கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள் கவிதைகளாய்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

Filed under ஏ) இது நம்ம ஏரியா by admin

அனைவருக்கும் உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அன்புடன்
கீதா

3 responses so far

ஹி ஹி நான் தான் சொன்னேனே

Filed under ஈ) கதை கேளு கதை கேளு by admin

அது ஒரு உயர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரமான கட்டிடம்.

அங்கதான் நம்ம கதையின் நாயகன் தற்கொலை செய்துக்க போயிட்டிருந்தான். அவனுக்கு வயசு ஒரு பத்தொன்பது இல்ல இருபது இருக்குமா?.. இருக்கும்… இருக்கும்.

கருகருன்னு மீசை, அலை அலையா தலைமுடி, கண்ணுல சோகத்தையும் மீறின ஒரு குறுகுறுப்பு, வயதுக்கே உரிய ஒரு துடிப்பு.. இவன் ஏன் தற்கொலை செய்துக்கணும்??

புரியாத புதிரா இருக்கே.. ஒரு வேளை காதல் தோல்வியோ?.. இல்லை பரீட்சையில பெயில் ஆகிட்டானோ? ம்ம்.. சேச்சே இதெல்லாம் காரணமா இருக்காது.. வேற என்னவா இருக்கும்..ம்ம்

அடடா யோசிக்கிறதுக்குள்ள நம்ம கதாநாயகன் லிப்ட்ல ஏறி கட்டிடத்தின் உச்சிக்கு போயிட்டான் போல இருக்கே.. தடைசெய்யப்பட்ட பகுதியில யாரோ இருக்காங்கன்னு அலாரம் அடிக்குது..

ஆனாலும் இப்பல்லாம் தொழில்நுட்பம் ரொம்பவே முன்னேறிடுச்சி.. எவ்வளவு சீக்கிரம் உச்சிக்கு போயிட்டான்.. என்ன நடக்குதோ தெரியலை..

உச்சிக்கு வந்தாச்சு. இனி குதிச்சிட வேண்டியதுதான்.

வாட்ச்சைப் பார்த்தான் மணி 3:45 21/21/21

1..2..3…

இதென்ன எல்லா வீட்டுலயும் ஜன்னல் மூடி இருக்காங்க.. அடடா மழை பெய்யுது..

சே ஏன் இப்படி பனி பெய்யுதோ தெரியலையே உடம்பெல்லாம் ஜில்லுனு ஆகிடுச்சி..

அப்பாடி ஒரு வழியா வெயில் காலம் வந்துடுச்சி..

கை காலெல்லாம் தளர்ந்து போன மாதிரி இருக்கு

அடடா கண் பார்வைகூட மங்குது..

என்ன வருஷம் இது.. வாட்சை பார்த்தான் 3:47 21/21/71

அடடா அம்பது வருஷம் ஆகிடுச்சி.. இன்னும் தரையைக் காணோமே.. ஹ்ம்

வீழ்ந்துகொண்டே இருந்தான்

என்ன நடக்குதுன்னு உங்களுக்கும் புரியலையா

தலைப்பையும், முதல் வரியையும் படிங்க

17 responses so far

சொர்க்கம் போக டிக்கெட்

Filed under ஆ) க(வி)தை by admin

மந்தமான மதியப் பொழுதில்..
மதியும் கொஞ்சம் மயங்கும் பொழுதில்..
இருக்கையில் அமர்ந்து கொண்டு
இருவிழி மூடிக் கொண்டு
சொர்க்கம் யாதென என்னுள்
சொற்போர் நடத்த முனைந்தேன்

சொர்க்கம் என்பதும் நிஜமோ
சொற்களில் வாழ்ந்திடும் கனவோ
பசியும் பிணியும் அங்குண்டோ?
பாழும் பணமும் அங்குண்டோ?
மண்ணுயிர் நீத்திடும் மக்கள்
மாண்டதும் அங்கு செல்வாரோ?

யாதது சொர்க்கம் என்று
யாரிங்கு சொல்லிடுவாரோ?
சட்டென சாலையில் ஏதோ
சலசலப்பெழுவது கேட்டு
வீதியில் எட்டிப் பார்த்தேன்
வீதியில் மக்கள் வெள்ளம்

வெறிச்சோடிக் கிடக்கும் வேளை
விந்தைதான் கண்ட அக்காட்சி
ஆர்வம் மிகுதியில் நானும்
அழைத்து இங்கு விவரம் கேட்டேன்
ஆச்சர்யம் அடைவீர் நீரும்..
அதிசயச் செய்தி கேட்டால்..

ஊரின் எல்லையில் உள்ள
ஊருணி அருகே சென்று
மொட்டையாய் நின்றிருந்த
மோகினிச் சுவரின் மீது
எருக்கம் பாலைக் கொண்டு
எழுதிய பெயருக்கெல்லாம்
சொர்க்கம் போகும் டிக்கெட்
சடுதியில் கிடைக்குதாமாம்

அடடா என்ன செய்தி!!!
அடுத்தென்ன பேச்சு இங்கே
அடுத்த பத்து நொடியில்
அடியேன் அங்கே நின்றேன்

எருக்கம் பாலின் விலையோ
எட்டும் இடத்தில் இல்லை
அடித்து பிடித்து நானும்
அதனை வாங்கிச் சென்றால்
மோகினிச் சுவரில் எங்கும்
மொக்கையன் உரிமை கொண்டாட

அதற்கும் ஒரு விலை கொடுத்து
அழகாய் பெயரும் எழுத..
ஆகா இதென்ன விந்தை..
ஆகாயமார்கமாக ஏதோ
அஞ்சல் அட்டை விழுதே
ஆகா சொர்க்க டிக்கெட்
அடித்தது லக் எனக்கு

ஆர்வமாய் கையில் எடுக்க
யாரோ வெடுக்கென பிடுங்க
ஆத்திரம் மேலிட நானும்
பலங்கொண்டு மேலும் இழுக்க
‘நங்’ எனும் சத்தத்தோடு
ஏதோ தலையினில் பாரம்

அய்யோ தலை மேல் இடியா
நான் என்ன பாவம் செய்தேன்
இருவிழி இருக்க மூடி..
இறைவனை நொந்த நேரம்

‘நீ என்ன பாவம் செய்தாய்
என் சிகையினை இழுத்தது பாவம்’
என்ன!! என் அன்னை குரலா?
அவர் எங்கு வந்தார் இங்கு
யோசித்தவாரே நானும்
விழிகளை திறந்து பார்த்தேன்
இருக்கையில் இருப்பது நானா?
இரு கையில் இருப்பது?
அன்னையின் சிகையா?
அனைத்தும் புரிந்தது இப்போது
புன்னகை விரிய நானும்
அன்னையின் சிகையினை விட்டேன்

ஆனாலும் கொஞ்சம் சோகம்
ஆனது ஆகிப் போச்சு
இன்னும் சிறிது நேரம்
தூக்கத்தில் ஆழ்ந்திருந்தால்
சொர்க்கம் என்ற கனவை
கனவிலேனும் கண்டிருப்பேன்!!!

8 responses so far

ஜன்னலுக்கு அப்பால்..

Filed under அ) கவிதைகள் by admin

சீரிய காற்றடிக்க
சருகென உதிர்ந்த இலைகள்
ஜிவ்வென மேலெழும்பி
சிறகுடைய பறவை ஆகி
விண்ணிலே நிரம்பி நின்று
புள்ளென பயணம் செய்ய…
உதவிக்கு வந்த காற்றும்
உயரத்தில் விட்டுச் செல்ல
அசையாமல் நின்றன மரங்கள்
மழையென பொழிந்தன இலைகள்

கருத்தது மேகம் தானோ
கடல் அதில் குடிபுகுந்தானோ

வைரத்தின் வாள்தனை வீசி
படைநடுங்க கோஷங்கள் பேசி
கடலவன் இறங்கியே வந்தான்
மழையென்னும் பெயரினைக் கொண்டான்

இயற்கையின் ஜாலம் இதனை
வெறுத்திடும் மனிதரும் உண்டோ
உண்டெனக் கண்டன விழிகள்
ஆம், என் ஜன்னலுக்கு அப்பால்
 

4 responses so far

பரீட்சை

Filed under அ) கவிதைகள் by admin

படியென்று அன்னை சொல்கையிலே
தேர்வு நாள் நெருங்கி வருகையிலே
படித்தாயா என்று தோழி கேட்கையிலே
எனக்கு படிக்கத் தோணலை

இன்று தான் தேர்வு என்கையிலே
தேர்வு மையத்தில் நுழைகையிலே
பத்தே நிமிடங்கள் இருக்கையிலே
பலவும் படிக்கத் தோன்றுதே

பலநாள் படிக்காத பாடமெல்லாம்
பத்தே நொடியில் படித்ததென்ன
பத்தே நொடியில் படித்ததனை
மணிக்கணக்காய் எழுதி தீர்த்ததென்ன

படித்துத்தான் பார்ப்பாரோ – ஆசிரியர்
பைத்தியம் தான் வாரோ?
மதிப்பெண் தான் தருவாரோ?
பாடத்தை மறந்துதான் போவாரோ??

101202

6 responses so far

ஒரு தேவதை வந்துவிட்டாள்

Filed under ஏ) இது நம்ம ஏரியா by admin

அக்டோபர் 25, 2006

எங்கள் வாழ்வில் இனியதொரு மாற்றம்..

நிவேதனா – இனிய தென்றலாய் பிறந்தாள்

வாழ்த்திய நெஞ்சங்களுக்கு எங்கள் நன்றி

அன்புடன்
கீதா

10 responses so far

பிரிதல்

Filed under அ) கவிதைகள் by admin

அஷ்டமியா? – ஆகாது
தேய்பிறையா? – கூடாது
இராப்பொழுதா? – வேண்டாமே

எத்தனையோக் காரணங்கள்
தேடித்தேடி எடுத்துவந்தேன்

ஏதோ சரியில்லையென
நித்தம் பயணம் ஒத்திவைத்தேன்

உண்மையிங்கு அதுவல்ல
நிஜத்தை நம் மனமறியும்

எல்லாம் இருந்தபோதும்
பயணிக்க மனம்தான் இல்லை

No responses yet

பஞ்சபூதம் சொல்லும் பாடம் – 3 ( தீ )

Filed under இ) வெண்பா முயற்சி by admin

சேர்கின்ற மாசுகளை தன்னுடனே சேர்த்தெரித்து
ஊர்களிக்க ஜோதியாக ஆகியென்றும் – பார்தனிலே
தீயவற்றைக் காண்கையிலும் ஓய்வுமின்றி தீர்த்தழிக்கும்
தூயநெஞ்சம் கொள்ளசொல்லும் தீ.

விளக்கம்:
தீயானது தன்னுடன் சேரும்/ தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்து மாசுகளையும் தன்னுடன் சேர்த்து எரித்து மாசுகளை அழித்து விடும்.
அது போல மனிதன் தீயின் வடிவமாகி, தன்னுடன் தீய நட்போ / பிறவோ வரும் போது அதனையும் தன்னுடன் சேர்த்து மாசற்றதாக்க வேண்டும்.

One response so far

பஞ்சபூதம் சொல்லும் பாடம் – 2 ( நீர் )

Filed under இ) வெண்பா முயற்சி by admin

எத்தனையோ மாசுகண்டும் மீண்டுமது ஓங்கிநின்றும்
அத்தனையும் தூயதாக்கி தூயவற்றை ஈன்றுநித்தம்
சித்தமலம் சேர்க்குமந்த கோபதாபம் கொன்றுவாழும்
சித்திவழி சொல்லிடுவாள் நீர்.

விளக்கம்:
நீரானது தூய்மையின் வடிவம். ஓராயிரம் முறையும் ஒரு பொருளை மாசுபடுத்தினாலும் நீர் கொண்டு கழுவினால் அந்த பொருளின் மாசு அகன்றுவிடும்.
மனிதன் தன் மனதில் சேரும் கோபம் முதலான மாசுகள் மீண்டும் மீண்டும் தம்மை தாக்கும்போது நீரைப் போல தூய்மைபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு போதும் மனம் தளரக்கூடாது.

No responses yet

பஞ்சபூதம் சொல்லும் பாடம் – 1 ( நிலம் )

Filed under இ) வெண்பா முயற்சி by admin

எத்துனைதான் வெட்டினாலும் ஆழ்குழிகள் தோண்டினாலும்
அத்துனையும் தாங்கிநின்று பேருவகை எய்திநிந்தன்
சித்தமதில் சிக்குகின்ற வேதனைகள் தாங்கிவாழும்
புத்திசொல்வாள் பூவை நிலம்.

விளக்கம்:
பூமியானது தன்னை எத்தனைதான் வெட்டினாலும், குழிகள் தோண்டினாலும் பொறுத்துக் கொள்வதோடல்லாமல் தன்னை வெட்டுபவரையும் தாங்கி பூமாதேவியென்னும் பெருமை பெற்று நிற்கும்.
அது போல மனிதன் தனக்கு நேரும் துன்பம், சோதனை ஆகியவற்றை கண்டு துவளாமல்,வேதனைப்படாமல், தன்னிலைமாறாமல் அனைத்தையும் தாங்கிக்கொண்டு, வாழும் வழி அறிந்து, வாழ்தல் வேண்டும்.

No responses yet

« Newer Entries - Older Entries »