கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள் கவிதைகளாய்

Archive for the 'அ) கவிதைகள்' Category

பதின்ம வயது

Posted by கீதா

இருட்டின் வெளிச்சத்தில்
தோன்றும் விண்மீனாய்
பதின்ம வயதுகளில்
பூப்பூக்கும் கனவுகள்
அழகான அலைகடலில்
ஆர்ப்பரிக்கும் பேரலையாய்
பருவச் சுரப்பி வசம்
அதிரடி ஆட்சிமாற்றம்
எதிர்பாராத் தாக்குதலால்
ஏதேதோ மாற்றங்கள்
அன்பான உறவுகளும்
அன்னியமாய்த் தெரிந்தன
அருகிருக்கும் எல்லோரும்
அறிவிலியாய்த் தோன்றினர்
அக்கறையின் அரவணைப்பும்
அணைக்கட்டாய் உறுத்தின
அறிவுரைகள் செவிகட்கே
அத்தியெனக் கசந்தன
புரிதலே இல்லையென்று
புலம்பிட வைத்தன
பெரிசுகள் தொல்லையென்று
போர்க்கொடி எழுப்பின
விரும்பின வாழ்க்கைத்தேடி
வெகுளியாய் உலகில் ஓடி
தாக்கின நிஜத்தின் வலியில்
தடைகளின் தடயம் புரிய..
அதைக் கடந்து போராடி
அனுபவத்தால் ஆளாக
நான் பட்ட இன்னல்கள்
நாள்தோறும் எனக்குச் சொல்லும்
பேருண்மை என்னவென்று
பெரியோர் சொல் வேதமென்று
………..
யான் பெற்ற துன்பங்கள்
நீ பெறவே வேண்டாமென்று
கற்று வந்த பாடங்களைக்
கனிவுடனே எடுத்துச் சொன்னால்
தலைமுறை இடைவெளியென
தள்ளியிருக்கச் சொன்னாய்
பதின்ம வயதென்றாலே
பட்டால்தான் புரியுமோ?

8 responses so far

அடுப்பங்கரை

Posted by கீதா

மண்ணடுப்பு/கல்லடுப்பு

சுள்ளி பொறுக்கி வெறகு வெட்டி
தென்ன மட்டய காயவச்சி
வெறக நல்லா பொளந்துவச்சி
அடுப்பில் நுழைச்சி பத்தவச்சி
எண்ணை ஊத்தி எரியவச்சி
மண் சட்டிய ஏத்தி வச்சி
ஊதி ஊதி இருமி இருமி
வறட்டி புகைய விரட்டி விரட்டி
கண்ணைக் கசக்கி வாயப்பொத்தி
அல்லும் பகலும் அனலில் வெந்து
அமுதமுதாய்ச் சமைச்சிடுவ..

ரேஷன் கடை வாசல் போயிமண்ணெண்ணை ஸ்டவ்
காலு வலிக்க கியூவில் நின்னு
மண்ணெண்ணை வாங்கி வந்து
பம்ப்பு ஸ்டவ்வில் ஊத்தி ஊத்தி
கையெல்லாம் வலிக்க வலிக்க
பிடியை இழுத்து அடித்து அடித்து
அடைப்பை எடுத்து பத்தவச்சி
இருப்புச் சட்டிய மேல வச்சி
அடுப்புச் சத்தம் காதை அடைக்க
அடுக்களையில் அருகில் இருந்து
ருசி ருசியா சமைச்சிடுவ…

கேஸ் ஸ்டவ்வு, மைக்ரோ வேவ்வு,நவீன மின்சார அடுப்பு
தணல் அடுப்பு தந்தூரி
மின்சாரம் இயக்கும் அடுப்பு
சூரியனே சமைக்கும் அடுப்பு
அடுக்கடுக்கா அடுப்புகளும்
அடுத்த கட்டம் போயிருச்சி
அழகழகா மாறிடுச்சி
சட்டி பானை கூட்டங்கூட
நான் ஸ்டிக்கா மாறிடிச்சி
எத்தனையோ தெரிஞ்சிரிந்தும்
உன் திறமைய புதைச்சிவச்சி
உன் மகிழ்வ மறைச்சிவச்சி
அடுக்களையில் சமைச்சி சமைச்சி
அதுக்குள்ளே புழங்கி புழுங்கி
உன் உலகே சுருங்கிருச்சி
உன் உசுருகூட கருத்துரிச்சி..

7 responses so far

மலர்வளையம்

Posted by கீதா

நினைவஞ்சலி
நினைவஞ்சலி

எப்படியோ நிகழ்ந்துவிடுகிறது
எதிர்பாராக் கொடுமைகள்
கண்ணெதிரே கண்டவுயிர்
கணப்பொழுதில் காலனோடு
விழியோரம் தொக்கிநிற்கும்
விழிநீரும் உணர்த்திச்செல்லும்
வேரினை பிடுங்கிச் சென்ற
வேதனை உரக்கச் சொல்லும்
வலிகொண்ட மனதிற்கு
மருந்தென்ன? மாற்றென்ன?
விழிமூடிக் கிடந்தாலும்
விட்டத்தை முறைத்தாலும்
வார்த்தைகள் விலகிநிற்கும்
வலியினை உணர்த்துதற்கு
வருடங்கள் உருண்டாலும்
வலியின் வாசம் மட்டும்
விழிக்கருவில் வடு போல
விலகாமல் என்றென்றும்..

5 responses so far

அருமை அம்மாவுக்கு..

Posted by கீதா

தாயுள்ளம் கொண்ட அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
******

என்ன எழுதுவதம்மாஅம்மா நிவி
எதை எழுத நான்
அம்மா
என்றழைப்பதில்தான்
எத்தனை சுகமெனக்கு..
உன் புடவைத் தலைப்புக்குள்
ஒளிந்து கொண்டிருப்பேனே..
உன் மடிமீது தலைவைத்து
உறங்கிப் போவேனே..
உன் கையால் சோறுண்ண
நடுநிசியில் விழிப்பேனே..
வேலைக்கு நீ சென்றால்கூட
வாசலிலேயே படுத்திருப்பேன்
தெருமுனையில் உன்முகத்தை
காணவேண்டித் தவமிருப்பேன்..
பண்டிகையோ விடுமுறையோ
உனக்கெல்லாம் அடுப்படிதான்
உனக்கெது பிடித்தாலூம்
எனக்கு உண்ணத் தந்திடுவாய்
எனக்கொரு நோயென்றால்
ஊருக்கே தெரிந்துவிடும்
உனக்கொரு நோயென்றால்
உள்ளுக்குள் புதைத்திடுவாய்
உனக்கான துயரங்கள்
யாருக்கும் தெரிந்ததில்லை
நோயுற்ற காலத்திலும்
கடமையில் தவறியதில்லை
அம்மா அப்பா
எனை விட்டு ஒருநாளும்
பிரிந்திருக்க மாட்டாயே
எப்படியம்மா தாங்கினாய்
பல்லாயிரம் மைல் பிரிவை..
உன்னருமை தெரியுமம்மா
பிள்ளையொன்று வந்தபின்பு
இன்னுமின்னும் புரியுதம்மா
அம்மாவாய் ஆகவேண்டி
ஈன்றால் மட்டும் போதுமா
தவம் செய்வேண்டுமம்மா
அம்மா எனும் வார்த்தைக்கு
வாழும் அர்த்தம் நீ
அம்மா.. அன்பின் உருவமே
கனிவூறும் கண்களே
உன் அறிவும் அருளும்
கருணையும் கம்பீரமும்
திடமும் தியாகமும்
சகிப்புத்தன்மையும் சாந்தமும்
பொறுப்பும் பொறுமையும்
மென்மையும் மேன்மையும்
எனக்கு வராதம்மா..
மெச்சுகிறேனம்மா…
வியக்கிறேன் உன்னைக்கண்டு..
அம்மா நிவி அப்பா
அருமை அம்மா..
உன்னைக் கட்டிக்கொண்டு
உன்னருகில் தூங்கி
உன் முகத்தில் விழித்து
உன்னிடம் திட்டுவாங்கி
உன்னிடம் கோபித்து
உன்னுடன் விளையாடி
உன் செல்ல மகளாய்
உன்னுடனே இருக்கவேண்டும்
காத்திருக்கிறேனம்மா…
உன் மகளாய்…

*********

19 responses so far

கோக்

Posted by கீதா

அனுதினமும் உறிஞ்சியதால்
காலியானது
நிலத்தடி நீர்

[இதுவும் மீள் பதிவு..2 வருடம் முன்பு எழுதினது. அப்போ கோக்/தண்ணீர் பிரச்சனை ரொம்ப பெரிசா இருந்தது.
என் கவிதைகள் சிலது அழிஞ்சிடுச்சிங்க.. நியாபகம் இருக்கிறதை மறுபடி போட்றேன்]

No responses yet

கூகுளாண்டவனே சரணம் இண்டர்நெட்டே

Posted by கீதா

கூகுளாண்டவனே சரணம் இண்டர்நெட்டே??

சமையல் குறிப்புக்கு சன்னதி நீ
சமயத்தில் பாதைக்கு வழிகாட்டி நீ
புரியாத வார்த்தைக்கு அகராதி நீ
தெரியாத விபரங்கள் தெரிவிப்பாய் நீ

அறியாத ஊருக்கு அட்லசும் நீ
படிக்காத பாஷைக்கு பண்டிதனும் நீ
தளங்களின் புள்ளியியல் நிபுணரும் நீ
மறுமொழி மயக்கத்தின் மாயமும் நீ

உலகிய நட்பினுக்கு வாசலும் நீ
வாசல்வெளி நட்புக்கு தாழ்ப்பாளும் நீ
காதலுக்கு தூதாகச் செல்பவனும் நீ
சாதலுக்கும் பலவழிகள் சொல்பவனும் நீ

அயல்நாட்டில் அன்னைமுகம் காட்டுபவன் நீ
அருகேயே இருப்போரை மறைப்பவனும் நீ
ஊருலக செய்தியெல்லாம் சொல்பவனும் நீ
உள்ளறையில் நிகழுவதை ஒளிப்பவனும் நீ

உலகினையே வீட்டுக்குள் விரித்தவனும் நீ
உனக்குள்ளே என்னுலகை முடக்கியதும் நீ

ஆண்டவன் புகழை அனைவரும் பாட வாரீர்!!!

7 responses so far

தொடரும் தடுப்பூசி மரணங்கள்

Posted by கீதா

ஊசியா? உயிர்கொல்லியா?

திருவள்ளூர் 4
திண்டுக்கல் 1
உத்திரபிரதேசம் 2
தர்மபுரி 1
நெல்லை 1
காட்டுமன்னார்கோயில் 1

முடிந்ததா? தொடருமா?
பிஞ்சு உயிரென்ன
துச்சமா உமக்கு
உம்வீட்டில் நிகழ்ந்தால்
உச்சுகொட்டி நிற்பீரா?
கெஞ்சமாட்டீர்
கதறமாட்டீர்
தடுப்பூசி மருந்தினை
தடைசெய்யமாட்டீர்
ஏன் தாமதம்??
போனது யாரோதானே
பிரியாவும் பூஜாவும்
உமக்கென்ன வேண்டும்?
அரசன் மகளென்ன
ஆண்டி மகளென்ன
உயிர் ஒன்றுதானே
பாசம் ஒன்றுதானே
வலி ஒன்றுதானே
புரியாதா உமக்கு?
தடுப்பூசி எதற்காக?
நோய் தடுக்கத்தானே?
ஊசியே உயிர் குடித்தால்
தவறெங்கே இருக்கிறது?
மருந்திலா? உடம்பிலா?
சல்லிசாய் வாங்கி
சும்மாய் கொடுத்தீர்
சுலபமாய்ப் போனது
பிஞ்சு உயிர்..
போதும் கொடுமைகள்
முற்றுப்புள்ளி வை
உயிர்களை மதி
நேர்மையாய் செயல்படு
மருந்தினை தடைசெய்
யாராயிருந்தாலும்
உயிர் ஒன்றுதான்
இன்று அவர்கள்
நாளை…

4 responses so far

கண்ணாமூச்சி..

Posted by கீதா

ஒளிந்திருப்பது நிவிக்குட்டி

நீ வழக்கமாக ஒளியுமிடம்
தெரியாதா எனக்கு??
ஆனாலும்…
வீடு முழுதும்
தேடி அலைவேன்..
‘த்த்தோ நிமி’
என்று தலைக்காட்டி
நீ சிரிக்கும்
அழகில் கரைய..

oOo

சும்மாவேனும்
கையில் முகம்புதைத்து
அழுதுகொண்டிருப்பேன்
‘அம்மா’ என்றணைத்தபடி
என் முகம்நோக்கும்
உன் அழகுவிழிகளின்
அன்பொளியில் நனைய..

One response so far

ஒரு தாயின் புலம்பல்..(உயிர்க்கொல்லியா தடுப்பூசி)

Posted by கீதா

பிஞ்சுகள்

புள்ள உசுர காக்கத்தானே
தடுப்பு ஊசி போட வந்தேன்..
உசுரையே கொன்னுப்போட்டா
எங்க போயி முறையிடுவேன்..
பூவப்போல சிரிச்ச புள்ள
துவண்டு மேல சரிஞ்சதய்யா..
மழலை பேசும் வாயிலெல்லாம்
நுரை ததும்பி வழிந்ததய்யா..
தத்தித்தத்தி வந்த புள்ள
தடம் புரண்டு கிடக்குதய்யா..
பெத்த மனம் தாங்கல்லியே
சொல்லிச்சொல்லி மாளலியே
என்ன சாக்கு சொல்லப்போற
யார குத்தம் சொல்லப்போற
எம் புள்ள எனக்கு வேணும்
எப்ப திருப்பித் தரப்போற..

புகைப்படம் : நன்றி தினத்தந்தி

2 responses so far

சாலை விபத்து..

Posted by கீதா

சிதறிய கண்ணாடிச் சில்லுகள்

கண்ணாடிச் சில்லுகளுடன்
சிதறிக் கிடப்பது
அவனது கனவுகளும்
அவர்களது வாழ்வின்
அஸ்திவாரமும்…

No responses yet

Older Entries »