தபின் என் மனதிலிருந்த கருத்துக்களைக் கூறினேன் அவ்வளவே.

    கர்ணனை நான் சுயநலவாதியென்றோ, வீரமில்லாதவனென்றோ கூறவில்லை தம்பி. அவனும் புறமுதுகிட்டு ஓடியிருக்கிறான் என்றுதானே கூறினேன்.

    நீங்கள் கேட்பதால் அந்த நிகழ்ச்சியைக் கூறுகிறேன்.

    பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தசமயம் அவர்கள் துன்பப்படுவதை நேரில் கண்டு மகிழ ஆசைப்பட்ட துரியோதனன் தானும் ஒரு பெரிய சேனையோடு துவைத வனம் சென்றான்.

    துவைத வனத்தில் பாண்டவர்களுடைய ஆசிரமத்துக்கு வெகு சமீபத்தில் இருந்த தடாகத்தருகே தனது சேனையுடன் தங்க விழைந்தான்.. ஆனால் அங்கு ஏற்கனவே தங்கியிருந்த கந்தர்வராஜன் சித்திரசேனனுடன் மோதல் ஏற்பட்டு போராகி அந்த கந்தர்வகளின் மாயையை தாக்குப்பிடிக்க முடியாமல் துரியோதனனைத் தவிர மற்ற அனைவரும் கர்ணன் உட்பட புறமுதுகிட்டனர். பின்னர் தர்மரின் கட்டளையின் பேரில் பாண்டவர்கள் வந்து துரியோதனனை மீட்டனர்.

    புறங்காட்டி ஓடிய கர்ணன் துரியோதனனை வழியில் சந்தித்தபோது துரியோதனன் சொன்னான்..” கர்ணனே!நான் அந்த சித்திரசேனனால் கொல்லப்பட்டு மாண்டு போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்று.

    -

    தம்பி இது பாண்டவர்களின் வனவாசடத்தின்போது நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது.

    தம்பி மறுபடி என் பதிவை படித்துப் பாருங்கள்.. நான் யாரையும் தவறாக எழுதவில்லை.

    அன்புடன்
    கீதா

  9. 9 டோண்டு ராகவன்on 16 May 2008 at 8:56 am

    பாண்டவர்கள் வனவாசத்தின்போது அவர்களி சீண்டி கேலி செய்யும் பொருட்டு கர்ணன், துரியன் ஆகியோர் காட்டுக்கு சென்றனர். போன இடத்தில் யட்சர்களுடன் ஏற்பட்ட சண்டையில் துரியன் சிறை பிடிக்கப்பட்டான், கர்ணன் போரிடமுடியாது தோற்று ஓடினான்.

    பீமனும் அருச்சுனனும் நன்றாக வேண்டும் துரியனுக்கு என மனம் மகிழ்ந்தபோது தருமன் அவர்களை கண்டித்து துரியனை சிறை மீட்கச் செய்தான்.

    மகாபாரதம் சீரியலாக வந்தபோது கர்ணன் குடி போதையில் இருந்ததாகவும், ஆகவே சண்டை போட இயலவில்லை என்றும், போதை தெளிந்து வருவதற்குள் பீம அருச்சுனர்கள் துரியனைக் காப்பாற்றியதாக காட்டப்பட்டது.

    //பாண்டவர்களுக்கு துன்பமிழைத்தான்.. ஆனாலும் யுத்தக்களத்தில் பாண்டவர்கள் போலல்லாமல் சுத்த வீரானாகவே நடந்துகொண்டான்.//
    எப்படி? அபிமன்யு வதத்தை மறந்து விட்டீர்களே? என்னதான் இருந்தாலும் துரியன் பாசம் இப்படி கண்ணை மறைக்கக் கூடாது.

    ஜயத்திரதன் வீரனாக இருந்தால் எதிர்த்து சண்டை போட்டிருக்க வேண்டும். கோழை மாதிரி ஒளிந்தவனுக்கு சரியான முறையில்தான் தண்டனை கிடைத்தது. அதிலும் அவன் தலையை கீழே விழ்ழ்த்துபவரது தலை சுக்கு நூறாய் வெடிக்கும் என்ற அழுகினி வரம் வேறு. அதையும் மீறி அருச்சுனன் ஜெயத்திரதன் தலையை கொய்து அவன் தந்தையின் கைகளில் விழச்செய்து அவன் கையிலிருந்து நழுவச் செய்து தந்தையையும் கொன்றான்.

    ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள். எதிராளி அழுகினி ஆட்டம் தொடங்கினால் நாமும் பார்த்து கொண்டே இருக்கக் கூடாது என்பதுவும் மகாபாரதத்தின் நீதிதான்.

    மறுபடி கூறுவேன் அழுகினி ஆட்டம் ஆரம்பித்தது துரியனே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  10. 10 கீதாon 16 May 2008 at 10:45 am

    வணக்கம் டோண்டு ராகவன் அவர்களே,

    தனியாக மாட்டிய அபிமன்யுவை மகாரதர்கள் சூழ்ந்துகொண்டு கொன்ற கொடூரத்தை மறக்கவில்லை நான்.

    ‘துரியோதனன் பாசம்’ என்று ஏதோ எழுதுகிறீர்கள்.

    மறுபடியும் சொல்கிறேன்… பாண்டவர்களும் தர்மம் தவறி நடந்துகொண்டார்கள் என்று நான் தெரிந்துகொண்டதைச் சொல்ல விழைந்தேன்.

    மகாபாரதத்தின் நீதி பற்றியோ, அழிகினி ஆட்டம் ஆரம்பித்தது யார் என்பதைப் பற்றியோ பேசவோ விவாதிக்கவோ நான் இந்தப் பதிவை இடவில்லை.

    இவ்வாறான விவாதங்களில் ஈடுபடுவதில் எனக்கு விருப்பமும் இல்லை.

    நன்றி

    கீதா

  11. 11 டோண்டு ராகவன்on 16 May 2008 at 11:03 am

    துரியன் பாண்டவர்களை போலல்லாது சுத்த வீரனாக நடந்து கொண்டான் என்று எழுதியதாலேயே அவ்வாறு எழுத வேண்டியிருந்தது.

    நான் ஏற்கனவே கூறியபடி ஒட்டு மொத்தமாகத்தான் ஒப்பிட வேண்டும். அப்படி பார்த்தால் பாண்டவர்களிடம் தருமம் அதிகமாகவும் அதர்மம் குறைவாகவும் இருந்தது, கௌரவர்களிடம் அதன் நேர் எதிர் நிலை இருந்தது. அவ்வளவே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  12. 12 கீதாon 16 May 2008 at 11:19 am

    வணக்கம் டோண்டு ராகவன் அவர்களே

    //பாண்டவர்களிடம் தருமம் அதிகமாகவும் அதர்மம் குறைவாகவும் இருந்தது, கௌரவர்களிடம் அதன் நேர் எதிர் நிலை இருந்தது.//

    இது உண்மை. ஏறக்குறைய இதுபோன்ற ஒரு கருத்தைத் தான் நானும் சொல்ல முயன்றேன். பாண்டவர்களின் அதர்மங்களும், துரியோதனனின் தர்மங்களும் எனக்கு புதியதாகப் பட்டதனால் எழுதினேன். வார்த்தைகளின் வெளிப்பாட்டில் நான் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

    உங்கள் வருகைக்கும், வழங்கிய கருத்துக்களுக்கும் நன்றி

    அன்புடன்
    கீதா

  13. 13 டோண்டு ராகவன்on 16 May 2008 at 11:26 am

    எனக்கு புரிகிறது கீதா அவர்களே. நீங்கள் முதன் முறையாக மகாபாரதத்தை ஒரே மூச்சில் படித்து, அதுவரை 100% தர்மவான்கள் என்று எண்ணிய பாண்டவர்களை பற்றி மாறுபாடான செய்தி கிடைக்கவே உணர்ச்சி வசப்பட்டீர்கள் என்பதை புரிந்து கொள்கிறேன்.

    மகாபாரதத்தில் வெற்றி பெற்ற பாண்டவர்கள் சந்தோஷமாகவே இல்லை. அரசுக்காக அவ்வளவு உறவினர்களை கொன்றதை அவர்களாலும் ஜீரணிக்க முடியவில்லை. ராஜாஜி இது பற்றி எழுதியிருப்பதை நினைவிலிருந்து தருகிறேன்.

    “என்னதான் பகவத் கீதை உபதேசம் அளித்து அருச்சுனன் மனதை மாற்றியிருந்தாலும், அவனது முதல் சந்தேகம், அதாவது இத்தனைப் பேரையும் கொன்று நாடு தேவைதானா, நிஜமாக ஆயிற்று. பாண்டவர்கள் மனதில் சந்தோஷம் என்பதே இல்லை”.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  14. 14 சில்வண்டுon 18 May 2008 at 4:46 pm

    கீதா அவர்களே,

    உங்கள் பதிவினை படித்தது வண்டு. உங்கள் மனதில் தோன்றிய நெருடல்கள் வண்டிற்கும் நெருடல் தந்தவையே… அற நெறிகளை போதிக்க உருவாக்கப்பட்ட இதிகாசத்தில் ஏன் இத்தனை நெருடல்கள் என வியக்கிறேன். இதை குறித்து எவரேனும் விளக்குவரோ என பல காலம் காத்திருந்தும் யாரும் விளக்கவில்லை!

    என் நெருடல்களை நானும் என் பக்கத்தில் பதிந்திருக்கிறேன். உங்கள் கருத்தோடு நானும் ஒத்துப்போகிறேன். கருத்தொத்த ஒருவரை கண்டதில் மகிழ்வுற்றதால் ஒரு வரி இங்கே எழுதிட நினைத்து இதை எழுதிட்டேன்.

    உங்கள் மற்ற படைப்புகளையும் பார்த்தேன். மகிழ்ந்தேன். அதும் அம்மா குறித்த உங்கள் கவிதை, அதை குறித்து அங்கே எழுதுகிறேன்.

    இங்கே, உங்களைப்போல் என் நெருடல்களை நான் பதித்த பக்கத்திற்கு உங்களை அன்போடு அழைக்கிறேன், வந்தீர்களேயாயின் மகிழ்வேன்!

    http://sillvandu.blogspot.com/2007/01/vs.html

    அன்புடன்,
    வண்டு… சில்வண்டு!

  15. 15 கீதாon 19 May 2008 at 8:49 am

    உங்கள் கருத்துக்கு மனமார்ந்த நன்றி

    அன்புடன்
    கீதா

  16. 16 சில்வண்டு!on 24 May 2008 at 5:22 pm

    இல்லையே.. கீதா அவர்களே…

    என் கருத்துக்கு மனமார்ந்த நன்றி என்று இங்கே உங்கள் பக்கத்தில் நீங்கள் அளித்திருக்கும் பதிலையும், மறுமொழி கிடைத்ததா என்று கேட்டு என் பக்கத்தில் விடுத்திருக்கும் மொழியையும் தவிர வேறு ஏதும் கிடைக்கப்பெறவில்லையே?

    அந்த மறுமொழியை மறு முறை பெற இயலுமா என்ற கவலையோடு,

    சில்வண்டு!

Trackback URI | Comments RSS

Leave a Reply