கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள் கவிதைகளாய்

Archive for the tag 'நட்பு'

தொலைந்து போன(வர்கள்)வைகள்..1

Posted by admin

என்றோ ஒருநாள்
ஏதோவொரு காகிதத்தில்
அவசரமாக கிறுக்கிவைத்த
நண்பனின் தொலைபேசியெண்
காணக்கிடைத்தது இன்று
காலங்களை வென்று
கண்ணீர் பரிசென தந்து..
தொலைபேசி இருக்கலாம்
பேசியவன் தொலைந்துவிட்டான்
காற்றினில் கலந்துவிட்டான்
எண்களைச் சுழற்றுகின்றேன்..
எண்ணியது நடக்குமா?
எடுத்து அவன் பேசுவானா?
செவிகள் இன்னும் மறக்கவில்லை
சென்றவனின் குரல் ஒலியை
தொலைந்த அவன் உடலினைப்போல்
அவன் குரலும் தொலைந்ததுவோ

No responses yet

நினைவுச் சுரங்கம்

Posted by admin

நட்பின் கையொப்பம் தாங்கிய
விலை மதிப்பிலாத ரூபாய் நோட்டு
பரிசென வந்து பாடம்செய்யப்பட்ட
பூக்களின் காய்ந்த துணுக்குகள்
வகுப்புநேரத் தூதனாய் ஆக்கப்பட்ட
நினைவுகள் தாங்கிய ஆஜர்த்தாள்
தளிர் கரத்தால் எழுதிக்கொடுத்த
அக்கா மகளின் அழகுக்கிறுக்கல்
வீதியிலே கண்டெடுத்த காகிதம்
கசங்கியும் கம்பீரமாய் பாரதி
அன்பாய் அண்ணன் அனுப்பிய
சாக்லெட்டின் மிஞ்சிய போர்வை
புத்தகம் அனுப்புமாறு வேண்டி
ஆசிரியர் அனுப்பிய அஞ்சலட்டை
நட்பிற்கு அனுப்பிய பரிசினை
கொண்டுசேர்த்தமைக்கான இரசீது
சுதந்திர தினம்தோறும் பிரியமாய்
சேகரித்துவைத்த தேசியக்கொடிகள்
தொலைத்துவிட்ட தோழி அனுப்பிய
முகவரி அறியமுடியா கடிதம்
சிதறிப்போன நண்பர் குழாமுடன்
சேர்ந்தெடுத்த புகைப்படங்கள்
துவங்கியது ஒழுங்குபடுத்தவாய்த்தான்
புதைந்ததென்னவோ நினைவுச் சுரங்கத்தில்
இன்னும் இன்னும் இனி(ரு)க்கிறது
இவை வெறும் நினைவுகளல்ல
நான் வாழ்ந்துவந்த வாழ்க்கை

No responses yet

தொலைந்த கனவு

Posted by admin

விளையாட்டாய்க் கோவில் கட்டி
வீடுதோரும் அறிக்கை ஒட்டி
பொத்தி பொத்தி சேர்த்த காசில்
பொங்க வைத்தோம் ஆண்டு தோரும்

எனக்கென ஒரு கூட்டம்
எதிரணியும் ஒரு கூட்டம்
இருவேறு முகிற்குழாமாய்
இடியுடனே வாழ்ந்துவந்தோம்

ஏரியில் மீன் பிடித்து
கேணியில் துளையவிட்டு
உச்சி வெயில் காயும்நேரம்
சூழ்ந்து நின்று ரசித்திருந்தோம்

வாதாம் மரத்தில் ஏறி
வாகாய் ஊஞ்சல் கட்டி
கேளிக்கைப் போட்டிவைத்து
கொட்டைகளைப் பரிசளித்தோம்

கோவிலும் காணவில்லை
பூசையும் நடப்பதில்லை
மரமும் மாறிப்போச்சு
மதிலும் வீடுமாச்சு

தனியொரு முகிலாய் நானும்
திரிந்து கொண்டிருக்கும் வேளை
என்றோ தொலைந்த கனவில்
ஏங்கும் என் நெஞ்சும் நினைவில்…

No responses yet

நட்பு (7.4.2003)

Posted by admin

நட்பென்னும் பாதை தன்னில்
நடக்கின்றேன் பல காதம்
கடக்கின்ற வழி தோறும்
பயில்கின்றேன் பல பாடம்
என்னை நான் உணர்ந்த்துகொள்ள
உதவியதென் நட்பேதான்
என்னை நான் உணர்த்திச்செல்ல
ஊக்கம் தரும் நட்பேதான்

நட்பென்னை வளர்க்கையிலே
நான் பிள்ளை கிப்போனேன்
உருவத்தில் மட்டுமின்றி
உள்ளத்தும் வளருகின்றேன்
நண்பர் சிலர் வருவதுவும்
வந்த சில மறைவதுவும்
நான் கடக்கும் பாதைதன்னில்
காலமும் கடந்து செல்ல..

நிழலுருவம் மறைந்தாலும்
நினைவு என்றும் மாறாது
நட்புடனே நான் நடக்க
நண்பர் என்னைச் சூழ்ந்திருக்க
என் பாதை நீண்டிருக்க
எழில் எங்கும் நிறைந்திருக்க
நடக்கின்றேன் நானும்தான்
நீயும் கூட வா நண்பா
நட்புடனே நடந்திடலாம்
களிப்புடனே நாள்தோறும்..

One response so far

ஒன்றுமில்லை

Posted by admin

ஆம் நண்பா..
மறைந்த உன்
நினைவுகளைத் தவிற
வேறொன்றும் இல்லை

விபத்தில் சிக்கியதும்
வலியில் வாடியதும்
நீ மட்டும் இல்லை..
என் மனதும் தான்

வேதனைப் பூக்களை
வார்த்தையில் கோர்த்தேன்
மனதினுள் பூட்டிவைத்தேன்
அது உனக்கேயானது

தவழ்ந்து வருவது
மாலையின் வாசமான
உன் நினைவுகள் மட்டுமே
வேறொன்றும் இல்லை..

No responses yet

மனம் (19.4.2003)

Posted by admin

மனம் என்பதோர் மந்திரப் பேழை
என்றுமே அன்பினை யாசிக்கும் ஏழை
நினைவுகள் எத்தனை கனவுகள் எத்தனை
அமிழாதிருக்கும் நிகழ்வுகள் எத்தனை
அடிநெஞ்சில் புதையுண்ட பொக்கிஷம் சிலவும்
அழகழகாய்த் துள்ளும் மீனாய்ச் சிலவும்
இத்துனை நினைவுகள் எங்கனம் வாங்கினாய்?
இன்னும் பலவர ஏன் தான் ஏங்கினாய்?
இன்பமென துன்பமென எங்கனம் பிரிப்பேன்?
அத்துனையும் பொக்கிஷமே இறுதிவரை காப்பேன்

No responses yet