Apr242008
Filed under அ) கவிதைகள் by admin

புள்ள உசுர காக்கத்தானே
தடுப்பு ஊசி போட வந்தேன்..
உசுரையே கொன்னுப்போட்டா
எங்க போயி முறையிடுவேன்..
பூவப்போல சிரிச்ச புள்ள
துவண்டு மேல சரிஞ்சதய்யா..
மழலை பேசும் வாயிலெல்லாம்
நுரை ததும்பி வழிந்ததய்யா..
தத்தித்தத்தி வந்த புள்ள
தடம் புரண்டு கிடக்குதய்யா..
பெத்த மனம் தாங்கல்லியே
சொல்லிச்சொல்லி மாளலியே
என்ன சாக்கு சொல்லப்போற
யார குத்தம் சொல்லப்போற
எம் புள்ள எனக்கு வேணும்
எப்ப திருப்பித் தரப்போற..
புகைப்படம் : நன்றி தினத்தந்தி
Tags: சமூகம், மரணம்
2 responses so far
Apr232008
Filed under அ) கவிதைகள் by admin

கண்ணாடிச் சில்லுகளுடன்
சிதறிக் கிடப்பது
அவனது கனவுகளும்
அவர்களது வாழ்வின்
அஸ்திவாரமும்…
Tags: கவிதை, குறுங்கவிதை, சமூகம்
One response so far
Apr222008
Filed under அ) கவிதைகள் by admin

ஏ நிலவே..
வேடிக்கை போதும்
என் செல்ல மகள்
இப்பொழுது தான்
கண்ணயர்ந்தாள்
முகிலிடை மூழ்கிடு..
நின் ஒளிக்கரங்களால்
வருடி வருடி
அவளின் துயில்
கலைத்து விடாதே
ஆசை மிகின்
தென்றலின் துணையொடு
அவ்வப்பொழுது
முகில் விலக்கி
அவள் தூங்கும் அழகை
இரசித்துக் கொண்டிரு
என்னைப் போல்..
Tags: கவிதை, நிலா, நிவிக்குட்டி
10 responses so far
Apr172008
Filed under அ) கவிதைகள் by admin

கொத்துக் கொத்தாய்ப் பூக்கள்
சிதைக்கப்பட்ட இதழ்களுடன்
சாக்லேட் கண்காட்சி…
Tags: கவிதை, குறுங்கவிதை, ஹைக்கூ
7 responses so far
Apr152008
Filed under அ) கவிதைகள் by admin

மெய்யோ பொய்யோ
அழகிய செடியின் இலைகள்
நகம் தீண்டிய தழும்பேந்தி…
****************
நண்பர்களே,
நான் கண்ட ஒரு காட்சியையும்,அது என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தையும் வார்த்தைகளில் சிறைபிடிக்க நினைத்தேன்….
கையலம்பும் இடமருகில்
கண்கவர் செடியொன்று
மெய்யோ என்றறிந்திடவே
இலையொன்றை ஸ்பரிசித்தேன்
பாவம் அது….
பல்வேறு நகம் தீண்டி
உடல்முழுதும் தழும்புகளாய்..
இதை ஹைக்கூவாக எழுதவேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதியது மேலேயுள்ள மூன்று வரிக் கவிதை.
எப்படி இருக்கிறது? .. வேறு எப்படி எழுதலாம்? சொல்லுங்களேன்.
Tags: கவிதை, குறுங்கவிதை, ஹைக்கூ
22 responses so far
Apr102008
Filed under உ) அனுபவம் எழுதுது by admin
மனசுக்குள்ள உட்கார்ந்து மணி அடிக்கலாம் ஆனா தலைக்கு மேல டமாரம் அடிக்கலாமா?? அடிக்கிறாங்களே..
நாங்க வசிக்கும் குடியிருப்பின் மேல் மாடிக்கு புதுசா ஒரு குடும்பம் வந்திருக்காங்க. அவரு , அவர் காதலி, அந்தம்மாவோட குழந்தை. இவர் பையன் இரண்டு வாரத்துக்கு ஒருமுறை வந்து பார்த்துட்டு போவானாம். அதைப்பத்தியெல்லாம் கவலை இல்லிங்க.. என் பிரச்சனையெல்லாம் வீடே கடகடக்க அவங்க கேட்கிற சவுண்ண்ண்டு மியூசிக்தாங்க.
இங்க எல்லாமே மரத்துனால செஞ்சதுதான் வீட்டின் தளம் உட்பட, அதனால மாடியில யாராவது சந்தோஷத்துல துள்ளி குதிச்சாக்கா நம்ம இதயமும் துள்ளிக் குதிக்குது. போதாக்குறைக்கு குழந்தை தூங்க ஆரம்பிச்சிட்டா கேக்கவே வேண்டாம், நம்ம வீட்டுக்குள்ள ஊசி விழும் அமைதியை (Pin Drop Silence?) நான் கடை பிடிக்க மேல “டண் டணா டண் டண்ணு”ண்ணு ஆரம்பிச்சிருவாங்க. என் மண்டைக்குள்ளயும் வீட்டுக்குள்ளயும் எல்லாமே அதிர ஆரம்பிக்கும். எப்படித்தான் கஷ்டப்பட்டு காதை மூடிமூடி வச்சாலும் குழந்தையும் எழுந்து முழிச்சி முழிச்சி பார்க்கும் எங்கடா சத்தம் மட்டும்வருதேன்னு. இந்தக் கச்சேரி இராத்திரியும் நடக்கும் 11.30 மணியான சட்டுன்னு நிறுத்திருவாங்க.. (நம்ம மேல ரொம்ப கரிசனம்)
அப்படித்தான் ஒருநாள் மதியம் இந்த சவுண்ண்டு மியூசிக்குக்கு இடையே குழந்தையை தூங்க வச்சிட்டு யோசிச்சேன்.. என்னதான் செய்றது.. பேசாம வீட்டை காலி செய்துட்டு போயிரலாமன்னு யோசிக்கும்போதே என் அறிவு(?) என்னை இடித்துரைத்தது(?) பிரச்சனையைக் கண்டு ஏதும் தீர்வு யோசிக்காம இப்படி பயந்து ஓடினா எப்படி? அப்படின்னு. ம்ம் அதுவும் சரிதான். சரி என்ன செய்யலாம் மேனேஜ்மெண்டுக்கு ஒரு புகார் கொடுக்கலாமா.. இல்லை மேல் வீட்டுக்கு நேராவே போய் ஒரு குசலம் விசாரிச்சிட்டு அப்படியே அமுக்கி வாசிங்கனு சொல்லிட்டு வந்துரலாமா..ம்ம் இந்த இரண்டு யோசனையுமே எனக்கு கொஞ்சம் பயமா இருந்தது..
கொஞ்சம் நாள் முன்னாடி என் வீட்டுக்காரர் இங்க அமெரிக்காவுல நடந்த நிகழ்ச்சி ஒன்றை சொன்னார் அதாவது ஒரு மனுஷன் சுவருல(wall) ஆணி அடிச்சு ஓட்டை போட முடியலையின்னு தன்னோட துப்பாக்கி எடுத்து சுட்டு ஓட்டை போட்டிருக்கான் அவனோட போதாத காலம் அதுக்குப் பின்னாடி அவனோட மனைவி இருந்து இப்ப இறந்து போயிட்டாங்க…[செய்தி விபரம்] ஹ்ம். ஒவ்வொரு தடவை மேல் வீட்டுல ஆணி அடிக்கும் சத்தம் கேட்டாலே கொஞ்சம் உள்ளுக்குள்ள உதற ஆரம்பிச்சிருச்சி (அவரு கருப்ஸ் வேறயா கண்டிப்பா துப்பாக்கி வச்சிருப்பார் ஹ்ம்) இதுல நான் வேற புகார் கிகார் கொடுத்து “எந்த தையிரியம்..” அப்டின்னு சந்திரிமுகி ஸ்டைல்ல வந்துட்டார்னா.. அப்புறம் என் கதி.
அப்படியே யோசிச்சிட்டே திரும்பிப் பார்த்தேன் சன்னல் பக்கமா ரெண்டு உருவம் மாதிரி தெரிஞ்சது (அய்யோ யோசிச்சதுக்கேவா? ) உத்துப்பார்த்தா ரெண்டு ஸ்பானிஷ் ஆளுங்க ஒரு பெரிய பீரோ மாதிரியான ஒரு பெட்டியை எங்க வீட்டு பின்வாசல் முன்னாடி வச்சிருந்தாங்க. பார்க்குறதுக்கு ஒரு மேடை மாதிரியாவும் இருந்தது. மூளையில ஒரு மின்னல் இதேதூடா வம்பாப்போச்சு நம்ம வீட்டு பின்பக்கமே புல்வெளியில உட்கார்ந்து ‘டண் டணா டண்’ வாசிக்க போராங்களோ? அய்யகோ அப்படின்னு யோசிச்சிட்டே இருக்கும்போது ஒரு வழியா அதை அவங்க மேல் பால்கனிக்கு கயிறு கட்டி தூக்கிட்டாங்க. ஒரு வழியா சமாதானமானப்புறம்தான் ரொம்ப நேரமா மூச்சை விடவே இல்லைன்னு உரைச்சுது அவசரமா ரெண்டு ஸ்கூப் காற்றை ஸ்வாசிச்சேன்.
பின்குறிப்பு: போன வாரம் அந்தம்மாவிடம் என் வீட்டுக்காரர் கேட்டே கேட்டு விட்டார் ‘என்ன நீங்க மியூசீக் பிராக்டீஸ் செய்யறிங்ளா? ‘ன்னு..’ மியூசிக்கா நாங்களா சேச்சே’ என்று சிரிச்சாங்களாம். அதிலிருந்து அதிரும் சத்தம் வருவதில்லை. ஹி ஹி தெரிஞ்சுகிட்ட வரைக்கும் சந்தோஷம் தான்.
Tags: நகைச்சுவை அனுபவம்
5 responses so far
Feb292008
Filed under அ) கவிதைகள் by admin
ஓயாத வேலை
உன் பின்னே ஓட்டம்
விளையாடும் நேரமெல்லாம்
உன் வயதேதான் எனக்கும்
காலை முதல் கனவு வரை
ஏதேதோ எண்ணங்கள்
குறிஞ்சியாய் பூக்கும்
ஓரிரு கவிதைகளும்
உயிர்பிக்க முடியாமல்
ஓரத்தில் உறங்கிப்போகும்
எங்கே தொலைந்துபோனேன்??
மீண்டும் கிடைப்பேனா??
எனக்கே எனக்கான
நேரமும் கிடைக்குமா?
இன்று கிடைத்தது
நான் தேடும் என் நேரம்
அப்பொழுதும்…
உள்ளுக்குள் உறங்கும்
கவிதையை எழுப்பாமல்..
வாய் குவித்து விரல் அசைத்து
சிரித்து சிணுங்கி பதுமைபோல்
உறங்கும் கவிதையான
உன்னை இரசிக்கின்றேன்
என்னவென்று சொல்வது??
Tags: உணர்வுகள், கவிதை, நிவிக்குட்டி
19 responses so far
Jan052008
Filed under அ) கவிதைகள் by admin

நெரிசலான மனங்களுள்
நுழைய முடியாமல்
நெடுஞ்சாலை ஓரத்தில்
பார்வையின் தூரத்தில்
பூக்களில் உறங்கும்
மௌனங்கள்
Tags: இயற்கை, உணர்வுகள், கவிதை
7 responses so far
Sep282007
Filed under அ) கவிதைகள் by admin
காலமகள் கொடியசைப்பில்
கடந்தது பல ஆண்டு
அன்பு நட்பு பாசம் கொண்டு
கண்ட காட்சி கேட்ட சொற்கள்
இன்றும் உண்டு நெஞ்சில் இங்கு
அன்று கண்ட மக்கள் மட்டும்
காணவில்லை மாறிப்போனார்
காலச்சுழலில் வேறு ஆனார்
மாற்றம் மட்டும் உண்மையென்றால்
அன்பும்கூட பொய்மைதானோ?
பழைய வாசம் தேடும் மனதே
புரிந்துகொள்வாய் விழித்துக்கொள்வாய்
வாழும் காலம் வேறு காலம்.
Tags: உணர்வுகள், கவிதை, நிவிக்குட்டி
4 responses so far
Sep182007
Filed under அ) கவிதைகள் by admin
தண்ணீரில் தொலைபேசி
தரையெங்கும் காகிதங்கள்
மங்கள நீராடியதில்
மோட்சத்தில் மடிக்கணிணி
பூசைக்கு படைக்கும் பொருள்
முடியும்வரை இருப்பதில்லை
தேடும் பொருள் கிடைப்பதில்லை
போன இடம் தெரிவதில்லை
நொடிப்பொழுது அசட்டைக்கு
கைக்கூலி சேதாரம்
அத்தனையும் புலம்பலல்ல
இரசித்து சுவைத்து சிரித்தவைதான்
கவிதை எழுத உட்கார்ந்தால்
காலைக்கட்டி முகம்நோக்கி
தளர் நடையில் கிளர் மொழியில்
கொஞ்சிக் கெஞ்சி எனை அழைக்கும்
கொள்ளை கொண்ட மகள் செயல்தான்
சந்திப்போம்
கீதா
Tags: கவிதை, நிவிக்குட்டி
18 responses so far