நட்பின் கையொப்பம் தாங்கிய
விலை மதிப்பிலாத ரூபாய் நோட்டு
பரிசென வந்து பாடம்செய்யப்பட்ட
பூக்களின் காய்ந்த துணுக்குகள்
வகுப்புநேரத் தூதனாய் ஆக்கப்பட்ட
நினைவுகள் தாங்கிய ஆஜர்த்தாள்
தளிர் கரத்தால் எழுதிக்கொடுத்த
அக்கா மகளின் அழகுக்கிறுக்கல்
வீதியிலே கண்டெடுத்த காகிதம்
கசங்கியும் கம்பீரமாய் பாரதி
அன்பாய் அண்ணன் அனுப்பிய
சாக்லெட்டின் மிஞ்சிய போர்வை
புத்தகம் அனுப்புமாறு வேண்டி
ஆசிரியர் அனுப்பிய அஞ்சலட்டை
நட்பிற்கு அனுப்பிய பரிசினை
கொண்டுசேர்த்தமைக்கான இரசீது
சுதந்திர தினம்தோறும் பிரியமாய்
சேகரித்துவைத்த தேசியக்கொடிகள்
தொலைத்துவிட்ட தோழி அனுப்பிய
முகவரி அறியமுடியா கடிதம்
சிதறிப்போன நண்பர் குழாமுடன்
சேர்ந்தெடுத்த புகைப்படங்கள்
துவங்கியது ஒழுங்குபடுத்தவாய்த்தான்
புதைந்ததென்னவோ நினைவுச் சுரங்கத்தில்
இன்னும் இன்னும் இனி(ரு)க்கிறது
இவை வெறும் நினைவுகளல்ல
நான் வாழ்ந்துவந்த வாழ்க்கை