சிப்பியென இமை மூடி
செவ்விதழில் முகை சூடி
சிகை வருடும் பிறை நுதலில்
சிந்தை கவர் கண்ணே
நான் சூல்கொண்ட நன்முத்தே
என் இதழ்சூடும் புன்னகையே
செப்புகிறேன் என் வாக்கை
சிந்தையில் சேர் கண்ணே
மூவிரண்டு வயதில் நீ
முன்னூறு கதை படிப்பாய்
நாலிரண்டு வயதில் நீ
நன்மை பல கற்றிடுவாய்
ஏழிரண்டு வயதில் நீ
ஏற்றங்கள் பெற்றிடுவாய்
எண்ணிரண்டு வயதில் நீ
எழில் நிலவை எட்டிடுவாய்
கண்ணிரண்டு துணைகொண்டு
கசடற நீ உயர்ந்திடுவாய்
எம்மிரண்டு உயிர் கொண்டு
உம்மிரண்டு உயிர் காப்போம்
சிந்திய வார்த்தை யாவும்
சிந்தையிலே உதித்ததல்ல
சத்தியத்தில் ஈன்ற வாக்கு
சத்தியமடி என் கண்ணே
சலனமற்ற துயிலுனக்கு
சலசலக்கும் நெஞ்செனக்கு
சத்தியம் உரைத்துவிட்டேன்
சலனமின்றி காத்திடுவேன்.
வலைச்சரம் படிக்கவந்தவன்
உங்களது பதிவினைக் கண்டு வந்தேன்.
உலகுக்கு உண்மை சொல்லும் வார்த்தைகள் இவை.
உணர்வுகள் மேலிட பாடுகிறேன்.
யூ ட்யூபில் போடுகிறேன்.
உங்கள் அனுமதி இல்லையேல் அழித்துவிடுவேன்.
வணிக நோக்கு எதுவும் இல்லை.
வலையில் காணும் நற்கவிதைகளை மெட்டு இட்டு பாடுவது
இந்தக்கிழவனின் பொழுது போக்கு.
அவ்வளவே.
வாழ்த்துக்கள்.
ஆசிகள்.
சுப்பு தாத்தா.
http://www.youtube.com/watch?v=K-fltxgd2J8
Listen to your song by cutting and pasting the above URL
I am also putting this in my blog
subbu thatha.
அன்புத் தோழி வணக்கம்!
சுப்புத்தாத்தாவின் வலைப்பூவில் உங்கள் பாடல் கேட்டு இங்கு வந்தேன்.
அருமை. மிக அழகாக சொற்களைச் சுழற்றிப்போட்டு கவிதை அமைத்திருக்கின்றீர்கள்.
குழந்தை அல்ல யார்கேட்டலும் சொக்கவைக்கும் வரிகள்.
உங்கள் வரிகளுக்கு சுப்புத்தாத்தா மகுடம் சூட்டியுள்ளார்.
அதுவும் மிக அருமை!
வாழ்த்துக்கள் தோழி!
Thank you very much for the nice words
Geetha