உதிரத்தை உரமாக்கும் உழவன்

ஆ) க(வி)தை

My Tamil poem on a given title for a contest.

உதிரத்தை உரமாக்கும் உழவன்
———————————————————
உதிரத்தை உரமாக்கிடும் – உழவன்
உழைப்புக்கு மதிப்பிங்குண்டோ?
உழவையே தலையென்பவன் – உலகில்
உழலும் நிலை அறிவாருண்டோ?

வான் மழையோ பொய்த்துக் கொல்லும்
வரை அணையோ தடுத்துக் கொள்ளும்
வரவும் செலவான கதையை – இவன்
வீட்டடுப்பு வாகாய்ச் சொல்லும்.

பாதி இடைத்தரகன் பதுக்கிக் கொண்டான்
மீதி நிலக்கிழவன் பிடுங்கிச் சென்றான்
பாங்காய்ப் பன்னாட்டு முதலாளியும்
பெரிதாய்க் கொள்ளைபல அடித்துச் சென்றான்.

மண் வளத்தை மாய்ப்பதற்கே – மாற்று
மலட்டு விதை வாங்கச் செய்தான்
இயற்கை வீரியத்தைக் குலைத்துவிட்டு
செயற்கை இரச உரங்கள் விற்றுச்சென்றான்!
நல்லக் காளைகளை காவு வாங்கி
நலிந்த விந்துகளை விலைக்குத் தந்தான்
நெற்களஞ்சியமாம் தஞ்சை மண்ணை – மீத்தேன்
நஞ்சை அள்ளத் தரிசாக்கினான.

உழுதுண்டு வாழ்ந்த கூட்டம் – இன்று
தொழுதுண்ணும் நிலையைப் பாரீர்!
கழனிக்காடாய்ச் செழித்த மண்ணைக் – கடனால்
கிரையமாக்கும் நிலையைக் காணீர்!

ஊரக ஏர் பூட்டி இறுமாந்தவன்
ஊதியக் கூலியாய் உயிர் தாங்கினான்
வட்டிக் கடனெங்கும் துரத்திச் செல்ல
வாட்டும் இன்னுயிரும் துறந்தோடினான்.

தொழில் நுட்பப் புரட்சி வேண்டாம் – உழவுத்
தொழில் சிறக்கத் தெருட்சி வேண்டும்
தண்ணீர் உறிஞ்சும் ஆலைகள் வேண்டாம்
தங்கத் தாமிரபரணி தழைக்க வேண்டும்
சந்திரனில் வீடு வேண்டாம் – எங்கள்
சந்ததிக்குச் சோறு வேண்டும்
சீஸ் பிட்சாக்கு பெருகும் சந்தை– எங்கள்
சீரகச் சம்பா பெறுதல் வேண்டும்

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகு – பூமி
சுழலும் வரை நினைவில் வேண்டும்.
உதிரத்தை உரமாக்குவோன் – உலகில்
உயர்ந்திங்கே வாழ்தல் வேண்டும்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *