குழந்தைகள் முதன்முதலில் பேசக் கற்றுக்கொண்டவுடன் தமது கேள்விக்கணைகளை பெற்றோர்களிடம் தான் தொடங்குகின்றனர். பெற்றோர்கள் தானே அவர்களின் முதல் ஆசிரியர்கள்.
“அப்பா ராத்திரியானா இந்த சூரியன் எங்கே போகுது?”
“அம்மா வானம் ஏன்மா நீலமா இருக்கு?”
“எல்லாருக்கும் ஒரே மாதிரி எலும்புதானே? அப்போ ஏன் வேற வேறமாதிரி இருக்காங்க?
பெற்றோர்கள் சொல்லும் பதில்களில் இருந்து கிளைத்தெழும்புகின்றன மேலும் சில கேள்விகள்.
நம் வாழ்நாள் முழுதும் நாம் சில கேள்விகளை சுமந்து கொண்டே செல்கிறோம்.
சில கேள்விகளுக்கு விடை தேடுவோம், சில கேள்விகளுக்கு “இதற்கெல்லாம் விடையே இல்லை” என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொண்டு விடை-தேடுதலை விட்டுவிடுவோம்.
எஸ்.ராமகிருஷ்ணன் http://sramakrishnan.com , சமகால எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். இலக்கியம், சினிமா, நாடகம், இணையம் என பல்வேறு தளங்களில் தன் பங்களிப்பை அளித்து வருபவர். பல விருதுகளும் பெற்றவர்.
“கேள்விக்குறி” என்கிற இந்த புத்தகம் அவரின் சில கட்டுரைகளின் தொகுப்பாக, விகடன் பதிப்பகத்தாரால் வெளியிடப்படுகிறது. இந்த கட்டுரைகள் மூலமாக, அவர் தனக்கே உரிய பாணியில், சுவையான தகவல்கள், கதைகள், சம்பவங்கள் மூலமாக கேள்விகளுக்கு விடை தேட முற்படுகிறார். அவற்றிலிருந்து சில கேள்விகளும், சிந்தனைகளும்.
—————————————–
“எதுக்காக இவ்வளவு அவசரம்?”
இந்த நூற்றாண்டின் தீர்க்க முடியாத நோய்களில் ஒன்று, அவசரம். இயந்திர பொம்மைகள் போல வாழும் நமது அவசர வாழ்வின் பொருள்தான் என்ன?
ஜென் கதை ஒன்று
ஒரு ஜென் துறவி காட்டுக்குள் நின்ற நிலையில் தவம் செய்துகொண்டு இருந்தார். பறவைகள் அவரின் தலையிலும் தோளிலும் உட்கார்ந்துகொண்டு பயமின்றி இளைப்பாறிச் சென்றன. இதனால் அந்தத் துறவியிடம் ஏதோ மாய சக்தி இருக்கிறது என்று நம்பி அவரிடம் சீடர்களாகச் சேர்வதற்கு பலரும் முயற்சி செய்தார்கள்.
ஓர் இளைஞன் அந்தத் துறவியிடம் சென்று, “மனிதர்களைக் கண்டால் பயந்து ஓடும் பறவைகள் உங்களிடம் மட்டும் எப்படி இவ்வளவு நெருக்கமாக இருக்கின்றன?” என்று கேட்டான். அவர் பதில் சொல்லாமல் புன்னகை மட்டுமே செய்தார்.
அங்கேயே இருந்து அவரைப் போல தானும் பறவைகளை வசியப்படுத்த பழக வேண்டியதுதான் என்று முடிவுசெய்த இளைஞன், அவரைப் போலவே நிற்கத் துவங்கினான். ஒரு பறவைகூட அவனை நெருங்கி வரவே இல்லை. சில வருடங்கள் அங்கேயே இருந்தும் அவனால் பறவைகளைத் தன் தோளில் அமரச் செய்ய முடியவில்லை.
ஓர் இரவு துறவியிடம், “இதற்கான பதில் தெரியாவிட்டால் இப்போதே ஆற்றில் குதித்த்ச் சாகப் போகிறேன்” என்றான். துறவி சிரித்தபடியே, “ புயலில் சிக்கிய மரத்தைப் போல உன் மனது எப்போதும் மிக வேகமாக அசைந்தபடியே இருக்கிறது. பதற்றம் மற்றும் பொறுமையின்மைதான் உன்னைப் பறவைகளை விட்டு விலக்கி வைத்திருக்கிறது. கூழாங்கல்லைப்போல உள்ளுக்குள் ஈரத்தோடும் வெளியில் சலனமில்லாமலும் இருந்தால், பறவைகள் உன்னை தாமே தேடி வரும் “ என்றார்.
நமது வீட்டில் உள்ளவர்கள், நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள் என்று எவரோடும் நமக்கு இணக்கம் இல்லாத சூழல் உருவானதற்கான காரணமும் இதுதானில்லையா?
———————
“என்ன ஊரு இது, மனுஷன் வாழ்வானா?
“வாய்விட்டு எப்படிங்க கேட்கிறது?
“இந்த காலத்துல யாரை நம்ப முடியுது சொல்லுங்க?”,
“என்னை ஏன் யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க?”
“உங்களை எல்லாம் யாரு கல்யாணம் பண்ணிக்கச் சொன்னது?”
கேள்விகள் கொண்ட அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.
கிடைக்குமிடம் : http://udumalai.com/?prd=kelvikkuri&page=products&id=2128