இருட்டில் இருப்பவனுக்கு தான் வெளிச்சத்தின் அருமை தெரியும் ஆனால் வெளிச்சத்திற்கு வந்ததும் அது மறந்துவிடுகிறது அவனுக்கு
Month: December 2004
மனம் (19.4.2003)
மனம் என்பதோர் மந்திரப் பேழை என்றுமே அன்பினை யாசிக்கும் ஏழை நினைவுகள் எத்தனை கனவுகள் எத்தனை அமிழாதிருக்கும் நிகழ்வுகள் எத்தனை அடிநெஞ்சில் புதையுண்ட பொக்கிஷம் சிலவும் அழகழகாய்த் துள்ளும் மீனாய்ச் சிலவும் இத்துனை நினைவுகள் எங்கனம் வாங்கினாய்? இன்னும் பலவர ஏன் தான் ஏங்கினாய்? இன்பமென துன்பமென எங்கனம் பிரிப்பேன்? அத்துனையும் பொக்கிஷமே இறுதிவரை காப்பேன்
தேடல் (24.7.2003)
உதிரத்தில் கலந்தென்னை ஊனுடம்பில் தேடுகின்றேன் இதயத்தின் உட்புகுந்து இடுக்கெல்லாம் தேடுகின்றேன் அறிவென்னும் ஒளிகொண்டு அகத்துள்ளும் தேடுகின்றேன் அன்பென்னும் விழிகொண்டு புறத்தினிலும் தேடுகின்றேன் உயிரென்பது தான் நானோ? உயிர் தங்கும் உடல் நானோ? அறிவென்பது தான் நானோ? அதைக்கடந்த நிலை நானோ? எது இங்கே நான் என்று என்னில் நான் தேடுகின்றேன் உடல் பிரிந்து உயிர் செல்லும் நாளில் தான் விளங்கிடுமோ?
மனதின் கல்வெட்டுக்கள்( 26.08.2004 )
காலமது உருண்டு செல்ல கனவென மங்கும் நிஜத்தில் மீண்டுமொரு பயணம் புரிய உதவும் மன கல்வெட்டுக்கள் சுவையில் மனம் மகிழ்ந்திட்டாலும் ‘சுட’ யில் அது வெதும்பிட்டாலும் படையல் பல காத்திருக்கும் பந்தி மன கல்வெட்டுக்கள் அன்றை நினைவில் அகமகிழ அதனை சிந்தை அபகரிக்க இன்றை சிறார் பின்னொரு நாள் இந்த ஏக்கம் அடைகுவரோ? கடந்து வந்த பாதை இனிது நடக்கும் பாதை என்றும் புதிது வாழ்க்கை பயணப் பாதையெங்கும் மைல்கல் மன கல்வெட்டுக்கள்
மனிதம் எங்கே?
ஏதோ விவரங்கள் தேடி ஏடுகள் புரட்டிக் கொண்டிருந்தேன் சிக்கின புகைப்படம் இரண்டு சிதைத்தன மனதினை கொன்று பட்டினிச் சாவின் நிலத்தில் பச்சிளங் குழந்தையின் தவிப்பை கழுகினுக்கு இரையாம் முன்னர் கவனமாய் படம் பிடித்திருந்தர் செந்நிறக் கனியின் விழாவில் சிக்கிய மங்கையைக் களிப்பில் போதையின் மாக்கள் கொண்டாட பொறுமையாய் படம் பிடித்திருந்தர் கழுகினை விரட்டவும் இல்லை காத்திடும் எண்ணமும் இல்லை மனதின் தேடலில் இனிமேல் மனிதமும் சேர்த்திடலாமோ?
வெளிச்சத்துளி
இருள் கவிந்த நள்ளிரவில் நிலவும் உறங்கும் காரிருளிள் மின் இணைப்பும் உறங்கிவிட அவஸ்தையிலே விழித்து எழுந்தேன் அந்தகனின் நிலையில் நானும் அன்னை உடன் எழுந்து சென்று அழகு விளக்கு ஏந்தி வந்து அக்கறையாய் ஏற்றி வைத்தார் பனித்துளியின் உருவம் கொண்டு உயிர்பெற்ற வெளிச்சத் துளியின் ஒளியெங்கும் பரவி நிற்க உறைந்து நின்றேன் அழகினிலே மின் இணைப்பு விழித்தவுடன் விழித்துக் கொண்ட பேரொளியில் துளி வெளிச்சம் மறைந்துவிட மகிழ்ச்சி இல்லை மனதில் மட்டும்.