Oct062006
மரணம் (25-01-03)
Filed under அ) கவிதைகள் by admin
மரணம்
விழிப்பு மறுக்கப்பட்ட ஆழ்துயில்
துக்கங்கள் தொடுவதில்லை
தூக்கமும் கலைவதில்லை
துடிக்க மறுத்த இதயத்தால்
துடித்ததென்னவோ நாங்கள் தான்
மரணம்
மறுக்க இயலாத மலர்மாலை
வேண்டிச் நின்றால் வருவதில்லை
வந்தபின்னர் செல்வதில்லை
தேடிச்சென்றால் பெருமையில்லை
தேடிவந்தால் வரவேற்புமில்லை
மரணம்
சலனம் இல்லாத சாந்தநிலை
இன்ப துன்பம் தெரிவதில்லை
இழப்பும் உனக்கு புரிவதில்லை
மண்ணில் வாழும் காலம் முடிய
மனிதம் அற்றுபோகும் நிலை
மரணம்
மாற்ற முடியாத மாற்றுச் சட்டை
மனித உடல் தேவையில்லை
மண்ணில் இனி வாழ்வதற்கு
மாற்றுச்சட்டை அணிந்தபின்னர்
மீண்டும் மாற்ற முடிவதில்லை
மரணம்
அழைப்பின்றி வரும் விருந்தாளி
வரும் நேரம் தெரிவதில்லை
வந்த கோலம் புரிவதில்லை
போகச் சொல்ல முடிவதில்லை
போன உயிரும் மீள்வதில்லை
மரணம்
மரித்துப் போவதில்லை
மலரின் மரணம்.. கனியின் ஆரம்பம்
அச்சத்தின் மரணம்.. வெற்றியின்ஆரம்பம்
இருட்டின் மரணம்.. வெளிச்சத்தின்ஆரம்பம்
மரணம்
மரிப்பதில்லை நினைவுகள்
மறக்கவில்லை உறவுகள்
முடியவில்லை வார்த்தைகள்
முடிவில்லாத கனவுகள்