புத்தகம் வாசித்தேன் – மகாபாரதம் – பாண்டவர்கள் தருமசீலர்களா?

ஐ) புத்தகம் வாசித்தேன்

தலைப்பு : மகாபாரதம் (எ) வியாசர் விருந்து

எழுதியவர் : ராஜாஜி (எ) சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி

வானதி பதிப்பகம்

ராஜாஜி அவர்கள் எழுதின மகாபாரதம் (எ) வியாசர் விருந்து படிச்சேன். விறுவிறுன்னு என்ன ஒரு நடை.. என்ன ஒரு விவரிப்பு.. காட்சியெல்லாம் கண்முன்னே விரியுது.. எளிமையான தமிழில் எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதப்பட்ட ஓர் அற்புதமான படைப்பு.

புத்தகத்தை படிச்சு முடிச்சதுமே எனக்கு தோன்றின சில கருத்துக்கள் இங்கே..

பாண்டவர்கள் ஒன்றும் அவ்வளவு தரும சீலர்கள் இல்லை

யுத்தக் களத்தில் அவர்கள் மற்ற வீராதிவீரர்களை ஜெயித்ததெல்லாம் கிருஷ்ணனின் சூழ்ச்சியாலும், நேர்மையற்ற போர் முறைகளாலும், போர் தர்மத்தை மீறியதாலும்தான்.

அர்ச்சுனனின் செயல்கள்

பிதாமகர் பீஷ்மர் – ‘ஒரு பெண்ணை எதிர்த்துப் போர் புரியமாட்டேன்’ என்ற உறுதியுடைய பீஷ்மரை, பெண் ஜன்மமான சிகண்டியை முன்னால் வைத்துக்கொண்டு வீழ்த்தினான் அர்ச்சுனன்.

ஜயத்ரதன் (சிந்து தேசத்து அரசன் ) – தன் மகன் அபிமன்யுவைக் கொன்ற ஜயத்ரதனை அடுத்த சூரிய அஸ்தமனத்திற்குள் வதம் செய்வேன் என்று பிரதிக்ஞை எடுத்திருப்பான் அர்ச்சுனன்.

மறுநாள் சூரியன் அஸ்தமனமாவதற்கு சற்றுநேரம் முன்பே தனது மாயையால் இருள் உண்டாக்கினான் கிருஷ்ணன். சூரியன் அஸ்தமித்துவிட்டான் என்று மகிழ்ந்து நின்றிருந்த ஜயத்ரதனை அம்பிட்டு வீழ்த்தினான் அர்ச்சுனன்.

கர்ணன்– மண்ணில் பதிந்து விட்டிருந்த தேர்ச்சக்கரத்தைத் தூக்கிக் கொண்டிருந்த சமயத்தில், யுத்த தர்மத்திற்கு புறம்பாக கர்ணனை வீழ்த்தினான் அர்ச்சுனன்.
[கர்ணன் வீரன்தான் ஆனால் அவனே சில சமயங்களில் புறமுதுகிட்டு ஓடி இருக்கிறான், துரியோதனனையே தனியே விட்டு. ]

தருமரின் செயல்கள்

துரோணாச்சாரியார்பீமசேனன் சொல்வது உண்மையா? என் மகன் அஸ்வத்தாமன் இறந்தது உண்மைதானா? என்று சத்திய சீலர் தருமரிடம் வினவினார் துரோணர்.
தருமன் சொன்ன பதில் “அஸ்வத்தாமன் இறந்தது உண்மை.
[உண்மையில் இறந்தது “அஸ்வத்தாமன் என்கிற யானை“. ]தருமனும் பொய் சொன்னான்.
துக்கம் மேலிட ரதத்தில் அமர்ந்து யோகநிஷ்டையில் ஆழ்ந்திருக்கும் சமயம் பார்த்து திருஷ்டத்யும்னன் துரோணரின் ரதத்தில் ஏறி அவர் தலையைத் துண்டித்தான்.

முன்பு வனவாசத்தில் இருக்கும்போது நச்சுப்பொய்கையில் நீர் அருந்தி தருமரின் நான்கு தம்பிமார்களும் உயிரிழந்தனர். அங்கு வந்த யக்ஷனின் கேள்விகளுக்கு விடைகூறி பின்னர் தம்பி நகுலனை உயிருடன் தரக் கேட்டான். குந்திக்கு தான் ஒருவனும், மாத்ரிக்கு நகுலன் ஒருவனும் உயிருடன் இருந்தால் சமமாக இருக்கும் என்று தர்மம் சொன்னவன் காந்தாரியின் நூறு புத்திரர்களில் ஒருவரைக்கூட உயிருடன் விடாதது எந்த விதத்தில் தர்மமாகும்? காந்தாரியும் தாய்தானே?

பீமனின் செயல்கள்

துரியோதனன் – நாள் முழுதும் போர் புரிந்து ஓய்ந்துபோய், காயமுற்று, கவசமில்லாமல் இருந்த துரியோதனனை கதாயுத போருக்கு அழைத்தான் பீமசேனன், அதுமட்டுமல்லாமல் கதாயுத போர் சாஸ்திரத்திற்கு விரோதமாக துரியோதனனின் நாபிக்கு கீழ் (தொடையில்) அடித்து வீழ்த்தினான்.

திருதராஷ்டிரன்,காந்தாரி – புத்திரர்களை இழந்த சோகத்தில் இருக்கும் திருதராஷ்டிரனை மேலும் மேலும் தன் சுடுசொற்களால் குத்தி மனதைப் புண்படுத்தினான் பீமசேனன். இதனால் அவர் தன் மனைவி காந்தாரியுடன் வனவாசம் சென்றார், உடன் குந்திதேவியும் சென்றார்.

பஞ்ச பாண்டவர்களைச் சார்ந்தவர்களின் செயல்கள்

பூரிசிரவசு – துண்டிக்கப்பட்ட கையுடன் யோக நிலையில் இருந்தவனை வெட்டிக் கொன்றான் சாத்யகி.

முடிவாக நான் சொல்றது என்னன்னா

இதுபோல பல சமய சந்தர்ப்பங்களில் பாண்டவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் தருமத்துக்கு புறம்பாகவும், நேர்மையில்லாமலும், மனிதத்தன்மையற்றும், பிறர் மனதை புண்படுத்தியும், சூழ்ச்சியுடனும் செயல்பட்டனர். இப்படி இருக்க இவர்களை மட்டும் கொண்டாடுவது ஏன்?

என்னதான் சூழ்ச்சியால் சூதாடுவதற்கு வரவழைக்கப்பட்டாலும் மதியிழந்து மனைவியையும் தம்பிமார்களையும் சூதாட்டத்தில் தோற்றது யார் குற்றம்?

என்னைப் பொறுத்தவரையில் துரியோதனன் மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாதவன். இராஜ்ஜிய பதவியை அடைய பல விதங்களில் முயற்சி செய்தான்.. பாண்டவர்களுக்கு துன்பமிழைத்தான்.. ஆனாலும் யுத்தக்களத்தில் பாண்டவர்கள் போலல்லாமல் சுத்த வீரானாகவே நடந்துகொண்டான்.

நட்புக்கு இலக்கணமானவன். போர்க்களத்தில் நண்பன் கர்ணனுக்கு துணைபுரியவேண்டி தன் தம்பிகளை கொத்துக் கொத்தாக இழந்தவன்.

ஓய்ந்திருந்த போதும் பீமசேனன் போருக்கழைத்தவுடன் போர் தர்மத்திற்கிணங்க போரிட்டவன். ஷத்ரியர்கள் விரும்பும் வீர சுவர்க்கம் அடைந்தவன்.

மீண்டும் சொல்கிறேன் பாண்டவர்கள் ஒன்றும் தர்ம சீலர்கள் இல்லை

27 thoughts on “புத்தகம் வாசித்தேன் – மகாபாரதம் – பாண்டவர்கள் தருமசீலர்களா?”

  1. mahabharatham oru kathai. eppadi vendumanalum eluthalam.
    arivulla nalla karuthukkalai matum eduththuk kollavendum.kirishnavin soolchiyal venravarkalthane. ungal karuththuthan enakkum. aanaal yarum sonnal ketka mattarkal. nammaik kurai solluvarkal. I don`t want this story in school books. panjali eppadi ivarin manaivi enra kelvi ketkum ikkalak kulanthaikalukku enna pathil solvathu enru thikaithu ninraval naan. thanks geetha.

  2. வணக்கம் லலிதா,

    மகாபாரத்தில் உள்ள படிப்பினைகள் நன்றாகத்தான் இருக்கிறது. நல்லதை எடுத்துக்கொண்டு அல்லதை விடவேண்டியதுதான்.. இருந்தாலும் புத்தகம் படித்தபின்பு மனதை நெருடிய விஷயங்களில் சிலவற்றை இங்கு பதிந்தேன் அவ்வளவே…

    மற்றபடி கள்ளன் என்றும், மாயன் என்றும், திருடன் என்றும் செல்லமாக அழைக்கப்படும், வணங்கப்படும் கிருஷ்ணன் அவதாரமா? அல்லது வெறும் பாத்திரமா? தெரியலியேப்பா…

    அன்புடன்
    கீதா

  3. நல்லவர்களா கெட்டவர்களா என்பதை ஒட்டுமொத்தமாகத்தான் பார்க்க வேண்டும். நீங்கள் பாண்டவர்களின் தவறுகளாக கூறியவை அத்தனையுமே போர்க்களத்திலே செய்யப்பட்டவை. ஒரு முன் தீர்மானத்துடனேயே இப்பதிவை எழுத முயன்றீர்கள் என நினைக்கிறேன்.

    போர் முறை தர்மங்களை முதலில் மீறியது துரியனே. நீங்கள் பாண்டவர்களால் செய்யப்பட்டதாக கூறப்பட்ட அதர்ம யுத்த செயல்கள் எல்லாமே அபிமன்யுவின் வதத்துக்கு பிறகுதான் வந்தது, பீஷ்மர் விஷயம் தவிர. அபிமன்யுவை எத்தனை மகாரதர்கள் எப்படி கொன்றனர் என்பதைப் பார்த்துமா துரியன் நியாயவான் என கூறுகிறீர்கள்?

    பீஷ்மர் விஷயமும் அவரே சொல்லித்தான் நடந்தது. அவருக்கு சுய இச்சை மரணம்தான். ஆகவே அவர் வெல்ல முடியாதவர். அதே சமயம் தனது சபதம் காரணமாக துரியன் பக்கம் இருக்கும் நிர்ப்பந்தத்துக்கு ஆளானவர். அவரே யுதிஷ்டிரரிடம் கோடி காட்டுகிறார், பெண் எதிரில் நின்றால் யுத்தம் செய்ய மாட்டார் என்று. இத்தனைக்கும் சிகண்டி யுத்தம் செய்த சமயம் ஆண்தான். பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவன். அவனும் மகாரதர்களில் ஒருவன். பூர்வ ஜன்மத்தில் அம்பையாக பிறந்து, பீஷ்மரின் குருட்டுத்தன மடச்செய்கையால் அலைக்கழிக்கப்பட்டவள். அவள் பீஷ்மரை கொல்ல சபதம் செய்தவள். அதற்காக பரமசிவனிடம் யாகம் செய்து அடுத்த பிறவியில் பீஷ்மரை கொல்லும் வரம் பெற்று உயிர்த்தியாகம் செய்து மறு பிறவி எய்தியவள். அவள் அப்பிறவியிலும் பெண்ணாகப் பிறந்ததே ஒரு விதியாகத்தான் பார்க்க வேண்டும். அவளை ஆணாகப் பிறப்பிக்க சிவபெருமானால் முடிந்திருக்காதா? ஆக எல்லாவற்றையும் பல பரிமாணங்களில் பார்க்க வேண்டும். எனவே பீஷ்மரின் மரணம் ஒரு விதிதான். அதுவும் அவர் போர்க்களத்தில் கொல்லப்படவில்லை. உத்தராயாணம் வரை இருந்து எல்லோருக்கும் ஆசி கூறிவிட்டுத்தான் போகிறார். பீஷ்மரின் தர்ம சங்கடத்தை பற்றி நான் போட்ட பதிவு http://dondu.blogspot.com/2007/11/blog-post_12.html

    இப்போது துரோணர் வதத்துக்கு வருவோம். துரோணரும் அபிமன்யுவின் வதம் போது ஒன்றும் தர்மமாக யுத்தம் புரியவில்லை. மேலும் அவர் பிரும்மாஸ்திரத்தை செலுத்துவதாக இருந்தார். அது எவ்வளவு அழுகினி ஆட்டம் என்பதை அறிவீர்களா? அதனால் வரும் கேடு அணு ஆயுதங்களால் வரும் கேட்டை போன்றது. அதை தடுத்தேயாக வேண்டும். ஆகவே “அசுவத்தாமா ஹதஹ குஞ்சரஹ” என கூற வேண்டியதாயிற்று. அது பற்றி நான் போட்ட பதிவு http://dondu.blogspot.com/2007/11/blog-post_15.html

    ஆக, போர் என்று வந்துவிட்டால் அதர்மங்கள் இருதரப்பிலிருந்துமே ஏற்படும். நீங்கள் அதில் பாண்டவர்களை மட்டும் குறை கூறுவது சரி அல்ல. சரி முதலிலுருந்தே வருவோமா. துரியன் சிறுவனாக இருந்தபோதே பீமனுக்கு விஷம் கொடுத்ததை பற்றி என்ன கூறுவீர்கள்? அதே போல அரக்கு மாளிகை? அதே போல பாண்டவர்களை வனவாசத்தின் போது துன்புறுத்த எண்ணி துர்வாசரை அனுப்பியது, யட்சர்களிடம் அவன் மாட்டிக் கொண்டபோது தருமனால் காப்பாற்றப்பட்டது என்று பல நிகழ்ச்சிகளைப் பார்த்தால் உங்களுக்கு ஒரு சமநிலை ஏற்படவேண்டுமே.

    100 கௌரவர்களும் கொல்லப்பட்டது யுத்தத்தில், அதுவும் பீமானாலேயே நிறைவேற்றப்பட்டது. தன் மகனை கண்ட்ரோல் செய்யாமல் போனதால் காந்தாரியும் திருதராஷ்டிரனும் கொடுத்த விலை அது. துரோபதையை மானபங்கப்படுத்தியதை எவ்வாறு நியாயப் படுத்துவீர்கள்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  4. வணக்கம் டோண்டு ராகவன் ஐயா

    நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல அந்தப் புத்தகத்தைப் படித்து முடித்ததும் என் மனதில் நின்ற, எனக்கு நெருடலாகத் தோன்றின கருத்துக்களைத்தான் பதிந்திருக்கின்றேன்..

    இதுவரையில் பாண்டவர்களென்றால் தருமவான்கள் என்றும் துரியோதனன் மிகத்தீயவன் என்றும் தான் பாடபுத்தகங்களிலும் சில மகாபாரதத் தொடர்களிலும் கண்டு கேட்டு அறிந்திருந்தேன். துரியோதனனைப் பற்றிச் சொல்லும்போது அவனின் தீய செயல்களைத்தான் சொல்கிறார்கள், அதே போல பாண்டவர்களைப் பற்றிச் சொல்லும்போது அவர்கள் செய்த நற்செயல்களைத்தான் சொல்கிறார்கள்.. பாண்டவர்களும் இத்தகு அதர்ம செயல்களைச் செய்திருந்தார்கள் என்பது இதுவரையில் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இப்பொழுது முதன் முறையாக முழுமையாகப் படித்ததும் எனக்குத் தோன்றின கேள்விதான் பாண்டவர்களை மட்டும் நல்லவர்கள் என்று கொண்டாடுவது ஏன்? என்பது.

    நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து நிகழ்ச்சிகளும் ஓரளவிற்கு நன்றாகவே நினைவிருக்கிறது [ சிகண்டி வரலாறு, அபிமன்யு வதம்,பீமனுக்கு விஷம் கொடுத்தது, அரக்கு மாளிகை,வனவாசம்… ]. பாண்டவர்களும் அதர்ம செயல்களில் ஈடுபட்டார்கள் என்றுதானே நானும் சொன்னேன்… துரியோதனன் அதர்மசெயல்கள் செய்யவில்லை என்று நான் ஒருபோதும் கூறவில்லை.

    மற்றபடி எந்த விதி சிகண்டியை பெண்ணாக பிறப்பித்து ஆணாக மாற்றி பீஷ்மரின் மரணத்திற்கு காரணமாக இருந்ததோ அதே விதிதான் துரோபதையை மானபங்கப்படுதுவதற்கும், மகாபாரதப் போர் தொடங்குவதற்குமான காரணமாக இருக்குமென்று நினைக்கின்றேன்.

    எனக்குத் தெரிந்ததை, புரிந்ததை எமை சார்ந்த மக்களுக்குத் தெரிவிக்க வேண்டி எழுதினேன். இவை என் கருத்துக்கள். உண்மையில் தவறென்றால் திருத்திக்கொள்வேன்..

    வருகைக்கு நன்றி ஐயா

    அன்புடன்
    கீதா

  5. உண்மைதான் அவர்களும் மானிட பிறவியே அதனால் வெற்றி மட்டுமே குறிக்கோளாக செயல்பட்டனர் டோண்டுவின் விளக்கங்களும் கருத்தில் கொள்ளவேண்டியவை

  6. வணக்கம் இறைவன்

    உங்கள் கருத்துக்கு நன்றி. டோண்டு அவர்களின் விளக்கங்களை நிச்சயம் மனதில் கொள்வேன்.

    அன்புடன்
    கீதா

  7. கர்ணன் எப்போது புறமுதுகிட்டு ஓடினான் என்று கூற முடியுமா.
    பாண்டவர்கள் தன் தம்பிகள் என்று தெரிந்தும். துரியோதனனுக்காக‌
    அனைத்து உண்ர்ச்சிகளையும் தன்னுள் அடக்கி வாழ்ந்தவன். அவன்
    எப்படி துரியோதனை தனியே விட்டு சென்று இருக்க முடியுமா?
    சிந்தித்து பதில் கூறவும் கீதா அக்கா. இல்லையேன்றால் அவன்
    நீங்கள் சொல்வதை போல் சுயந‌லம் கொண்டவனாக இருந்திருப்பவனானால்
    தன் தம்பிகளிடம் போய் நான் தான் உங்களுடைய அண்ணன் என்று
    கூறி மணிமகுடம் ஏற்றிருக்கலாம் அல்லவா?
    உயிருக்காக‌ பயந்தவன் என்றால் குந்தி இடம் ஒரு முறை மட்டுமே
    நாகாச்சிரத்தை பயன்படுத்துவேன் என்று உறுதி கொடுத்திருப்பானா?

  8. வணக்கம் தம்பி,

    பாண்டவர்களை வசைபாடவோ அல்லது துரியோதனாதர்களை வசைபாடவோ நான் இந்தப் பதிவை எழுதவில்லை. மகாபாரதம் என்ற புத்தகத்தைப் படித்தபின் என் மனதிலிருந்த கருத்துக்களைக் கூறினேன் அவ்வளவே.

    கர்ணனை நான் சுயநலவாதியென்றோ, வீரமில்லாதவனென்றோ கூறவில்லை தம்பி. அவனும் புறமுதுகிட்டு ஓடியிருக்கிறான் என்றுதானே கூறினேன்.

    நீங்கள் கேட்பதால் அந்த நிகழ்ச்சியைக் கூறுகிறேன்.

    பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தசமயம் அவர்கள் துன்பப்படுவதை நேரில் கண்டு மகிழ ஆசைப்பட்ட துரியோதனன் தானும் ஒரு பெரிய சேனையோடு துவைத வனம் சென்றான்.

    துவைத வனத்தில் பாண்டவர்களுடைய ஆசிரமத்துக்கு வெகு சமீபத்தில் இருந்த தடாகத்தருகே தனது சேனையுடன் தங்க விழைந்தான்.. ஆனால் அங்கு ஏற்கனவே தங்கியிருந்த கந்தர்வராஜன் சித்திரசேனனுடன் மோதல் ஏற்பட்டு போராகி அந்த கந்தர்வகளின் மாயையை தாக்குப்பிடிக்க முடியாமல் துரியோதனனைத் தவிர மற்ற அனைவரும் கர்ணன் உட்பட புறமுதுகிட்டனர். பின்னர் தர்மரின் கட்டளையின் பேரில் பாண்டவர்கள் வந்து துரியோதனனை மீட்டனர்.

    புறங்காட்டி ஓடிய கர்ணன் துரியோதனனை வழியில் சந்தித்தபோது துரியோதனன் சொன்னான்..” கர்ணனே!நான் அந்த சித்திரசேனனால் கொல்லப்பட்டு மாண்டு போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்று.

    தம்பி இது பாண்டவர்களின் வனவாசடத்தின்போது நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது.

    தம்பி மறுபடி என் பதிவை படித்துப் பாருங்கள்.. நான் யாரையும் தவறாக எழுதவில்லை.

    அன்புடன்
    கீதா

  9. பாண்டவர்கள் வனவாசத்தின்போது அவர்களி சீண்டி கேலி செய்யும் பொருட்டு கர்ணன், துரியன் ஆகியோர் காட்டுக்கு சென்றனர். போன இடத்தில் யட்சர்களுடன் ஏற்பட்ட சண்டையில் துரியன் சிறை பிடிக்கப்பட்டான், கர்ணன் போரிடமுடியாது தோற்று ஓடினான்.

    பீமனும் அருச்சுனனும் நன்றாக வேண்டும் துரியனுக்கு என மனம் மகிழ்ந்தபோது தருமன் அவர்களை கண்டித்து துரியனை சிறை மீட்கச் செய்தான்.

    மகாபாரதம் சீரியலாக வந்தபோது கர்ணன் குடி போதையில் இருந்ததாகவும், ஆகவே சண்டை போட இயலவில்லை என்றும், போதை தெளிந்து வருவதற்குள் பீம அருச்சுனர்கள் துரியனைக் காப்பாற்றியதாக காட்டப்பட்டது.

    //பாண்டவர்களுக்கு துன்பமிழைத்தான்.. ஆனாலும் யுத்தக்களத்தில் பாண்டவர்கள் போலல்லாமல் சுத்த வீரானாகவே நடந்துகொண்டான்.//
    எப்படி? அபிமன்யு வதத்தை மறந்து விட்டீர்களே? என்னதான் இருந்தாலும் துரியன் பாசம் இப்படி கண்ணை மறைக்கக் கூடாது.

    ஜயத்திரதன் வீரனாக இருந்தால் எதிர்த்து சண்டை போட்டிருக்க வேண்டும். கோழை மாதிரி ஒளிந்தவனுக்கு சரியான முறையில்தான் தண்டனை கிடைத்தது. அதிலும் அவன் தலையை கீழே விழ்ழ்த்துபவரது தலை சுக்கு நூறாய் வெடிக்கும் என்ற அழுகினி வரம் வேறு. அதையும் மீறி அருச்சுனன் ஜெயத்திரதன் தலையை கொய்து அவன் தந்தையின் கைகளில் விழச்செய்து அவன் கையிலிருந்து நழுவச் செய்து தந்தையையும் கொன்றான்.

    ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள். எதிராளி அழுகினி ஆட்டம் தொடங்கினால் நாமும் பார்த்து கொண்டே இருக்கக் கூடாது என்பதுவும் மகாபாரதத்தின் நீதிதான்.

    மறுபடி கூறுவேன் அழுகினி ஆட்டம் ஆரம்பித்தது துரியனே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  10. வணக்கம் டோண்டு ராகவன் அவர்களே,

    தனியாக மாட்டிய அபிமன்யுவை மகாரதர்கள் சூழ்ந்துகொண்டு கொன்ற கொடூரத்தை மறக்கவில்லை நான்.

    ‘துரியோதனன் பாசம்’ என்று ஏதோ எழுதுகிறீர்கள்.

    மறுபடியும் சொல்கிறேன்… பாண்டவர்களும் தர்மம் தவறி நடந்துகொண்டார்கள் என்று நான் தெரிந்துகொண்டதைச் சொல்ல விழைந்தேன்.

    மகாபாரதத்தின் நீதி பற்றியோ, அழிகினி ஆட்டம் ஆரம்பித்தது யார் என்பதைப் பற்றியோ பேசவோ விவாதிக்கவோ நான் இந்தப் பதிவை இடவில்லை.

    இவ்வாறான விவாதங்களில் ஈடுபடுவதில் எனக்கு விருப்பமும் இல்லை.

    நன்றி

    கீதா

  11. துரியன் பாண்டவர்களை போலல்லாது சுத்த வீரனாக நடந்து கொண்டான் என்று எழுதியதாலேயே அவ்வாறு எழுத வேண்டியிருந்தது.

    நான் ஏற்கனவே கூறியபடி ஒட்டு மொத்தமாகத்தான் ஒப்பிட வேண்டும். அப்படி பார்த்தால் பாண்டவர்களிடம் தருமம் அதிகமாகவும் அதர்மம் குறைவாகவும் இருந்தது, கௌரவர்களிடம் அதன் நேர் எதிர் நிலை இருந்தது. அவ்வளவே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  12. வணக்கம் டோண்டு ராகவன் அவர்களே

    //பாண்டவர்களிடம் தருமம் அதிகமாகவும் அதர்மம் குறைவாகவும் இருந்தது, கௌரவர்களிடம் அதன் நேர் எதிர் நிலை இருந்தது.//

    இது உண்மை. ஏறக்குறைய இதுபோன்ற ஒரு கருத்தைத் தான் நானும் சொல்ல முயன்றேன். பாண்டவர்களின் அதர்மங்களும், துரியோதனனின் தர்மங்களும் எனக்கு புதியதாகப் பட்டதனால் எழுதினேன். வார்த்தைகளின் வெளிப்பாட்டில் நான் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

    உங்கள் வருகைக்கும், வழங்கிய கருத்துக்களுக்கும் நன்றி

    அன்புடன்
    கீதா

  13. எனக்கு புரிகிறது கீதா அவர்களே. நீங்கள் முதன் முறையாக மகாபாரதத்தை ஒரே மூச்சில் படித்து, அதுவரை 100% தர்மவான்கள் என்று எண்ணிய பாண்டவர்களை பற்றி மாறுபாடான செய்தி கிடைக்கவே உணர்ச்சி வசப்பட்டீர்கள் என்பதை புரிந்து கொள்கிறேன்.

    மகாபாரதத்தில் வெற்றி பெற்ற பாண்டவர்கள் சந்தோஷமாகவே இல்லை. அரசுக்காக அவ்வளவு உறவினர்களை கொன்றதை அவர்களாலும் ஜீரணிக்க முடியவில்லை. ராஜாஜி இது பற்றி எழுதியிருப்பதை நினைவிலிருந்து தருகிறேன்.

    “என்னதான் பகவத் கீதை உபதேசம் அளித்து அருச்சுனன் மனதை மாற்றியிருந்தாலும், அவனது முதல் சந்தேகம், அதாவது இத்தனைப் பேரையும் கொன்று நாடு தேவைதானா, நிஜமாக ஆயிற்று. பாண்டவர்கள் மனதில் சந்தோஷம் என்பதே இல்லை”.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  14. கீதா அவர்களே,

    உங்கள் பதிவினை படித்தது வண்டு. உங்கள் மனதில் தோன்றிய நெருடல்கள் வண்டிற்கும் நெருடல் தந்தவையே… அற நெறிகளை போதிக்க உருவாக்கப்பட்ட இதிகாசத்தில் ஏன் இத்தனை நெருடல்கள் என வியக்கிறேன். இதை குறித்து எவரேனும் விளக்குவரோ என பல காலம் காத்திருந்தும் யாரும் விளக்கவில்லை!

    என் நெருடல்களை நானும் என் பக்கத்தில் பதிந்திருக்கிறேன். உங்கள் கருத்தோடு நானும் ஒத்துப்போகிறேன். கருத்தொத்த ஒருவரை கண்டதில் மகிழ்வுற்றதால் ஒரு வரி இங்கே எழுதிட நினைத்து இதை எழுதிட்டேன்.

    உங்கள் மற்ற படைப்புகளையும் பார்த்தேன். மகிழ்ந்தேன். அதும் அம்மா குறித்த உங்கள் கவிதை, அதை குறித்து அங்கே எழுதுகிறேன்.

    இங்கே, உங்களைப்போல் என் நெருடல்களை நான் பதித்த பக்கத்திற்கு உங்களை அன்போடு அழைக்கிறேன், வந்தீர்களேயாயின் மகிழ்வேன்!

    http://sillvandu.blogspot.com/2007/01/vs.html

    அன்புடன்,
    வண்டு… சில்வண்டு!

  15. இல்லையே.. கீதா அவர்களே…

    என் கருத்துக்கு மனமார்ந்த நன்றி என்று இங்கே உங்கள் பக்கத்தில் நீங்கள் அளித்திருக்கும் பதிலையும், மறுமொழி கிடைத்ததா என்று கேட்டு என் பக்கத்தில் விடுத்திருக்கும் மொழியையும் தவிர வேறு ஏதும் கிடைக்கப்பெறவில்லையே?

    அந்த மறுமொழியை மறு முறை பெற இயலுமா என்ற கவலையோடு,

    சில்வண்டு!

  16. “…அற நெறிகளை போதிக்க உருவாக்கப்பட்ட இதிகாசத்தில் ஏன் இத்தனை நெருடல்கள் என வியக்கிறேன்”.

    உங்கள் கேள்வியிலேயே விடையும் உள்ளது. அற நெறிகளை போதிக்க மட்டும் என்றால் உபநிஷதம் போலவோ, திருக்குறள் அல்லது நாலடியார் போலவோ எழுதப்பட்டு இருந்திருக்கும். “இப்படி நடந்தது” என்று பொருள்படும் “இதிஹாச”மாக எழுத என்ன அவசியம்? இப்படியெல்லாம் நடந்தது என்பதை உள்ளபடியே பதிப்பது அவசியமாகக் கருதப்பட்டது; அதனால்தான் பாண்டவர் தரப்புத் தவறுகளும் துரியோதனின் மேன்மைகளும் கூடப் பதிக்கப்பட்டன. புனைகதையென்றால் இதயக்கனி எம்ஜிஆர் மாதிரி கதாநாயகத் தரப்பை அப்பழுக்கின்றி புனைந்து விட்டிருக்க முடியும். “இதிஹாசத்தில்” அது முடியாது. மட்டுமல்ல பாரதத்தில் தர்மம் பற்றிய உரைகளையும் (உ-ம் விதுர நீதி) தர்மம் என்பது எப்படி கத்திமேல் நடப்பதைப் போன்ற விஷயமாக இருக்கிறது என்பது குறித்த விவாதங்களையும் பல இடங்களில் காணலாம். இதில் மனித வாழ்க்கையில் பல நிலைகளுக்கும் முடிவுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் தேவையான பல செய்திகள் பொதிந்துள்ளன. அதனால்தான் மற்ற புண்ணீய விஷயங்களை ஒதுக்கி விட்டு ரோமஹர்ஷணராலும் தொடர்ந்து வைசம்பாயனராலும் புண்ணியம் மிகுந்தது என்று ஜனமஜேய அரசனின் யாகத்தில் மஹாபாரதம் அங்கு கூடியிருந்தவர்களால் கேட்கப்பட்டு விவரிக்கப்பட்டது.

  17. //பிதாமகர் பீஷ்மர் – ‘ஒரு பெண்ணை எதிர்த்துப் போர் புரியமாட்டேன்’ என்ற உறுதியுடைய பீஷ்மரை, பெண் ஜன்மமான சிகண்டியை முன்னால் வைத்துக்கொண்டு வீழ்த்தினான் அர்ச்சுனன்.//

    தவறு – பிறப்பால் பெண் மற்றும் வரத்தால் ஆண். சிகண்டியின் வரமே தன்மூலம் பீஷ்மர் அழிய வேண்டும். பீஷ்மரின் ஆசை பெண்/ஆண் சிகண்டியின் அம்புகளின் மூலம் தான் அழியக் கூடாதென்று. அவரின் கொள்கை அவ(ள்)னெதிரிருக்கையில் அம்பெய்யலாகாதென்று. ஆக அவர் விரும்பிப் பெற்றதம்மரணம். சிகண்டியின் கையில் அழியக் கூடாது, அதே சமயம் சுய இச்சை மரணத்தினால் தற்கொலையாகது அது பாவத்தின்பாற்பட்டது. ஆக அதி வீரன் அர்சுணன் கையால் இறந்துப் படவேண்டுமென்பது அவரது ஆவல். தாத்தனின் ஆவல், வெற்றியின் வேட்கை, கண்ணனின் தூண்டுதல் – இத்தனைக்குப் பின்னும் அர்ச்சுனன் தயங்கி நிற்கிறான். அப்போது தான் கிருஷ்ணன் சக்ராயுதம் ஏந்தி களம் இறங்குகிறான்.

    இந்த இடத்தில் க்ருஷ்ணனின் வாக்கு நினைவிற் கூற வேண்டும். துரியன் படைக்கெதிராக ஆயுதமேந்தேன் என்ற வாக்கை அர்ச்சுனனால் கண்ணன் கைவிட நேர்ந்தால் அது அர்ச்சுனன் மட்டுமல்ல பாண்டவர்களுக்கே இழுக்கு.. ஆக பீஷ்ம வதம் நிகழ்ந்தாக வேண்டும். அதர்மத்தின் பால் அது நடக்கவில்லை. ஒரு மஹா ரதரான பீஷ்மர் தன் வில்லை எறியவில்லை. ஆக நிராயுத பாணியத் தாக்கவில்லை. அதே நேரம் அவர் வில்லை வைத்துக் கொண்டு சும்மா ஒன்றும் இல்லை. அர்ச்சுனப் படைகளை அழித்துக் கொண்டும் அதே வேளையில் முக்கியமாக சிகண்டியின் பாணங்கள் ஏதும் தன் மீது தைக்காதவாறும் போர் புரிந்துக் கொண்டிருந்தார் – ஆக அர்ச்சுனன் அம்பெய்யக் கடமைப் பட்டவன்.

    பீஷ்மர் ஒவ்வொரு அம்பு உடலில் தைக்கும் போதும் இது அர்சுனன் அம்பென்று மகிழ்ந்து ஏற்றுக் கொள்கிறார்

    மிச்சத்தையும் விளக்க வேண்டுமா தங்கையே ?

  18. பாண்டவர்களிடத்தில் கண்டிப்பாக சறுக்கல்கள் உண்டு. ஆனால்

    டோண்டு சார் சொன்னது போல

    “குணம் நாடி குற்றமும் நாடி ” தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது. சொல்லவருவது என்னான்னா… தவறுகள் அப்படின்னு நினைக்கிற எல்லாமே தவறில்லை.

    மனிதர்கள் சூழ்நிலைக் கைதிகள்.

  19. அன்புள்ள திருமதி கீதாவுக்கு,
    உங்கள் மகாபரதம் பற்றிய கருத்துக்களையும்,அதற்கு மாற்றுக்கருத்து பின்னூட்டமிட்டவர்களையும் படித்தேன். நான் வியாசர் விருந்து என்னுடைய பள்ளி நாட்களில் படித்தேன்.அந்த வயதில் எனக்கு எதுவும் முரண்பாடாகத்தெரியவில்லை. சென்றமாதம் திரு சோ அவர்கள் எழுதிய மகாபாரதம் படித்தபோது துரியோதினாதிகள் எல்லாம் எப்போதும் கெட்டவர்கள் இல்லை,பாண்டவர்கள் எல்லாம் எப்போதும் நல்லவர்கள் இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன்.அரசியலில் 45சதவீதம் ஓட்டு வாங்கியவர்கள் 2/3 பங்கு மெஜாரிட்டியில் ஆட்சியைப்பிடிப்பதும்,35 சதவீதம் ஓட்டு வாங்கிய கட்சி 5 அல்லது 6 MLA க்களுடன் காணமல் போவதும் நடக்கிறது.நான் சொல்லவந்த கருத்து இதுவல்ல.கிருஷ்ணரும்,மற்ற பல பாத்திரங்களும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அவதரித்ததாக மகாபாரதம் கூறுகிறது.எல்லாருக்கும் ஒவ்வொரு role.அவர்கள் அனைவரின் நோக்கமும் பூமியின் பாரத்தைக்குறைப்பதற்காக ஒரு போரை நடத்தி அதில் கோடிக்கணக்கான மனிதர்களைக் கொன்று அவர்களை மேலுலகம் அனுப்புவது தான். இப்படிப்பட்ட நிலையில் இவர்கள் மேல்,இவர்கள் கீழ் என மதிப்பிடுவது பட்டிமன்றத்திற்குச்சரியான தலைப்பாக இருக்கும்.
    அன்புடன்
    ராஜசுப்ரமணியன்.
    என் கிறுக்கல்கள் இங்கே http://www.ourtongue.blogspot.com

  20. பண்பாட்டுக்கு முரணான ஓர் இழிவான கதைக்கு இத்தனை
    விவாதம் தேவையா? இவ்வளவு விவாதித்தீர்களே,குந்திக்கும்
    துரோபதைக்கும் ஏன் இத்தனை புருஷர்கள்,என்று விவாதித்தீர்களா? துரோபதையுடன் தருமர் குஜாலாக
    இருந்தபோது அர்ச்சுனர் தற்செயலாக பார்த்து விட்டதால்
    அந்த தோஷத்தைக் கழிப்பதற்காக தேச சஞ்சாரம்
    போய் என்ன பண்ணினார்?
    அதையும் கொஞ்சம் விவாதியுங்களேன்.

  21. கீதா அக்கா அவர்களே, தங்களுடைய இப்பதிவினை படித்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இன்று தான் ஏனோ தெரியவில்லை மகாபாரதத்தை கார்டூனில் பார்த்தேன். பார்த்ததும் அதில் எழுந்த சந்தேகத்தால் இணையத்தை நாடினேன்… ஒரு சில சந்தேகங்கள் தீர்க்கப்பட்டுவிட்டன, தீர்க்கப்படாத கேள்வி, பாண்டவர்களுக்கு பாஞ்சாலி என்பது சரியா? இதற்கு சரியான பதிலை யாராவது கூறுங்கள்… மேலும், கிருஷ்ணர் நிஜமாகவே கடவுளா என என் மனம் என்னை கேட்கிறது… அவர் செய்த சூழ்சிகள் யாவும் அந்த சமயத்தில் தேவையானது என்றாலும், அவை தவறு தான் என நான் கருதுகிறேன்…. இதை எல்லாம் படிக்கும் பொழுது, மனிதர்கள் என்றாலே தவறு செய்பவர்கள் தான் என்றும் இது தான் வாழ்க்கை என்றும் எண்ணத் தோன்றுகிறது.. மனம் ஏற்று கொள்ள மறுக்கிறது…. தவறாக இருந்தால் மன்னிக்கவும், நன்றி….

  22. இப்படி ஒரு வரலாறு நடந்தது அதில் இருந்து நாம் கர்கவேண்டியத்தை கற்போம் தவறுகள் இல்லாத மனிதன் இல்லை….
    கிருஷ்ணன் கடவுள் என்பதை பீஷ்மர் முதலானவர்கள் ஏற்கும் போது அதில் உண்மை இருக்க வேண்டும் துரியோதனன் கிருஷ்ணன் ஆயர்குலத்தவன் என்றே கருதுகிறான்.

  23. ஒரு விசயத்தை சாதாரண கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கும் ஞானக் கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கும் அனேக வித்தியாசம் இருக்கும். மேலோட்டமான பார்வையில் அதிகமான அற்புதமான விசயங்கள் விழுவதில்லை. அகக் கண்ணையும் திறந்து ஞானத்துடன் நோக்க வேண்டும். நான் ஒரு கிறிஸ்தவள். ஆனால் மஹா பாரதத்தில் சொல்லப் பட்டவையெல்லாம் எனக்கு மிகவும் அர்த்தமுடையவையாகவும், சராசரி மனிதர்கள் நல் வழி நடப்பதற்கு அனேக நற் செய்திகள் கொண்டதாகவும் இருப்பதாகத் தெரிகிறது. என்னைப் பொறுத்த வரையில் நான் அறிந்தவரையில் மஹா பாரதத்தில் குறை சொல்ல ஏதும் இல்லை… பதிலாக நிறைவான விசயங்களே உள்ளன… நமது பார்வையை தான் இங்கே சீர் திருத்த வேண்டி உள்ளதெனலாம்… 🙂

  24. சகுனியின் பக்கம் இருந்து பார்த்தால் அவனும் நல்லவன் ஆகதான் எனக்கு தெரிகிறதுபா…..

  25. மகாபாரத்தில் அர்சுணனுக்கு எத்தனை மனைவியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *