பொய்முகம்

ஆ) க(வி)தை

 

60726

 

பொய்முகம் காட்டிக் காட்டிப்

பொழுதெல்லாம் உலவுகின்றார்

அகத்தினை மறைக்கும் இவர்கள்

அவனியில் அதிகம் உண்டு

 

விழியினுள் வலியை மறைத்து

விரிந்திடும் புன்னகை பூசி

கானல்நீர் எனும் பொய்யில்

கரைகிறார் பாவம் சிலபேர்!

 

காரியம் நடத்திடக் குழைந்தும்

கேட்டது முடிந்ததும் மறந்தும்

பச்சோஞ்தியாய் நிறம்மாறி

பாசாங்கு செய்வார் பலபேர்!

 

இன்னோர் வகை சொல்வேன் இங்கு,

இருப்பதிலே அதுதான் தீங்கு!!

 

வேஷங்கள் நிலைத்திட ஒருமுகம்!

வெறுப்பினைக் காட்டிட ஒருமுகம்!!

பசப்புகள் செய்திட ஒருமுகம்!

பலப்பல வகைகளில் பொய்முகம்!

காலம் கனிந்திடும் வரையினில்

கவனமாய்ப் பொய்முகம் பூட்டி

இனிமையை இதழ்களில் பூசி

இன்மையை மறைவினில் வீசி

நயமுடன் நன்மையாய்ப் பேசி

நம்பிடச் செய்திடுவார்கள்!!

நம்பாதே இவர்களை மக்காள்!

நட்டாற்றில் விட்டிடுவார்கள்!!

 


கதைகளில் களித்திடும் மக்காள்

மெய்யெது? கவனம் கொள்வீர்!

அகத்தினை மறைக்கும் இவரை

அறிந்திடல் மிகவும் அரிதே

சொற்களில் மயங்கிட வேண்டாம்

செயல்களே யாரெனச் சொல்லும்!

வீரிய விதை என்றாலும்

வீழிடம் பொருத்தே வாழ்க்கை!

செல்லிடம் தவறிப்போனால்

சேரிடம் மாறிப் போகும்!!

சீரிய வாழ்க்கை வாழ

செய்திட வேண்டியது இதுதான்

பொய்முகம் அறிவீர் மக்காள்

பொய்முகம் அறிவீர் நாளும்!!

2 thoughts on “பொய்முகம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *