My Tamil poem on a given title for a contest. உதிரத்தை உரமாக்கும் உழவன் ——————————————————— உதிரத்தை உரமாக்கிடும் – உழவன் உழைப்புக்கு மதிப்பிங்குண்டோ? உழவையே தலையென்பவன் – உலகில் உழலும் நிலை அறிவாருண்டோ? வான் மழையோ பொய்த்துக் கொல்லும் வரை அணையோ தடுத்துக் கொள்ளும் வரவும் செலவான கதையை – இவன் வீட்டடுப்பு வாகாய்ச் சொல்லும். பாதி இடைத்தரகன் பதுக்கிக் கொண்டான் மீதி நிலக்கிழவன் பிடுங்கிச் சென்றான் பாங்காய்ப் பன்னாட்டு முதலாளியும் பெரிதாய்க் …
என் தமிழுணர்வை, தமிழ்க் கோபத்தை, தமிழ்ப் பாசத்தை, தமிழ் கர்வத்தை, தமிழ் வலியைச் சற்றே தள்ளிவிட்டுப் பார்க்கிறேன் எங்கும்.. தவிப்பது உயிர்கள்தாம் வலிப்பது நெஞ்சம்தாம் எரிவது வயிறுகள்தாம் தெரிவது துயரம்தாம்! ~கீதா ******
கடினமான நினைவுகள் காற்றுள்ள பந்துகள்! ஆழ் மனதுக்குள் ஆழ அழுத்திவிட்டு, ஆஹா வென்றேன்! என இறுமாந்து இருக்கும்முன் விர்ரென்று எழுந்து எங்கும் வியாப்பித்துக் கிடக்கின்றன! ~கீதா
மழை ஓய்ந்த விடியல்கள் —————————————— வெயில் உடுத்தாக் கருக்கல் துயில் எழும்பா மரங்கள் இலை அசையாக் காற்று இசை பரப்பாக் குயில்கள்… கிளை சொட்டும் துளிகள் துளி தாங்கிய புற்கள் மரம் சொரிந்த மலர்கள் மலர் படர்ந்த தடங்கள்… குருகு பறக்கும் வானம் மனதைக் கவ்வும் மௌனம் மேலும் கவிந்த ஞானம் ஏகாந்தம்… இனிமை மட்டுமல்ல! ~கீதா
என்னென்று சொல்வது நான்? ஏதென்று சொல்வது நான்? அனுதினமும் செய்திபார்த்து கலக்கமுற்றுக் கண்ணோக்கும் கண்மணிக் குழந்தைக்கு எதையென்று சொல்வது நான்? பட்டாய் மலர்ந்த பின்னே பரவிக் கமழும் மணத்தை, பிணத்தின் வாடை கொண்டே பேதையவள் அறியலாமா? சிட்டாய் வளர்ந்து சீராய்ச் சிரித்துச் சிறக்கும் முன்னே அமிலச் சிதறல் கொண்டே அனைத்தையும் பொசுக்கலாமா? என்னென்று சொல்வது நான்? பலாத்காரம் என்றால் யாதெனக் கேட்குமென் பிஞ்சுப் பெதும்பைக்கு எதையென்று சொல்வது நான்? ~கீதா
மண்ணில் வீழ்ந்த மிட்டாய்த் துண்டை வீணென ஒதுக்காமல் விட மனமில்லாமல் ஊதி ஊதி உண்ணும் குழந்தை போன்றது தான் – வேதனை கொடுத்தாலும் வினை பல புரிந்தாலும் விட்டு விட முடியாமல் வருந்தி அழுது மறக்க மறுத்து மீண்டும் ஒன்றையே நாடும் அன்பு கொண்ட மனதும்! ~கீதா
போகி மேளம்
அலாரம்ம்ம்ம்ம்ம்ம்ம் அடிக்கும் முன்னே எழுந்து ஓடி அரை இருளில் வழியைத் தேடி பங்காளிகளின் கதவைத் தட்டி படை சேர்த்துக் கிளம்பிடுவோம் நடுநடுங்கும் விடியாப் பொழுதில் நடுரோட்டில் போகிக் கொளுத்த. வாரக்கணக்கா குப்பை சேர்த்து வாசலிலே குவித்துப் போட்டு வானளாவத் தீயத் தூண்டி வாகாய் அதில் சூடு காட்டி ஈர்க்குச்சியை எடுத்து வெட்டி இருமுனையில் தாரை ஒட்டி பதம் பார்த்து அடிக்கையிலே பறையை மிஞ்சும் எங்கள் மேளம்! அதிகாலைக் குளிரில் அங்கே அனல் பறக்கும் …
கார்ப்பரேட் பெருச்சாளியின் கைப்பாவைதானே நாம்! அன்று.. கரித்தூளைக் கைப்பற்றி, பற்பசையைத் திணித்தார்கள்! செக்கு நெய்யைச் சீரழித்து சுத்தீகரித்துத் தந்தார்கள்! வரகும் கம்பும் வீணென்று வரட்டு ஓட்ஸ் கொடுத்தார்கள்! கருப்பட்டியைக் கரையவிட்டு கட்டிச் சர்க்கரை வளர்த்தார்கள்! இன்று காராம் பசுவைக் கண்டமாக்க காளை காவு கேட்கிறார்கள்! அடிமடியில் கைவைக்கும் கார்ப்பரேட் கொழுப்பைத் தடுப்போமா? அன்றி, அண்டை மாட்டினர் கடைவிரிக்க காங்கேயம் காவு கொடுப்போமா?
ஹைக்கூ
மீன்கள் மேற்பரப்பில் வந்து-வந்து செல்கின்றன இதோ ஒரு மீன் விளிம்பில் எட்டிப்பார்க்கிறது குழம்பு நன்றாகக் கொதித்துவிட்டது
ரகசியங்கள்..
அதோ… அந்தப் பூட்டாத அலமாரியில்தான் ஒளிந்து கொண்டிருக்கின்றன எனக்கே எனக்கான என் ரகசியங்கள்.. கதவின் இடுக்குகளில் கைப்பிடியின் குழல்களில் புடவை மடிப்புகளின் இடையினில் அழுக்குத் துணிகளின் வாடையில் ஆங்காங்கே எட்டிப் பார்த்தபடி எனக்காய் காத்திருக்கின்றன. கதவடைத்த கும்மிருட்டிலும் கண்ணயர்ந்து உறங்காமல் தொட்டுத் துழாவியபடி என்னைத் தேடித் திரிகின்றன வேறு எவரிடமும் மாட்டாமல் எப்படியோ ஒளிந்து கொள்கின்றன.. தாய்முகம் தேடும் பிள்ளைபோல் தவழ்ந்து தேய்கின்றன பாவம் அவைகள்.. இதோ.. வந்துவிட்டேன்.. இரைச்சலான உலகினை மறந்து ஏகாந்தத்தின் இனிமையில் …