சிட்டுக் குருவியின் தேடல் 20.12.2004

அ) கவிதைகள்
சிட்டுக் குருவிக்கு ஒருநாள்
சிறகும் வளர்ந்தது கொஞ்சம்
‘பட்’டென அதனை விரித்து
பறந்திட துடித்தது நெஞ்சம்

மெத்தென சிறகுகள் விரிய
உயர்ந்தது குருகதும் மெதுவாய்
பறப்பது தன்னியல்பென்றே
உணர்ந்திட மகிழ்ந்தது அழகாய்

காடுகள் கடந்திட வேண்டும்
கவின்பல கண்டிட வேண்டும்
நாடுகள் சென்றிட வேண்டும்
நன்மைகள் அறிந்திட வேண்டும்

மேலோர் உரைத்திடக் கேட்டு
மேன்மைகள் பெற்றிட வேண்டும்
துவண்டிடும் மக்கள் கண்டு
துயரங்கள் துடைத்திட வேண்டும்

சிட்டுக் குருவிக்கு இங்கே
சேர்ந்திடும் ஆசை கண்டீர்
சிறகினை விரித்தே அதுவும்
சென்றிடும் வேகம் கண்டீர்

பறந்தது குருகும் உயரே
பயின்றது பலவும் வழியே
நீண்டது பயணம் வெளியே
நினைத்தது குருகும் தனியே

எத்தனை தொலைவினுக்கப்பால்
எத்தனை மறைபொருள் உளதோ?
அத்தனை கண்டிட எனக்கும்
ஆயுளும் இங்கே உளதோ?

இத்துனை பரந்த உலகை
எவ்விதம் பறந்து கடப்பேன்?
கடலென பலதும் உளதே
எவ்விதம் அதனை பயில்வேன்?

சிந்தையில் சிக்கின நெஞ்சும்
சிறகுகள் வலித்தன கொஞ்சம்
சின்னக் குருவி தானே?
சிந்தையைத் தீட்டிட வாரீர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *