கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள் கவிதைகளாய்

Archive for the tag 'அஞ்சலி'

நினைவாஞ்சலி

Posted by admin

எனது அருமை அக்கா
எப்படி முடிந்தது உன்னால்
எமை விட்டுச் செல்ல
எப்படி முடிந்தது உன்னால்
தீபாவளித் திருநாள் இன்று
தீபா வலியென்றே உணர்ந்தேன்
அலைபேசி தனைக் கொண்டு
அனைவர்க்கும் வாழ்த்துரைத்தேன்
உன் எண்ணைக் கடக்குந்தோறும்
உள்ளமெல்லாம் பதறுதம்மா…
பொத்திப் பொத்தித் தாளாமல்
பொங்கி வரும் சோகத்தை
இத்தனை நாள் பேசாத
என் கவிதை சொல்லிடுமா?
மருதாணிச் சிவப்பை நீ
மகிழ்ந்தெனக்குக் காட்டும்முன்னே
காலன் கொண்டு சென்றானே
காலம் பார்த்து வந்தானோ?
நீ இல்லை எனும் நினைவே
நெஞ்சுருக்கிக் கொல்லுதய்யோ
வலி சிக்கிய தொண்டை
விழுங்கிடுமா சோகத்தை?
கண்களில் திரளும் நீர்
கரைத்திடுமா காயத்தை??
நீங்காத உன் நினைவை
நெஞ்சமெங்கும் சுமந்திருந்தும்
நீயில்லாத வெற்றிடத்தை
நிரப்பும் வழி ஏதும் உண்டோ??

3 responses so far

மலர்வளையம்

Posted by admin

நினைவஞ்சலி
நினைவஞ்சலி

எப்படியோ நிகழ்ந்துவிடுகிறது
எதிர்பாராக் கொடுமைகள்
கண்ணெதிரே கண்டவுயிர்
கணப்பொழுதில் காலனோடு
விழியோரம் தொக்கிநிற்கும்
விழிநீரும் உணர்த்திச்செல்லும்
வேரினை பிடுங்கிச் சென்ற
வேதனை உரக்கச் சொல்லும்
வலிகொண்ட மனதிற்கு
மருந்தென்ன? மாற்றென்ன?
விழிமூடிக் கிடந்தாலும்
விட்டத்தை முறைத்தாலும்
வார்த்தைகள் விலகிநிற்கும்
வலியினை உணர்த்துதற்கு
வருடங்கள் உருண்டாலும்
வலியின் வாசம் மட்டும்
விழிக்கருவில் வடு போல
விலகாமல் என்றென்றும்..

5 responses so far

மரணம் (25-01-03)

Posted by admin

மரணம்
விழிப்பு மறுக்கப்பட்ட ஆழ்துயில்
துக்கங்கள் தொடுவதில்லை
தூக்கமும் கலைவதில்லை
துடிக்க மறுத்த இதயத்தால்
துடித்ததென்னவோ நாங்கள் தான்

மரணம்
மறுக்க இயலாத மலர்மாலை
வேண்டிச் நின்றால் வருவதில்லை
வந்தபின்னர் செல்வதில்லை
தேடிச்சென்றால் பெருமையில்லை
தேடிவந்தால் வரவேற்புமில்லை

மரணம்
சலனம் இல்லாத சாந்தநிலை
இன்ப துன்பம் தெரிவதில்லை
இழப்பும் உனக்கு புரிவதில்லை
மண்ணில் வாழும் காலம் முடிய
மனிதம் அற்றுபோகும் நிலை

மரணம்
மாற்ற முடியாத மாற்றுச் சட்டை
மனித உடல் தேவையில்லை
மண்ணில் இனி வாழ்வதற்கு
மாற்றுச்சட்டை அணிந்தபின்னர்
மீண்டும் மாற்ற முடிவதில்லை

மரணம்
அழைப்பின்றி வரும் விருந்தாளி
வரும் நேரம் தெரிவதில்லை
வந்த கோலம் புரிவதில்லை
போகச் சொல்ல முடிவதில்லை
போன உயிரும் மீள்வதில்லை

மரணம்
மரித்துப் போவதில்லை
மலரின் மரணம்.. கனியின் ஆரம்பம்
அச்சத்தின் மரணம்.. வெற்றியின்ஆரம்பம்
இருட்டின் மரணம்.. வெளிச்சத்தின்ஆரம்பம்
மரணம்
மரிப்பதில்லை நினைவுகள்
மறக்கவில்லை உறவுகள்
முடியவில்லை வார்த்தைகள்
முடிவில்லாத கனவுகள்

No responses yet