அடைமழை பொழிந்ததன் சுவடு
அழகாய் தெரிந்தது இங்கு
ஆங்காங்கே திட்டுத் திட்டாய்
அதிசயத் தடாகம் பட்டாய்
குருகுகளின் குளியல் அறையோ
அவையெந்தன் விழிகட்கு இரையோ
சொட்டிய துளிகளின் சப்தம்
செவிகளை தீண்டிடும் சொர்கம்
விழித்தது செங்கதிரோனோ
விடியலின் அழகிதுதானோ
தங்கமுலாம் பூசிய இலைகள்
வெள்ளிமணி சொட்டிடும் கிளைகள்
கோர்த்திடும் எண்ணம் கண்டு
தீண்டினேன் விரல்கள் கொண்டு
உருகின விரல்களின் வழியே
சிதறின மணிகளும் தனியே
விழிகளின் சொந்தம் அழகோ?
விரல்பட அழிந்தே விடுமோ?