வட்டமான அப்பமொன்று
வானில் மிதந்து போகுது
எட்ட நின்று பார்ப்பதற்கே
எச்சில் நாக்கில் ஊறுது
எட்டி யாரும் எடுக்கும்முன்னர்
எடுக்க மனசு துடிக்குது
எட்டிப் பார்த்தும் முடியவில்லை
ஏங்கி மனசு தவிக்குது
நின்று நானும் பார்த்துவந்தேன்
நித்தம் அளவு குறையுது
இன்று பார்க்க வந்தபோது
இல்லாமல் அது போனது
எடுத்துச்சென்ற கள்வன் யாரோ
ஏழை மனசு கலங்குது
கண்டு வந்து சொல்வார் யாரோ
கலங்கும் மனசு கேட்குது