விளையாட்டாய்க் கோவில் கட்டி
வீடுதோரும் அறிக்கை ஒட்டி
பொத்தி பொத்தி சேர்த்த காசில்
பொங்க வைத்தோம் ஆண்டு தோரும்
எனக்கென ஒரு கூட்டம்
எதிரணியும் ஒரு கூட்டம்
இருவேறு முகிற்குழாமாய்
இடியுடனே வாழ்ந்துவந்தோம்
ஏரியில் மீன் பிடித்து
கேணியில் துளையவிட்டு
உச்சி வெயில் காயும்நேரம்
சூழ்ந்து நின்று ரசித்திருந்தோம்
வாதாம் மரத்தில் ஏறி
வாகாய் ஊஞ்சல் கட்டி
கேளிக்கைப் போட்டிவைத்து
கொட்டைகளைப் பரிசளித்தோம்
கோவிலும் காணவில்லை
பூசையும் நடப்பதில்லை
மரமும் மாறிப்போச்சு
மதிலும் வீடுமாச்சு
தனியொரு முகிலாய் நானும்
திரிந்து கொண்டிருக்கும் வேளை
என்றோ தொலைந்த கனவில்
ஏங்கும் என் நெஞ்சும் நினைவில்…