கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள் கவிதைகளாய்

Archive for the tag 'தத்துவம்'

எறும்புத் தத்துவம்

Posted by admin

எறும்பு தத்துவம் பற்றி கேள்விப்பட்டிருக்கிங்களா?
ஒரு இடத்துல படிச்சேன்..

Ant Philosophy
1. Never Quit – Find a way or make it.
2. Think ahead – Ants think winter all summer
3. Think Positive – Ants think summer all winter
4. Do what all you can

அதை உபயோகிச்சி ஒரு சின்ன கிறுக்கல்..

எறும்பு சொல்லும் பாடம்

மேலேறி கீழிறங்கி
முன்சென்று பின்சென்று
ஏதோ ஒரு வழி தேடி
இலக்கடைவோம் வா தோழா

இன்பக்காலம் முடிந்துவிடும்
துன்பம் கையை அசைத்துவரும்
உணர்ந்ததனை எதிர்கொள்ள
வலிமைசெய்வோம் வா தோழா

இந்த காலம் கடந்துபோகும்
இனிய வாய்ப்பும் தேடிவரும்
முதல் கதிரை வரவேற்க
காத்திருப்போம் வா தோழா

வேலையென்ன அறிந்தபின்பு
கவனம் முழுதும் அதில்செலுத்தி
முடியுமட்டும் உழைத்திடுவோம்
முன்னேறிட வா தோழா

எறும்பு சொல்லும் பாடமிது
கேட்டிடுவாய் என் தோழா
இன்னும் இன்னும் தேவையெனில்
கற்றுக்கொள்ள வா தோழா..

No responses yet

மனதின் கதை..

Posted by admin

கையில் கிடைக்காத
மனதின் கதை கேட்டேன்
கற்பனை ஆனாலும்
கதையில் சுவையுண்டு
பிரம்மன் படைத்திட்டான்
புவியில் மனித இனம்
மறைந்தே இருப்பதுதான்
மனதின் பெருமையென்று
தேடி அலைந்திட்டான்
அவனின் மனதுக்கிடம்
புவியில் புதைத்திட்டால்
குடைந்தே எடுத்திடுவான்
வெளியில் மறைத்திட்டால்
பறந்தே பிடித்திடுவான்
எவ்விதம் வைப்பதென
யோசனை மிகக்கொண்டான்
கண்டான் சிறந்த இடம்
மனிதன் உடலே அ·து
எங்கும் தேடும் மனிதன்
தன்னுள் தேட மாட்டான்
தேடத் துவங்கும் அந்நாள்
வாழ்வின் அர்த்தம் புரியும்
கதையும் முடிந்தது அங்கே
தேடல் துவங்கிடும் இங்கே

2 responses so far

நானும் நிழலும்

Posted by admin

நிழலை பிடிக்கவேண்டி
நானதைத் தொடர்ந்திட்டேன்
தொடர்ந்தே நானும் செல்ல
நிழலும் விலகக் கொள்ள
ஆட்டம் தொடங்கியது
எனக்கும் நிழலுக்குமாய்
இடமும் வலமுமாக
முன்னும் பின்னுமாக
மேலும் கீழுமாக
விலகி நழுவியது
அதனை நானும் கண்டேன்
பல்வேறு வடிவினிலே
நெடிதும் சிறியதுமாய்
சில நொடி மாயமாய்
பிடிக்க இயலவில்லை
சோர்ந்தே நானமர்ந்தேன்
அருகே நிழலும் கண்டு
உணர்ந்தேன் அந்நொடியே
நானும் நிழலும் ஒன்று
இறைவனும் அப்படித்தானோ?

No responses yet

கவிதை (22.11.02)

Posted by admin

உள்ளத்தின் உணர்வுகள்
உருக்கமான் நினைவுகள்
வார்த்தையாய் வருகையில்
வாழ்த்துவர் கவிதையென.

One response so far

அர்த்தங்கள் (21/11/02)

Posted by admin

அன்பெனக்கு நீ அளிக்க
அதையே நான் உனக்களித்தால்
அதிலென்ன ஆனந்தம் உண்டு

நீ கொடுக்கா பொழுதினிலும்
நானுனக்கு தொடர்ந்தளித்தால்
அதுவே உண்மை அன்பென்பது

நலமாக நீ இருந்து
நலமா என்றென்னைக் கேட்டால்
அதிலென்ன ஆறுதல் இருக்கிறது

நலமற்று நீ இருந்தும்
நினைவாக என் நலனைக் கேட்டால்
அதுவன்றோ பிரியம் என்பது

இறந்து நீ சென்றபின்பு
உன் நினைவை பிறர் மறந்தால்
அதிலென்ன பெருமை இருக்கிறது

இறவாத உன் நினைவு
பிறர் மனதில் வீற்றிருந்தால்
அதுதானே வாழ்தல் என்பது.

No responses yet

படிக்கல்

Posted by admin

மாணவனாய் இரு
ஆசான் ஆவாய்

ரசிகனாய் இரு
கலைஞன் ஆவாய்

வாசகனாய் இரு
வாசிக்கப் படுவாய்

மனிதனாய் இரு
மகான் ஆவாய்

அன்பாய் இரு
உலகை ஆள்வாய்

No responses yet

பார்வைகள்..

Posted by admin

நீலம் பச்சையென்று
நித்தமொரு நிறம் பூட்டி
நீந்தவிட்டேன் வார்த்தைகளை

உருவில் மாற்றமுண்டு
உட்பொருளோ மாறவில்லை

உள்ளம் உயர்ந்திருக்க
ஊணுடம்பு தடையுமில்லை..

உட்பொருள் சரிசமமே
உண்மையிதை உணர்ந்திடுவாய்

No responses yet

மனதின் கதை

Posted by admin

கையில் கிடைக்காத
மனதின் கதை கேட்டேன்
கற்பனை ஆனாலும்
கதையில் சுவையுண்டு
பிரம்மன் படைத்திட்டான்
புவியில் மனித இனம்
மறைந்தே இருப்பதுதான்
மனதின் பெருமையென்று
தேடி அலைந்திட்டான்
அவனின் மனதுக்கிடம்
புவியில் புதைத்திட்டால்
குடைந்தே எடுத்திடுவான்
வெளியில் மறைத்திட்டால்
பறந்தே பிடித்திடுவான்
எவ்விதம் வைப்பதென
யோசனை மிகக்கொண்டான்
கண்டான் சிறந்த இடம்
மனிதன் உடலே அ·து
எங்கும் தேடும் மனிதன்
தன்னுள் தேட மாட்டான்
தேடத் துவங்கும் அந்நாள்
வாழ்வின் காரணம் புரியும்
கதையும் முடிந்தது அங்கே
தேடல் துவங்கிடும் இங்கே

No responses yet

மனசாட்சி

Posted by admin

இன்பமும் துன்பமும் உனக்குள்ளே
சிரித்தலும் அழுதலும் அதனாலே

நண்பனும் பகைவனும் உனக்குள்ளே
நன்மையும் தீமையும் அதனாலே

இகழ்ச்சியும் முயற்சியும் உனக்குள்ளே
உயர்தலும் தாழ்தலும் அதனாலே

நட்புக் கரம் கொடுப்பான்
பகையாய் உயிர் எடுப்பான்

இன்பத்தில் திளைக்க வைப்பான்
துன்பத்தில் மூழ்க வைப்பான்

வெறுமையில் வாட வைப்பான்
முழுமையாய் சிரிக்க வைப்பான்

உன்னுள் இருப்பது மனசாட்சி
உயிர் ஓயும் நாள்வரை
ஓயாது அதன் அரசாட்சி.

No responses yet

இருளும் ஒளியும் (25.11.02)

Posted by admin

இருட்டில் இருப்பவனுக்கு தான்
வெளிச்சத்தின் அருமை தெரியும்
ஆனால் வெளிச்சத்திற்கு வந்ததும்
அது மறந்துவிடுகிறது அவனுக்கு

No responses yet

Older Entries »