கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள் கவிதைகளாய்

கனவுலகம்

Filed under இ) வெண்பா முயற்சி by admin

கனவுலகில் காண்பதுவோ கற்பனைப் பூக்கள்
நனவுலகோ முட்களுடன் நித்தம் – நனவின்
மனவுலகில் மங்கையிவள் ஏற்றிடும் தீபம்
கனவென்றா கும்முன்னே காண்.

விளக்கம்:
கனவில், கற்பனையில் நாம் காண்பது இனிப்பான மனதிற்கு உவகை தரும் நிகழ்வுகளை. ஆனால் நிஜம் அதற்கு அப்பாற்பட்டது. நிஜம் எப்பொழுதும் நமக்கு பூக்களாக இருப்பதில்லை முட்களாக தைக்கவும் செய்யும்.
ஒரு மங்கை தன் கற்பனையில் தன் தலைவனுக்கு மாலை சூட்டி மகிழ்கிறாள். அந்த மகிழ்ச்சி பொய் என்று ஆகும் முன்னர் தன்னைக் காண தன் தலைவனை அழைக்கிறாள்.

கனவுலகம் – கற்பனை/கனவு
நனவுலகம் – நிஜம்
மனவுலகம் – மனதில் நினைக்கும் நினைவு

தலைவன் – இறைவன் எனவும் பொருள் படும்

3 responses so far

நாய்ப்பொழப்பு

Filed under அ) கவிதைகள் by admin

அலுக்காமல் படிகள் ஏறி
அலுவலகக் கதவு தட்டி
நயமாக கதைகள் சொல்லி
நம்பியிதை வாங்கும் என்றால்
வேலைகளை விட்டு விட்டு
கதைமுழுதும் கேட்டபின்னர்
கதவின் வழி காட்டிடுவர்..
இதுவேணும் பரவாயில்லை..

சரளமான ஆங்கிலத்தில்
சடுதியிலே பேசக்கண்டு
நடுக்கமுற்று இன்னும்சிலர்
யாசகனைத் துரத்துதலாய்
வாசலிலே நிற்கவைத்து
வந்தவழி அனுப்பிடுவர்
இதுவேணும் பரவாயில்லை

வீதியிலே அலைந்ததாலோ?
பேசிப் பேசித் திரிந்ததாலோ?
கலக்கமுற்று இன்னும்சிலர்
வாசலிலே எழுதிவைப்பர்
“நாய்கள் ஜாக்கிரதை”
&
“சேல்ஸ்மேன் நாட் அலவுட்”

4 responses so far

மொபைல் மனிதர்கள்

Filed under அ) கவிதைகள் by admin

ஓயவே மாட்டேனென்று
நொடிக்கொரு முறை
சினுங்கிக் கொள்ளு(ல்லு)ம்
மொபைல் போன்கள்..
வெளி தேசத்திற்கும்
அடுத்த வீட்டிற்கும்
மேல் மாடிக்கும்
சமயத்தில்.. அருகிருந்தும்
அடையாளம் காணாதவர்க்கும்
இங்கிருந்து அங்கும்
அங்கிருந்து இங்குமாய்
ஓயாத அழைப்புக்கள்..
ஆனாலும் நேரமில்லை
வெகுநேரம் அருகமர்ந்து
ஆவலுடன் காத்திருக்கும்
குடும்பத்தினரிடம் பேசுதற்கு

No responses yet

முதலெழுத்து..

Filed under அ) கவிதைகள் by admin

கருவான நாள்முதல்
கண்ணெனக் காத்தவள்
உருவாக்கி என்னையும்
உவகையோடு பார்த்தவள்
வலிகளை மட்டுமே
வாழ்நாளில் கண்டவள்
இத்தனைப் பெருமையும்
எந்தன் அன்னைக்கே
முதலெழுத்து சூட்டுதற்கு
தந்தை பெயர் மட்டும்
கேட்பது ஏன்?

3 responses so far

அவரவர் உலகம்

Filed under அ) கவிதைகள் by admin

உலகையே சுமப்பதுபோல்
பையினைத் தலையில் சுமந்தபடி
வீதிதோறும் உலவிக்கொண்டிருக்கும்
விந்தையான ஒரு பெண்மணி..

வியாழக் கிழமை தோறும்
விதிபோலத் தவறிடாமல்
‘முருகா’ என்று அழைத்தபடி
யாசகம் கேட்கும் ஒரு தாத்தா..

ஒய்ந்த கால்களின் உதவியின்றி
உடைந்து போன சக்கரங்களை
கைகளின் உதவியில் ஓட்டியபடி
ஓயாமல் பயணிக்கும் தாத்தா..

எங்கு போவர்? என்ன செய்வர்?
இவர்களின் உலகத்தில் ஒரேநாள்
சஞ்சரிக்க எனக்கும் ஆசைதான்
ஆனாலும் தடுக்கிறது என் உலகம்..

One response so far

எறும்புத் தத்துவம்

Filed under அ) கவிதைகள் by admin

எறும்பு தத்துவம் பற்றி கேள்விப்பட்டிருக்கிங்களா?
ஒரு இடத்துல படிச்சேன்..

Ant Philosophy
1. Never Quit – Find a way or make it.
2. Think ahead – Ants think winter all summer
3. Think Positive – Ants think summer all winter
4. Do what all you can

அதை உபயோகிச்சி ஒரு சின்ன கிறுக்கல்..

எறும்பு சொல்லும் பாடம்

மேலேறி கீழிறங்கி
முன்சென்று பின்சென்று
ஏதோ ஒரு வழி தேடி
இலக்கடைவோம் வா தோழா

இன்பக்காலம் முடிந்துவிடும்
துன்பம் கையை அசைத்துவரும்
உணர்ந்ததனை எதிர்கொள்ள
வலிமைசெய்வோம் வா தோழா

இந்த காலம் கடந்துபோகும்
இனிய வாய்ப்பும் தேடிவரும்
முதல் கதிரை வரவேற்க
காத்திருப்போம் வா தோழா

வேலையென்ன அறிந்தபின்பு
கவனம் முழுதும் அதில்செலுத்தி
முடியுமட்டும் உழைத்திடுவோம்
முன்னேறிட வா தோழா

எறும்பு சொல்லும் பாடமிது
கேட்டிடுவாய் என் தோழா
இன்னும் இன்னும் தேவையெனில்
கற்றுக்கொள்ள வா தோழா..

No responses yet

வெறுமை

Filed under அ) கவிதைகள் by admin

ரம்யமான இசை..
பிடித்தமான பாடல்..
கவின் சொட்டும் காட்சி..
மனம் கவர்ந்த புத்தகம்..
கண்சிமிட்டும் விண்மீன்..
வருடிச் செல்லும் காற்று..
அசைந்தாடும் இலைகள்..
சுகமான உரையாடல்..
என்று ஏதேதோ ..
மனதினுள் அடைத்தேன்..
ஆனாலும் மாற்றமில்லை
இங்கு பெருகி நிற்பது..
என் வெறுமைதான்.

One response so far

பத்துக் காசு

Filed under அ) கவிதைகள் by admin

உச்சி வெயில் வேளையிலே
செல்லும் சாலை மீதினிலே
ஒளியொன்று எழக் கண்டு
வியப்புடனே அங்கு சென்றேன்
மின்னலின் ஒளி தோற்கும்
மின்னிய பொருளைக் கண்டேன்
அழகிய பத்துக் காசு
சுடர்விடும் பத்துக் காசு
யாரதை விட்டுச் சென்றார்
யாரதை எடுத்துச் செல்வார்
எடுத்திட மனமிருந்தும்
ஏதேதோ தடுத்ததென்னை
குனிந்ததை எடுத்திட்டால்
குறும்பவர் கேலிசெய்வர்
குனிந்ததை எடுக்கலாமா
கோவிலில் சேர்க்கலாமா
அருகினில் இரப்பவர்க்கு
எடுத்ததை அளிக்கலாமா
பலவிதம் எண்ணிக்கொண்டு
பாதையைப் பார்த்த போது
கடந்தே வந்துவிட்டேன்
காசினைக் கண்ட இடத்தை
எண்ணங்கள் விடுத்து நானும்
எட்ட நடை போட்ட வேளை
விழிகளில் வந்து செல்லும்
அழகிய பத்துக் காசு.

2 responses so far

கடலின் தாகம்..

Filed under அ) கவிதைகள் by admin

பித்துப் பிடித்தன்ன போடி!!
பிணம் வந்துக் குவிவது கண்டு
திசை எட்டெங்கும் நீர் கண்டபோதும்
எமன் தாகமடங்கலை போடி!!!
பிஞ்சு உயிர்களைக் கொண்டான்
பல வண்ணக் கனவுகள் கொன்றான்
தாயின் கண்முன்னே சேயுயிர் தின்றான்
இன்னும் என்னென்னவோ துயர் செய்தான்
கடல் பொங்கின வேகம் கண்டாயோ?
கரை தின்றதன் சோகம் கண்டாயோ?
என்னென்று ஏதென்று சொல்வேன்
மனம் பித்துப் பிடித்தது போடி

No responses yet

அமரக் காதல்

Filed under அ) கவிதைகள் by admin

பொத்திவைத்த ஆசைகளை
இரகசியமாய் திறந்துவைத்து
உனக்கான என் அன்பை
உதிராத பாசப் பூவை
நமக்கு மட்டும் புரிந்திருக்கும்
நயன பாஷைக் கவிதைகளை
அழகாய்த் தேர்ந்தெடுத்து
அற்புதமாய்க் கோர்த்துவைத்தேன்
மடலினைக் கண்டுக் கண்டு
நாளெல்லாம் இன்பமுற்றேன்
உனக்கதை அனுப்பிட்டால்
எத்தனை நீ இன்புறுவாய்..
விழிகளின் வார்த்தையன்றி
வேறொன்றும் பேசிலோம் நாம்
வாய்ச்சொற்கள் தேவையில்லை
மனதினை மனம் அறியும்
ஆனாலும்…
சொல்லிடத் தோன்றவில்லை
இதயங்கள் கிழிபடலாம்..
அதனால்..
சொல்லிட்ட திருப்தியுடன்
மடலினை கிழித்துவிட்டேன்
இனி..
இந்த பூமியுள்ளவரை
இருவர் இதயங்களிலும்
வாழும் நம் அமரக் காதல்

No responses yet

« Newer Entries - Older Entries »