குழந்தைகளின் விளையாட்டு

உ) அனுபவம் எழுதுது

முன்னொருகாலத்தில்(??) எங்கண்ணன் வாரந்தவறாம நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போய்வருவாரு.. ரொம்ப பக்தியெல்லாம் இல்லை..அங்க கொடுக்கிற வெண்பொங்கலை சாப்பிடத்தான். சுடச் சுடப் பொங்கல் கொடுப்பாங்க அதை வலது கையைக் குவிச்சு வாங்கி, அது கையிலிருந்து வழிஞ்சு ஓடாம இருக்க இடது கையை சப்போர்ட்டுக்கு கொடுத்து ம்ம் அது ஒரு தனிக் கலை..

அப்படித்தான் இன்னிக்கு நிவியும்(என் பொண்னு) ரெண்டு கையையும் குவிச்சு வச்சிருந்தது. உள்ளே பொங்கல் இல்லை கூழாங்கற்கள். மதியம் நிவியை விளையாட வெளிய கூட்டிட்டு போயிருந்தேன். போற வழியெல்லாம் கீழே கிடக்கும் கூழாங்கல்லை எடுத்து எடுத்து கையில குவிச்சி சேமிக்க ஆரம்பிச்சாச்சு.. கல் கீழே விழாம இருக்க அப்பப்போ சப்போர்ட் செய்தபடி. சமயத்துல ஒரு கல் கீழ விழும் அதை எடுக்கப்போக வேற ஒன்னு கீழ விழும்..சில சமயம் எல்லாமே சிதறிடும்.. ஆனாலும் சளைக்காம எடுத்து போட்டு அந்த ஒரு விளையாட்டு தொடர்ந்தது. என்ன விளையாட்டுன்னு எனக்கு புரியலை ஆனா நிவி ரொம்ப சந்தோஷமாவே விளையாடிட்டு இருந்தது.

யோசிச்சுப் பார்த்தா ஏதோ புரிஞ்சது.. குழந்தைங்க அவங்களுக்கான விளையாட்டை தானாவே உருவாக்கிடறாங்க. காற்றைத் துரத்திக்கிட்டு ஓடுறது, பொம்மைகளை தூங்க வைக்கிறது, வெற்று பாத்திரத்திலிருந்து உணவு அள்ளி உண்பது (நமக்கும்) ஊட்டுவது, வீடெங்கும் தண்ணீர் கோலம் போடுறது, எதையோ தேடுறது, பொருட்களை இடம் மாற்றி மாற்றி வைக்கிறது.. இப்படி நிறைய.

சொப்பு வச்சு விளையாடுறது பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். மண்சோறு சமைச்சு, தண்ணீர்க் குழம்பு வச்சு, குப்பைமேனி இலை அப்பளம் பொரிச்சு என் அக்கா பொண்ணு நந்து எனக்கு விருந்து பரிமாரினதை என்னால மறக்க முடியாது. உடம்புக்கு நல்லது, மூளை வளரும்னு சொல்லி என் வாயில் மண் அள்ளிக்கொட்டியதை என்னால தடுக்க முடியல. அழகான விளையாட்டு.

நான் சின்ன வயசுல விளையாடினதெல்லாம் நல்லா நினைவிருக்கு. கோவில் கட்டுவோம், அதுக்கு தவறாம முழு ஆண்டு லீவில் கும்பாபிஷேகம்(?) செய்வோம், கையால் நோட்டீஸ் எழுதி.. நன்கொடை(?) வாங்கி திருவிழா நடத்துவோம், கூழு ஊத்துவோம். கோவிலுக்கு வருடா வருடம் சுண்ணாம்பு பூசுவது கண்டிப்பா உண்டு.. யார் வீட்டிலாவது பொங்கலுக்கு அடித்தது மிச்சம் இருக்கும். சந்தோஷமான விஷயம் என்னன்னா கோவில் பூசைக்கு எல்லாரும் வருவாங்க. நிஜமான கோவில் போலவே தினமும் தீப வழிபாடும் உண்டு. இன்றும் அந்த கோவில் எங்க வீட்டு வாசலில் இருக்கு.

சமீபத்தில் ப்ளோரிடா டிஸ்னி வர்ல்டுக்கு போயிருந்தோம். அங்க நடந்த ஒரு ஸ்டேஜ் ஷோ பார்க்கவேண்டி கியூவில காத்திட்டிருந்தோம். கிட்டத்தட்ட 2 மணி நேரத்துக்கு மேல காத்திருக்கவேண்டியிருந்தது… நிகழ்ச்சி நடக்கப்போறது என்னம்மோ 25 நிமிஷம்தான். இப்பலருந்தே கியூவில நிக்கலைனா அப்புறம் இந்த ஷோ பார்க்க முடியாதுன்னு பெரியவங்கல்லாம் காத்திருந்தாங்க, குட்டிப் பசங்களுக்கு அவ்வளவு பொறுமை இருக்குமா என்னா? ஒன்னொன்னும் இங்கயும் அங்கயும் ஓட ஆரம்பிச்சாச்சு, ஒரு அழுகைக் குரல் எழும்ப அங்கொன்றும் இங்கொன்றுமாய் அடுத்தடுத்து அழுகுரல்கள். ஒரு மாதிரியான இறுக்கமான சூழ்நிலை.

எங்களாலும் நிவியை தூக்கி வச்சிருந்து சமாளிக்க முடியலை, கொஞ்சம் நேரம் கீழே விட்டோம். நிவி கீழ இறங்கி அங்க மரத்துலருந்து விழுந்த இலைகளை எல்லாம் எடுத்து கையில சேகரிக்க ஆரம்பிச்சது. கொஞ்சம் சேர்ந்தததும் அங்க நின்னுட்டிருந்த பசங்க ஒவ்வொருத்தர் கிட்டயும் போய் ஆளுக்கு ஒன்னா அவங்க கையில கொடுக்க ஆரம்பிச்சது. இது சிரிச்சிட்டே கொடுத்ததை பார்த்ததும் அவங்களும் புரியாம சிரிச்சிட்டே வாங்கிக்கிட்டாங்க. எல்லாருக்கும் கொடுத்ததும் கையில் இருக்கும் இலைகள் காலி உடனே நிவிக்கு வேற யோசனை வந்திருச்சி ஒருத்தர் கையில உள்ளதை வாங்கி இன்னொருத்தருக்கு கொடுக்க ஆரம்பிச்சது. என்ன விளையாட்டோ ஆனா பசங்களுக்கு பிடிச்சு போச்சு. சில பசங்க இலைகளை தேடி எடுத்து வச்சிக்கிட்டு நிவிக்காக காத்திருந்தாங்க. அங்க இருந்த எல்லாருமே இந்த விளையாட்டை இரசிக்க ஆரம்பிச்சிட்டாங்க. பெரியவங்களும் விதிவிலக்கில்லை.. கொஞ்சம் நேரத்துல அது ஒரு செயின் ரியாக்ஷன் மாதிரி ஆயிருச்சு.. எல்லார் கையிலயும் ஓர் இலை…எல்லார் முகத்துலயும் ஒரு புன்னகை. இந்த விளையாட்டு ஒரு அரை மணி நேரம் நீடிச்சது. கொஞ்சம் நேரத்துலயே ஷோவுக்கான வாசலையும் திறந்துட்டாங்க காத்திருந்த அலுப்பே இல்லாம எல்லாரும் சந்தோஷமா நிகழ்ச்சியை இரசிக்கப் போனோம்.

எவ்வளவு பெரிய விஷயத்தையும் அலட்டிக்காம, ரொம்ப சாதாரணமா செய்து முடிச்சிடறாங்க குழந்தைங்க.. படிச்சு பெரியவங்களான நமக்குதான் தேவையில்லாத தயக்கம், பொறாமை,ஈகோ போன்ற சில்லியான நிறைய விஷயங்கள் இருக்குது. குழந்தைகள் கிட்ட இருந்து நிறையவே கத்துக்கவேண்டி இருக்கு.. அப்படி கத்துக்கலையின்னாலும் பரவாயில்லை அதுங்களையாவது இன்னும் கொஞ்சம் நாளைக்கு குழந்தைத்தனம் மாறாம சந்தோஷமா விளையாட விடுவோமே? எதுக்கு இப்பவே நாம சுமக்கிறதை அவங்களுக்குள திணிக்கப்பார்க்கணும்? வேண்டாமே.. பாவம் பசங்க விளையாடட்டும்.

(இது நான் 29-5-08 அன்று எழுதி வச்சது.. இன்னிக்குதான் மறுபடி படிச்சேன் … மனதுக்குள் அதே உணர்வுகள்..)

3 thoughts on “குழந்தைகளின் விளையாட்டு”

  1. அன்புள்ள கீதா ,
    எங்கே நீண்ட நாட்களாகக் காணோம் . தினம் உங்கள் படைப்புகளை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அப்படி உங்கள் விசிறியாகி விட்டேன். கிட்டத்தட்ட ஒருவருடம் போல் ஆகிவிட்டது.
    மகள் பிறந்து உங்களை முழுதும் ஆக்ரமித்துக் கொண்டாள் போலும். உங்கள் எழுத்துக்களும் மகளைப் பத்தியதுதான்.ஆயினும் அருமையான படைப்பு.
    ஒன்பது மாதங்கள் உனை முழுதாய் நான் சுமந்தேன்
    அதன் பிறகு என்னுயிரைச் சுமப்பதெல்லாம் நீயல்லவோ
    என்ற பொன்மணி வைரமுத்துவின் வரிகள் நினைவில் வந்தது.

    மகளின் செயல்களையே அடிக்கடி எழுதுங்கள். அலுக்காத நிகழ்வுகள் அல்லவா.
    அன்புடன் லலிதா

  2. குழந்தைங்க எவ்ளோ வேகமா வளர்ந்திடுறாங்க…..

  3. இருந்தாலும் ரமேஷ் அண்ணனை இப்படி வாரகூடாது, பாவம் அது என்ன செய்யும்.
    நந்தினியை சொல்லுகின்றயே நீ எப்படி இருந்தாய் சிறுவயதில். சற்று பின்னோக்கி பார்.
    வீட்டின் பின்புறம் இருக்கும் பாதாம் விதையை எடுத்து, வீட்டில் இருக்கும் சர்க்கரை, அரிசி, எல்லாம் எடுத்து, சமையல் சேது சாபிட்டது நினைவில் இல்லையா? (ஆனாலும் “நந்து எனக்கு விருந்து பரிமாரினதை என்னால மறக்க முடியாது. உடம்புக்கு நல்லது, மூளை வளரும்னு சொல்லி என் வாயில் மண் அள்ளிக்கொட்டியதை என்னால தடுக்க முடியல. அழகான விளையாட்டு” ரொம்ப ஓவர்.
    குழந்தைகள் உலகமே தனி உலகம். பார்க்க சின்னபுள்ளதனம்மா இருந்தாலும் பார்க்கின்றே நமக்கே அனந்தம் கிடைக்கும் பொழுது, விளையாடுகின்றே அவங்களுக்கு எவ்ளோ மகிழ்ச்சி இருக்கும். இன்னும் நாமும் அவர்களுடன் சேர்த்து விளையாடினால்?
    so think and join them, dont scold/scream their stupidty. enjoy with their stupidty.
    அன்புடன்
    முரளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *